search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் வழக்கில் மேல்முறையீடு இல்லை- தேவசம் போர்டு அறிவிப்பு
    X

    சபரிமலையில் வழக்கில் மேல்முறையீடு இல்லை- தேவசம் போர்டு அறிவிப்பு

    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #TravancoreDevaswomBoard
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். திருவனந்தபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். 

    இக்கூட்டத்தின் முடிவில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் நிருபர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவாங்கூர் தேவசம் போர்டு சீராய்வு மனு செய்யாது என தெரிவித்தார். 

    இதேபோல் கேரள அரசு சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது. #SabarimalaVerdict #TravancoreDevaswomBoard
    Next Story
    ×