search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்சேவையை உள்துறை மந்திரி அமித்‌ஷா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி
    X
    ரெயில்சேவையை உள்துறை மந்திரி அமித்‌ஷா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி

    டெல்லி - கா‌‌ஷ்மீர் இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சேவையை அமித்‌ஷா தொடங்கி வைத்தார்

    டெல்லி, கா‌‌ஷ்மீர் இடையேயான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை உள்துறை மந்திரி அமித்‌ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து, கா‌‌ஷ்மீர் மாநிலம், காத்ராவுக்கு ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை அறிவிக்கப்பட்டது. காத்ராவில் உள்ள புகழ்பெற்ற வை‌‌ஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக இந்த ரெயில் விடப்படுகிறது.

    இந்த ‘வந்தே பாரத்’ ரெயில் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் கட்டமைக்கப்பட்டது. இதன் 16 பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். டெல்லியில் இருந்து காத்ராவுக்கு வழக்கமாக 12 மணி நேரம் பயண நேரம் ஆகும். ஆனால் இந்த ரெயிலில் பயண நேரம் 8 மணி நேரம்தான் என்பது முக்கிய அம்சம்.

    இந்த ரெயிலில் ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை அழிப்பதற்கான நவீன எந்திரங்கள் உண்டு.

    ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில்

    ‘டிரெயின் 18’ என அழைக்கப்படும் இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து பிற 6 நாட்களும் இயக்கப்படும். டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு காத்ரா போய்ச்சேரும். வழியில் அம்பாலா கண்டோன்மெண்ட், லூதியானா, ஜம்முதாவி ஆகிய இடங்களில் தலா 2 நிமிடம் நின்று செல்லும். எதிர்மார்க்கத்தில், காத்ராவில் பகல் 3 மணிக்கு புறப்பட்டு, டெல்லிக்கு இரவு 11 மணி வந்தடையும்.

    டெல்லியில் நேற்று நடந்த விழாவில், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில், இந்த ரெயில்சேவையை உள்துறை மந்திரி அமித்‌ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் அமித்‌ஷா பேசும்போது, ‘‘இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ஒரு தடைக்கல்லாக இருந்தது. அது மட்டுமல்ல, கா‌‌ஷ்மீரின் முன்னேற்றத்துக்கும் அது மாபெரும் தடைக்கல்லாக இருந்தது. இந்த சட்டப்பிரிவை நீக்கிய நிலையில் கா‌‌ஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் நாங்கள் முற்றிலும் வெற்றி பெறுவோம்’’ என கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘அடுத்த 10 ஆண்டுகளுக்குள், நாட்டின் வளர்ச்சி பெற்ற பிராந்தியங்களில் ஒன்றாக கா‌‌ஷ்மீர் மாறி விடும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையுடன் கா‌‌ஷ்மீர் வளர்ச்சி பயணமும் தொடங்கி இருக்கிறது. இந்த ரெயில், வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், ஆன்மிக சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்’’ என்றும் குறிப்பிட்டார்.

    ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை வரவேற்று பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், ‘‘ஜம்மு சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும், வை‌‌ஷ்ணவி தேவி பக்தர்களுக்கும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நவராத்திரி பரிசு ஆகும். இந்த ரெயில் டெல்லி, காத்ரா இணைப்பையும், ஆன்மிக சுற்றுலாவையும் மேம்படுத்தும்’’ என கூறி உள்ளார்.

    Next Story
    ×