search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் நானா படோல்
    X
    சபாநாயகர் நானா படோல்

    மகாராஷ்டிரா சபாநாயகர் நானா படோலேவுக்கு கொரோனா தொற்று உறுதி

    மகாராஷ்டிராவில் சட்டசபை 7-ம் தேதி கூடும் நிலையில் சபாநாயகர் நானா படோலேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    மும்பை:

    நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8½ லட்சத்தை தாண்டி உள்ளது.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஏற்கனவே திட்டமிட்டு கொரோனா பரவல் காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, கடந்த மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும் ஒரு வாரமே நடந்தது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. 2 நாட்கள் மட்டுமே இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை வரலாற்றில் மிககுறுகிய காலம் நடக்க உள்ள கூட்டத்தொடர் இதுவாகும்.

    முதல் நாள் கூட்டத்தில் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி சிவாஜிராவ் நிலங்கேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    2 நாட்கள் நடக்கும் கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் துணை மானிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.

    சட்டசபை தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் சபாநாயகர் நானா படோலே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக எனது தொகுதி உள்பட விதர்பா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு சென்று இருந்தேன். பணி நிமித்தமாகவும் பல இடங்களுக்கு சென்றேன். இதற்கிடையே எனக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து செய்யப்பட்ட சோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் நான் நன்றாக உள்ளேன். யாரும் கவலைப்பட வேண்டாம். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளவும். நான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து மக்கள் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×