search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதாப் சிங் பஜ்வா, ஷாம்செர் சிங் துல்லோ
    X
    பிரதாப் சிங் பஜ்வா, ஷாம்செர் சிங் துல்லோ

    பஞ்சாப் விஷ சாராயம் விவகாரம்: சொந்த அரசையே விமர்சித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் கவர்னருக்கு கடிதம்

    விஷ சாராயம் குடித்து 104 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சொந்த அரசையே விமர்சனம் செய்து இரண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் கவர்னருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் விஷ சாராயம் குடித்த பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் நிர்வாக இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. அரசு விஷ சாராய மாஃபியாக்களுடன் தொடர்பு வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் இரு எம்.பி.க்கள் கவர்னருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர்.

    ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்கட்சி பூசலால் காஙகிரஸ் தடுமாறிய நிலையில், தற்போது பஞ்சாபிலும் அந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.

    பிரதாப் சிங் பஜ்வா, ஷாம்செர் சிங் துல்லோ கவர்னர் விபி சிங் பத்னோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘லாக்டவுன் காலத்தில் மதுபானம் கடத்தல் மூலமாக மாநில அரசுக்கு சுமார் 2,700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் விஷ சாராயம் தயாரிப்பு காளான் போன்று தோன்றியுள்ளது.

    முக்கியமாக ராஜ்புரா மற்றும் கனார் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டும் பாட்டியாலாவில் உள்ள இடங்களாகும். இந்த இடங்கள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் சொந்த மாவட்டமாகும். மேலும், அவரது மனைவியின் எம்.பி. தொகுதிக்குள் வருகிறது.

    அரசு இயந்திரங்கள் சரியான முறையில் செயல்பட்டால் விஷ சாராயம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு துறையை கையில் வைத்துள்ள முதல்வர்தான் கலால்துறையை கையாண்டு வருகிறார்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

    எம்.பி.க்கள் இருவர் சொந்த கட்சியின் முதலமைச்சருக்கு எதிராக கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×