search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரகாஷ் ஜவடேகர்
    X
    பிரகாஷ் ஜவடேகர்

    சுகாதாரத் துறை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை - மத்திய அரசு அதிரடி

    கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.
    புதுடெல்லி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதற்கிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்கினால் சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருகிறது. 

    இதுதொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார துறை பணியாளர்களை தாக்கினால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. மேலும் அவர்கள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். 

    மருத்துவ பணியாளர்களின் வாகனமோ, கிளினிக்குக்ளோ சேதப்படுத்தப்பட்டால், சந்தை மதிப்பை விட இரு மடங்கு தொகை இழப்பீடாக அளிக்கப்படும். 

    இதுதொடர்பான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். 
    Next Story
    ×