search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கடத்தல்
    X
    பஸ் கடத்தல்

    உத்தரபிரதேசத்தில் 34 பயணிகளுடன் தனியார் பஸ் கடத்தல்

    உத்தரபிரதேசத்தில் 34 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் கடத்தப்பட்டது.
    ஆக்ரா:

    உத்தரபிரதேசத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் ஒன்று, நிதி நிறுவன மீட்பு ஏஜெண்டுகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த அந்த பஸ்சின் உரிமையாளர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

    பஸ் வாங்க கடன் கொடுத்திருந்த நிதி நிறுவனத்துக்கு அவர் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, உடனடியாக பஸ்சை பறிமுதல் செய்ய நிதி நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அரியானா மாநிலம் குர்காவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பஸ்சை 2 கார்களில் வந்த நிதிநிறுவன மீட்பு ஏஜெண்டுகள் 8 பேர் மடக்கினர். டிரைவரை கீழே இறங்கும்படி கூறினார்கள்.

    பஸ்சில் 34 பயணிகள் இருந்தனர். எனவே பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் ஒட்டிச் சென்றார். இருந்தாலும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் விடவில்லை. நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சென்று கொண்டிருந்த போது, மீண்டும் பஸ்சை மடக்கி நிறுத்தினர்.

    பஸ்சில் ஏறி டிரைவர் மற்றும் கண்டக்டரை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார்கள். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களிடம் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். சத்தம் போடக் கூடாது என மிரட்டினர். பின்னர் அவர்களில் 4 பேர் பஸ்சை எடுத்துக்கொண்டு டெல்லி- கான்பூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று விட்டனர்.

    பஸ் டிரைவரையும், கண்டக்டரையும் தாங்கள் வந்த காரில் ஏற்றிச் சென்ற அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்கள் குபேர்பூர் பகுதியில் நடுரோட்டில் இறக்கிச் சென்று விட்டனர்.

    செய்வதறியாது திகைத்தை அவர்கள் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பயணிகளுடன் கடத்தப்பட்ட பஸ்சை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கடத்தப்பட்ட பஸ்சில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாக உத்தரபிரதேச உள்துறை கூடுதல் செயலாளர் அவானிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் பஸ் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? அது எங்கு இருக்கிறது என்ற விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.

    இந்த பஸ் கடத்தல் சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.
    Next Story
    ×