search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்
    X
    சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்

    மும்பை, தானேயில் ஒரேநாளில் 23 செ.மீட்டர் மழை - ரெட் அலர்ட்

    மும்பையில் அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல்வேறு இடங்களில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் மூழ்கின.

    பலத்த மழை காரணமாக பஸ், ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்

    தானே மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு ஒரே நாளில் 23.6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

    அதற்கு அடுத்தபடியாக கல்யானில் 23.1 செ.மீட்டரும், அபேர்நாத்தில் 22 செ.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. மும்பையில் வரலாறு காணாத அளவில் கடந்த 2015-ம் ஆண்டு மழை பெய்தது. அதை நெருங்கும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது.

    தானேவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் பல இடங்களில் சிக்கி தவித்தனர். இதில் 132 பேரை இந்திய விமானப் படையினர் மீட்டனர்.

    இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் இன்றும் அதி தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மிக மிக கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மும்பை வாசிகளை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம் மும்பை நகரம் வெள்ளத்தில் தொடர்ந்து சிக்கி தவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×