search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    காபூல் குருத்வாரா தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் நிறுத்தியுள்ளனர்.  

    அதேசமயம் அரசுப் படைகளை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் மீதான தாக்குதலுக்கும் தலிபான்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
     
    இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் குருத்வாராவில் இருந்த 27 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள் தவித்து வரும் நிலையில், வழிபாட்டுத் தலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காபூலில் உள்ள குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காபூலில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×