search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது - அமித்ஷா

    போராட்டங்கள் நடைபெற்றாலும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை மந்திரி அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இன்று பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் பாஜக கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பங்கேற்றார். 

    அதில் அவர் பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை ராமர் கோவிலை கட்ட தங்களால் முடிந்தவரை பல்வேறு வழிமுறைகள் மூலமாக காலத்தை கடத்திவந்தனர். 

    அயோத்தி வழக்கை விசாரிக்க கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது ராமர் கோவில் மீதான காங்கிரஸ் கட்சியின் உண்மையான புரிதலை காட்டுகிறது. 

    உள்துறை மந்திரி அமித்ஷா

    ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வானளாவிய ராமர் கோவில் கட்டும்பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்படும். 

    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவதற்கான ஒரு சட்டம். 

    போராட்டங்கள் நடைபெற்றபோதிலும் குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். 

    எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி என்னுடன் பொதுமேடையில் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா? 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×