search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 எம்எல்ஏக்கள்
    X
    குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 எம்எல்ஏக்கள்

    11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக திமுக தொடர்ந்த புதிய வழக்கில் சபாநாயகர் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

    இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர். இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். 

    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கைப் பொருத்தவரை அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுக-வுக்கு எதிராக செயல்படவில்லை என்பதால் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் எழவில்லை, என முதல்வர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×