search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ரயில்வே
    X
    இந்திய ரயில்வே

    முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ரெயில்வேக்கு ரூ.9 ஆயிரம் கோடி வருவாய்

    ரெயில்வேயில் கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ரூ.9 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.
    ஜெய்ப்பூர்:

    ரெயில்வேயில் கடந்த 3 ஆண்டுகளில் (2017 ஜனவரி முதல் 2020 ஜனவரி வரை) பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலமாகவும், காத்திருப்பு (வெயிட்டிங் லிஸ்ட்) டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் விட்டதன் மூலமாகவும் ரெயில்வே துறைக்கு ரூ.9 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.

    இந்த 3 ஆண்டுகளில் 9½ கோடி பேர் காத்திருப்பு பட்டியலில் இருந்தும் டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல் விட்டு உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.4,335 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. அதேபோல், பயண டிக்கெட்டுகளை ரத்து செய்தவர்கள் மூலமாக ரூ.4,684 கோடி கிடைத்து இருக்கிறது.

    இந்த இரண்டு பிரிவுகளிலும் அதிகமான வருவாய் படுக்கை வசதி கொண்ட பெட்டியில் முன்பதிவு செய்தவர்களிடமும், அதைத் தொடர்ந்து 3 அடுக்கு குளிர்சாதன வகுப்பில் பயணம் செய்தவர்களிடம் இருந்தும் வசூல் ஆகி இருக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளில் 74 கோடி பேர் ரெயில் நிலைய கவுண்ட்டரிலும், 145 கோடி பேர் இணையதளம் வாயிலாகவும் டிக்கெட்டுகள் எடுத்து இருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஜித் சுவாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு மேற்கண்ட தகவலை ரெயில்வே துறை அளித்து உள்ளது.

    மேலும், இதுதொடர்பாக அவர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடர்ந்து உள்ளார். அதில், “ரெயில்வே கவுண்ட்டர் மற்றும் இணையதள டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் உள்ள பாகுபாட்டினால் பயணிகளுக்கு தேவையற்ற பணச் செலவும், மனஅழுத்தமும் உண்டாகிறது. எனவே பயணிகள் நலன் கருதி இந்த விதிமுறை பாகுபாட்டை களையவேண்டும். ரெயில்வே துறையும் தேவை இல்லாத வகையில் வருமானம் ஈட்டுவதை தடுக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.
    Next Story
    ×