search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

    ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு சுப்ரீம் கோர்ட் புதிய அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். அந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்குகளில் சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல், தங்க தமிழ்ச்செல்வன் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், முகுல் ரோத்தகி, குரு கிருஷ்ண குமார், வக்கீல்கள் கவுதம் குமார், பாலாஜி சீனிவாசன், சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மணிந்தர் சிங் ஆகியோர் தங்கள் வாதங்களை முடித்துள்ளனர்.

    பன்னீர்செல்வம்

    இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதி ஏ.கே.சிக்ரி கடந்த மார்ச் 7-ந் தேதி பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி நீதிபதி ஏ.கே.சிக்ரி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதன்படி இவ்வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் ஆகியோரை கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரிக்கிறது.

    இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் ஆஜராகி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேருக்கு சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி அனுப்பிய நோட்டீசுக்கு எதிரான வழக்கை நாளை (இன்று) விசாரிக்க உத்தரவிடுமாறு முறையிட்டார். இவ்வழக்கும் இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் பாப்டே, கவாய் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×