search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெகன்மோகன் ரெட்டி
    X
    ஜெகன்மோகன் ரெட்டி

    கொரோனாவால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற அவலம் - ஜெகன்மோகன் ரெட்டி வேதனை

    கொரோனாவால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற செயலுக்கு அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
    விஜயவாடா:

    உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் புகுந்து உயிரை காவு வாங்குகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொரோனா வாய்ப்பு இருப்பதாக கருதி பல இடங்களில் உடல்களை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கும், புதைப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் சில வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிக்கும் சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    அந்த வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலசா நகரில் கொரோனா வைரசால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற அவலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை புதைக்க யாரும் முன்வராத நிலையில், நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

    பொக்லைன் எந்திரத்தில் எடுத்துச் சென்ற காட்சி


    இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா நோயால் இறந்தவரின் உடலை பொக்லைன் எந்திரத்தில் கொண்டு சென்ற சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலசா நகரில் சிலர் மனிதாபிமானமற்றவர்களாக இருப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பொறுப்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தகவல் வந்த உடனேயே சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பலசா நகராட்சி கமிஷனர் நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜீவ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் நிவாஸ் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×