search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    ஆன்லைனில் மது விற்பனை- மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    40 நாட்களுக்கும் மேலாக மது கிடைக்காமல் தவித்து வந்த குடிமகன்கள், இப்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், உற்சாகம் அடைந்துள்ளனர். மதுக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பல்வேறு கடைகளில் கொரோனா குறித்த அச்சம் எதுவும் இன்றி, குடிமகன்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. எனவே மதுக்கடைகள் கொரோனா பரப்பும் ஹாட்ஸ்பாட்டாக மாறும் அபாயம் உள்ளது.

    மது வாங்க வரிசையில் நிற்கும் குடிமகன்கள்

    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுக்கடைகளில் சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும், மது விற்பனை மற்றும் விதிமுறைகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனுதாரர் கூறியிருந்தார்.

    இந்த மனுவானது, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு காணொலி வாயிலாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மது விற்பனை தொடர்பாக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி அசோக் பூஷன் தெரிவித்தார்.

    ஆனால், சமூக விலகல் நடைமுறைகளை பின்பற்றும் வகையில், மறைமுக விற்பனை அல்லது ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்து ஹோம் டெலிவரி செய்வது குறித்து அனைத்து மாநில அரசுகளும் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மனுதாரரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதேபோன்று தமிழகத்தில் மதுபானக் கடை திறப்புக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×