search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் பைலட்
    X
    சச்சின் பைலட்

    எங்களை யாரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கவில்லை- சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம்

    ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை பாஜக பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.
    சண்டிகர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. அதிருப்தி அணியை உருவாக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 

    தொடர்ந்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

    சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தனித்து செயல்பட்டு வரும் நிலையில், முதல்வர் அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

    ‘ஆளுநருக்கு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுப்பதால், சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான உத்தரவை வழங்கவில்லை. ஆளுநர் எந்த அழுத்தத்திற்கும் ஆளாக மாட்டார், அவர் ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நம்புகிறேன். சட்டமன்றக் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என்று நம்புகிறோம். அவர் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, அடுத்த நடவடிக்கைகளை நாங்கள் தீர்மானிப்போம்’ என்றும் கெலாட் கூறினார்.

    காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக பிணைக்கைதிகளாக அரியானாவில் பிடித்து வைத்திருப்பதாகவும் கெலாட் குற்றம்சாட்டினார்.

    ஆனால், இந்த சுற்றச்சாட்டை சச்சின் பைலட் தரப்பினர் மறுத்துள்ளனர். இதுபற்றி பைலட் ஆதரவாளரான எம்எல்ஏ சுரேஷ் மோடி கூறுகையில், ‘எங்களை பாஜக பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக முதல்வர் அசோக் கெலாட் கூறுகிறார். அப்படி எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் சொந்த விருப்பப்படி தான் இங்கே இருக்கிறோம்’ என்றார்.

    வேதப்பிரகாஷ் சோலங்கி, முரளி லால் மீனா ஆகிய எம்எல்ஏக்களும் இதே கருத்தை கூறி உள்ளனர்.

    இதற்கிடையே பாஜகவைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநிலத் தலைவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×