search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்
    X
    திருப்பதியில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்

    திருப்பதியில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் - ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் கோரிக்கை

    திருப்பதியில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.

    திருமலை:

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் திருமலை, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    திருமலை, திருப்பதி ஆகிய இரு நகரங்களும் பவித்ர திருத்தல நகரங்களாக விளங்கி வருகின்றன. திருமலையில் பூரண மதுவிலக்கு உள்ளது.

    ஆனால் திருப்பதி நகரில் மதுவிலக்கு இல்லை. திருப்பதியிலும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் அரசு இதுகுறித்து முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

    பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களை நிரந்தரமாக தடை செய்யப்பட உள்ளது.

    திருப்பதியில் கருடா மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதை மாற்றி வடிவமைத்துக்கட்ட மறு டெண்டர் விடப்பட உள்ளது. இதனால் திருப்பதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.

    ஐதராபாத்தில் நிம்ஸ் ஆஸ்பத்திரி எப்படி செயல்படுகிறதோ அதேபோல் திருப்பதியில் உள்ள ஸ்விம்ஸ் ஆஸ்பத்திரியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

     

    திருப்பதி கோவில்

    தேவஸ்தான வனத்துறையில் வேலை பார்த்து வரும் 162 ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.

    அரசு அனுமதி அளித்ததும் அவர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். வனத்துறையில் வேலை பார்க்கும் 200 பேருக்கு குறைந்தப்பட்ச ஊதியம் வழங்கப்பட உள்ளது.

    தேவஸ்தான கல்யாணக் கட்டாவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் 246 பேருக்கும், தேவஸ்தான கல்வித்துறையில் வேலை பார்க்கும் 382 ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் குறைந்தப் பட்ச ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் திருமலையில் நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் வேலை பார்த்த தேவஸ்தான நிரந்தர ஊழியர்களுக்கு பரிசாக ரூ.14 ஆயிரமும், ஒப்பந்த மற்றம் தினக்கூலி ஊழியர்களுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 850 பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அலிபிரியில் பக்தர்கள் ஓய்வெடுக்க 200 ஏக்கர் நிலத்தில் மண்டபம், கலை நிகழ்ச்சிகளை நடத்த கலையரங்கம் ஆகியவை கட்டப்பட உள்ளது. அதில் குழந்தைகளுக்கு கிராபிக்ஸ் படம் மற்றும் யோகா, லேசர் ஷோ, ஸ்ரீவாரி வைபவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அரசு உத்தரவுபடி ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பாலாஜி நீர்த்தேக்கத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் கொண்டு வந்து திருமலையில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

    தேவஸ்தானத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களை மீண்டும் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

    ஆந்திராவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் வசிக்கும் கிராமங்களில் தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் ஸ்ரீவாணி டிரஸ்ட் மூலம் வெங்கடாசலபதி கோவில் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×