search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சாம்பிட் பத்ரா
    X
    பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சாம்பிட் பத்ரா

    ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் பகிரங்க கொள்ளை - பா.ஜனதா குற்றச்சாட்டு

    சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் பகிரங்க கொள்ளை நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளை, சீனாவிடம் நன்கொடை பெற்றதாகவும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து பணம் பெற்றதாகவும் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சாம்பிட் பத்ரா, ராஜீவ்காந்தி அறக்கட்டளை மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு கிடைத்த நன்கொடைகள் தற்செயலானது அல்ல, அது ஒரு சதி என்பது தற்போது நடந்து வரும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

    பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் மகன் ரோகன் சோக்‌ஷிக்கு சொந்தமான நவிராஜ் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற போலி நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

    அந்த நிறுவனத்தில் மெகுல் சோக்‌ஷியும் ஒரு இயக்குனர் ஆவார். கடந்த 2012-2013, 2013-2014 நிதியாண்டுகளில் இந்த நிறுவனம் எந்த வர்த்தக செயல்பாடுகளையும் கணக்கில் காட்டவில்லை. சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கை சந்தித்து வருகிறது.

    நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி, ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் நன்கொடை கொடுத்துள்ளது. இது, அவ்வங்கியின் நிறுவனர் ராணா கபூரின் சொந்த பணம் அல்ல. யெஸ் வங்கியில் இருந்து திருப்பி விடப்பட்டது ஆகும்.

    ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் வழக்கை சந்தித்து வரும் ஜிக்னே‌‌ஷ் ‌ஷாவின் நிறுவனம் 2011-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி ரூ.50 லட்சம் நன்கொடை கொடுத்தது. ஊழல் பணத்தில் பெரும்பகுதியை அளித்தது.

    இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு 2011-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி ரூ.50 லட்சம் நன்கொடை அளித்தது.

    டி.சி.பி. வங்கி கணக்கில் இருந்து தரப்பட்ட இந்த நன்கொடை, பின்னர் சர்ச்சை எழுந்ததால், வேறொரு வங்கிக்கணக்குக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ரூ.700 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய ஜி.வி.கே. விமான நிலைய அறக்கட்டளை, கடந்த 2010 முதல் 2017-ம் ஆண்டுவரை 47 மோட்டார் வாகனங்களை ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு அளித்தது.

    இவையெல்லாம் ராஜீவ்காந்தி அறக்கட்டளை மூலம் எப்படி பகிரங்க கொள்ளை நடந்தது என்பதை காட்டுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×