search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி
    X
    மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி

    மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதலாக மாறும் கொரோனா பிரச்சினை

    மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கும், மேற்கு வங்காள அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்களையும் கடுமையாக விமர்சிப்பவர். இதனால் மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது உண்டு.

    மேற்கு வங்காள மாநிலம் ஒரு காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோட்டையாக விளங்கியது. பின்னர் அங்கு மம்தா பானர்ஜியின் செல்வாக்கு ஓங்கியதால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாரதிய கணிசமான இடங்களை கைப்பற்றியது. அங்கு பாரதிய ஜனதா வளர்ந்து வருவது மம்தா பானர்ஜிக்கு பெரும் சவாலாக உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ள பாரதீய ஜனதா அதற்கான வியூகங்களை வகித்து வருகிறது.

    இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசுக்கும், மேற்கு வங்காள அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஊரடங்கை மத்திய அரசு தாமதமாக அமல்படுத்தியதாக குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, விமான நிலையங்களை முன்கூட்டியே மூடி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    அதற்கு, மேற்கு வங்காளத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மம்தா பானர்ஜி அரசு தவறி விட்டதாகவும், போதிய அளவு சோதனைகளை நடத்தவில்லை என்றும் கூறிய மத்திய அரசு, அங்குள்ள சில மாவட்டங்களில் ஆய்வு நடத்த நிபுணர்கள் குழுவை அனுப்பி வைத்தது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

    அத்துடன் பிற மாநிலங்களில் உள்ள மேற்கு வங்காள தொழிலாளர்களை திரும்ப அழைக்கும் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஒத்துழைக்க மறுப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமத்திய குற்றச்சாட்டையும் அந்த கட்சி மறுத்தது.

    கடந்த 11-ந் தேதி காணொலி காட்சி மூலம் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவேண்டும் என்றார்.

    பின்னர் இந்த கூட்டம் பற்றி கருத்து தெரிவித்த அவர், மேற்கு வங்காளத்துக்கு சட்ட ரீதியாக அளிக்கவேண்டிய நிதி பாக்கியை கூட மத்திய அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

    மேற்கு வங்காளம் அடுத்த ஆண்டில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், கொரோனா பிரச்சினை தொடர்பாக மம்தா பானர்ஜி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு அரசியல் மோதலாக உருவெடுத்து இருக்கிறது. இது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×