search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது

    டெல்லி வன்முறைக்கு பின் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2-வதுகட்ட அமர்வு நாளை தொடங்குகிறது.

    புதுடெல்ல:

    பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.

    அதன்படி பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்கட்ட அமர்வு 11-ந்தேதி நிறைவு பெற்றது.

    இந்தநிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2-வதுகட்ட அமர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடை பெறுகிறது.

    வடகிழக்கு டெல்லியில் நடந்த பயங்கர கலவரத்துக்கு பிறகு பாராளுமன்றம் கூடுகிறது. டெல்லி கலவரத்தில் 42 பேர் பலியாகி உள்ளனர்.

    இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவையிலும் டெல்லி கலவர பிரச்சினையை கடுமையாக கிளப்புவார்கள். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு கடும் அமளியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.

    அதோடு அவர் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து அமித்ஷாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.

    நாளைய கூட்டத் தொடரில் அமித் ஷாவை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும். இதே போல பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும்.

    2-வது கட்ட அமர்வில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளிக்க உள்ளார். மொத்தம் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்திய பயணம் குறித்து வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்றம் நாளை கூடுவதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×