search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலைக்கு மதியம் 2 மணிக்கு பிறகே பக்தர்களுக்கு அனுமதி

    பம்பை செல்லும் பக்தர்கள் இன்று பகல் 2 மணிக்கு பிறகே சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி நிலக்கல்லில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக இன்று (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டுவார்.

    அதைத்தொடர்ந்து சபரி மலை கோவில் 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில் கற்பூரம் மூலம் தீ மூட்டப்படும். அதன் பிறகு ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதீர் நம்பூதிரியும், மாளிகை புரத்தம்மன் கோவில் மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று வேறு பூஜைகள் எதுவும் சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறாது. பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

    நாளை (17-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து பூஜை செய்வார். நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது.

    சபரி மலை கோவில் 18 படி

    தொடர்ந்து பகல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து அத்தாள பூஜை நடைபெறும். இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்போது கோவில் நடை திறக்கும் நேரமும், அடைக்கும் நேரமும் மாற்றப்படும்.

    இன்று சபரிமலை கோவில் நடை திறப்பை யொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

    அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களிலேயே பக்தர்கள் செல்லவேண்டும். பம்பை செல்லும் பக்தர்கள் இன்று பகல் 2 மணிக்கு பிறகே சபரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி நிலக்கல்லில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    அதன்பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். ஜனவரி மாதம் 15-ந்தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

    18-ந்தேதி வரை மட்டும் சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும். 20-ந்தேதி காலை 7 மணிக்கு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

    Next Story
    ×