search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிசுக்கு மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் வாழ்த்து தெரிவித்த காட்சி.
    X
    தேவேந்திர பட்னாவிசுக்கு மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் வாழ்த்து தெரிவித்த காட்சி.

    சட்டசபை பாஜக தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு

    சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமையும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
    மும்பை :

    மராட்டியத்தில் சிவசேனா ஆதரவுடன் பாரதீய ஜனதாவை சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மராட்டிய சட்டசபையின் பதவி காலம் வருகிற 9-ந் தேதி முடிவதால், கடந்த 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டபோது, எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.

    மற்றொரு கூட்டணியில் காங்கிரசுக்கு 44 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும் கிடைத்தன. இதர கட்சிகள் சார்பில் 16 பேரும், சுயேச்சைகள் 13 பேரும் வெற்றி பெற்றனர்.

    ஆட்சி அமைக்க 145 இடங்கள் போதும் என்ற நிலையில், 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சியில் சமபங்கு கோரிக்கையை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்தார். அதன்படி முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, மந்திரி பதவிகளை சரிசமமாக பகிர்ந்து கொள்வது என பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே, அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    மும்பை ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரேயின் 29 வயது மகன் ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆட்சியில் சமபங்கு அளிப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இதற்கு, பிப்ரவரி 28-ந் தேதி ஆட்சியில் சமபங்கு குறித்து முதல்-மந்திரி பேசியதாக கூறப்படும் வீடியோவை சிவசேனா வெளியிட்டு பதிலடி கொடுத்தது. மேலும் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாரதீய ஜனதாவுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை சிவசேனா திடீரென ரத்து செய்தது.

    இதனால் மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் உள்ள சட்டமன்ற கட்டிட அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டம் பாரதீய ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிப்பதால், அமித்ஷா தனது மும்பை பயணத்தை ரத்து செய்தார்.

    கட்சியின் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்ட மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் முன்னிலையில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இதில் 49 வயது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக மீண்டும் தேர்வு செய்யும் தீர்மானத்தை மாநில கட்சி தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் முன்மொழிந்தார். இதனை அடுத்து, அவர் சட்டசபை கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு மராட்டியத்தின் பாரம்பரிய தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.

    சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக (முதல்-மந்திரி பதவிக்கு) தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற தனக்கு வாய்ப்பளித்தமைக்காக கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார். இதேபோல சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

    மேலும் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

    மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி ஆட்சிக்காக (பாரதீய ஜனதா, சிவசேனா) மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். எனவே எங்களது கூட்டணி கட்சிகள் விரைவில் ஆட்சி அமைக்கும்.

    மாற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுவது அனைத்தும் பொழுதுபோக்கு தனமானது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலத்தில் எந்த கட்சியும் 75-க்கு அதிக இடங்களில் வெற்றி பெறவில்லை. ஆனால் பாரதீய ஜனதா கடந்த 2014 தேர்தலில் 122 இடங்களிலும், இந்த தேர்தலில் 105 இடங்களிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையே சட்டசபை சிவசேனா தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) மும்பை தாதரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சட்டசபை சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இரு கட்சிகள் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்தபோதிலும், திரைமறைவில் ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் ஒரு சில நாட்களிலேயே இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றும் என்று தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் நேற்று தெரிவித்தார்.

    மாற்று ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவிடம் இருந்து உறுதியான கோரிக்கை எதுவும் வந்தால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் கூறினார்.
    Next Story
    ×