search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூமி
    X
    பூமி

    மீண்டும் வைரலாகும் பாரம்பரியம் - இந்த தேதியில் உலகம் அழிந்துவிடுமா?

    இந்த தேதியில் நிச்சயம் உலகம் அழிந்து விடும் எனும் தலைப்பில் சிறுகதை அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    உலக மக்களை கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பாதித்து இதுவரை 4600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் சுமார் 1.2 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கொரோனா அச்சத்தில் மக்கள் சிக்கி தவிக்கும் நிலையில், உலகம் அழியப்போவதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வைரல் தகவல்களின் படி ஏப்ரல் 29-ம் தேதி உலகம் அழிந்து விடும் என கூறப்பட்டுள்ளது. இமய மலை அளவில் உள்ள கோள் ஒன்று பூமி மீது மோத இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நம்பவைக்கும் விதமாக சிறு வீடியோ ஒன்றும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    சிறு வீடியோவில் பூமியை நோக்கி கோள் ஒன்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. மேலும் வீடியோ உண்மையானது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோவில் செய்தி நிறுவனம் ஒன்றின் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    பூமியை நோக்கி வரும் கோள் பற்றி இணையத்தில் தேடியபோது, 52768 என அழைக்கப்படும் கோள் ஒன்று ஏப்ரல் 29, 2020 அன்று பூமியை கடக்க இருப்பதாக நாசா வெளியிட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் பூமியை அழிக்கும் கோள் ஒன்றை நாசா கண்டறிந்து இருக்கிறது எனும் தலைப்பில் செய்தி தொகுப்பு ஒன்றும் இணையத்தில் கிடைத்தது. இதுவே இணைய வாசிகளை பரபரப்பில் ஆழ்த்திய வைரல் பதிவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. 

    எனினும், பூமியை நோக்கி வரும் கோளினை நாசா கூர்ந்து ஆய்வு செய்து வருகிறது. 1998-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள் பூமியை நோக்கி எத்தனை வேகத்தில் வருகிறது என்ற விவரங்களையும் நாசா கவனித்து வருவதோடு, அவற்றை வலைதளத்திலும் பதிவேற்றம் செய்து வருகிறது.



    பூமியை நோக்கி வரும் கோள் ஏப்ரல் 29-ம் தேதி பாதுகாப்பாக பூமியை கடக்கும் என்றும், இது பற்றி வெளியாகும் எச்சரிக்கை தகவல்களில் துளியும் உண்மையில்லை என நாசாவின் CNEOS ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 29-ம் தேதி உலகம் அழிந்து விடும் என கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகி விட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×