search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடகை வீடு
    X
    வாடகை வீடு

    கொரோனா பரவல் எதிரொலி - பெங்களூருவில் 2 லட்சம் வாடகை வீடுகள் காலியானது

    கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடகை வீடுகள் காலியாகி உள்ளன.
    பெங்களூரு:

    கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடகை வீடுகள் காலியாகி உள்ளன. இதனால் அந்த வீடுகளின் முன்பு வீடு வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு பலகைகள் தொங்குகின்றன.

    கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பீதி காரணமாக பெங்களூருவில் வசித்து வந்த வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு, ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதே நேரத்தில் பெங்களூருவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு படுக்கை வசதி கொண்ட வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்த 10 சதவீத நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் காலி செய்துவிட்டு உரிமையாளர்களிடம் இருந்து டெபாசிட் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு வீடுகளை காலி செய்துள்ளனர். இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு விடப்பட்டு இருந்த பெரும்பாலான வீடுகள் காலியாகி உள்ளன.

    பெங்களூருவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 4 மாதங்களில் வாடகை வீடுகளில் வசித்து வந்தவர்களில் 2 லட்சம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் கொடுத்திருந்த டெபாசிட் பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு வீடுகளை காலி செய்துள்ளனர். இதன் மூலமாக பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்பட பிற வாடகை வீடுகள் என ஒட்டு மொத்தமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வாடகைக்கு வராமல் காலியாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் 50 சதவீதம் ஒற்றை படுக்கை அறையை கொண்ட வீடுகளாகும். காலியான பெரும்பாலான வீடுகள் முன்பாக வீடு வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்பு பலகைகள் உள்ளன.

    ஆனால் காலியான வாடகை வீடுகளில் புதிதாக குடியேற யாரும் முன்வரவில்லை என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் வரை பெரும்பாலான வீடுகள் காலியாக இருக்கவே வாய்ப்புள்ளதாகவும், அடுத்த ஆண்டு(2021) தொடக்கத்தில் பெங்களூருவில் காலியாக உள்ள வாடகை வீடுகள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×