search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட பீகார் தொழிலாளர்களையும், தேசிய கீதம் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணாவையும் காணலாம்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட பீகார் தொழிலாளர்களையும், தேசிய கீதம் பாடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணாவையும் காணலாம்

    சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்: தொழிலாளர்களை தேசிய கீதம் பாடி கலைத்த இன்ஸ்பெக்டர்

    சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம் நடத்திய பீகார் தொழிலாளர்களை தேசிய கீதம் பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுக்குள் குவிந்த வண்ணம் உள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புலம்பெயர்ந்த வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்களை கர்நாடக அரசு சொந்த செலவில் அரசு பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. அதே வேளையில் வெளிமாநில தொழிலாளர்களும் 3 ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஆனால் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள், கட்டிடப் பணிகள் தொடர கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் தான் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் ஊர் திரும்பினால் மாநில பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் பின்னடைவை சந்திக்கும் என கர்நாடக அரசு கருதியது. இதனால் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப ஏற்பாடு செய்த ரெயில்களை இயக்க வேண்டாம் என கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது.

    இதனால் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பெங்களூருவில் தாங்கள் தங்கியிருந்த இடங்களில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுபோல் பாதிக்கப்பட்ட பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே மாடவர் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீதியில் இறங்கி திடீரென்று போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி அவர்கள் பிடிவாதம் செய்தனர்.

    இதுபற்றி அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் படுத்தினர். அப்போது சில தொழிலாளர்கள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். எங்களை சொந்த ஊருக்குள் அனுப்புங்கள் என கோஷங்களை எழுப்பினர். மேலும் தள்ளுமுள்ளும் அங்கு ஏற்பட்டது. நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த மாதநாயக்கனஹள்ளி இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா உடனே போலீஸ் வாகன ஒலிபெருக்கி மூலம் தேசிய கீதத்தை பாடினார்.

    உடனே போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபடாமல் தேசிய கீதம் பாடி முடிக்கும் வரை அசையாமல் அதே இடத்தில் நின்றனர். பின்னர் அவர்களை இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா, இதுகுறித்து கலெக்டருடன் பேசி விரைவில் உரிய முடிவு எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதே வேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை தேசிய கீதம் பாடி கலைத்த இன்ஸ்பெக்டர் சத்யநாராயணாவை நெட்டிசன்கள் பாராட்டு மழையில் நனைய வைத்து வருகிறார்கள்.
    Next Story
    ×