search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabarimala verdict"

    சபரிமலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வாதம் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதேசமயம் தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. 

    இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரச்சூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சீராய்வு மனுக்கள் மற்றும் ரிட் மனுக்கள் என 60க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். நாயர் சேவா சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மோகன் கே.பராசரன் மத நம்பிக்கை காரணமாகவே சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியில்லை என்றும், தீண்டாமையால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் சபரிமலைக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.

    ஆனால், வெறும் தீண்டாமை விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் நீதிபதி நாரிமன் விளக்கம் அளித்தார்.

    அதன்பின்னர் பாரம்பரிய மரபுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும், அந்தந்த சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது. அதேசமயம், கேரள தேவசம் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக வாதாடினார்.

    இவ்வாறு காரசாரமாக நடைபெற்ற வாதம் பிற்பகல் நிறைவடைந்தது. அனைத்து  தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தேவைப்பட்டால், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை ஆய்வு செய்த பிறகே புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. #SabarimalaReviewPetitions #SC
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மற்றும் ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. நீதிபதி அறையில் விசாரணை நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த புதிய மனுக்களையும், சீராய்வு மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மறுஆய்வு மனுக்களை பரிசீலனை செய்து முடிவு செய்தபிறகு புதிய ரிட் மனுக்களை விசாரிப்பதாக கூறினர்.

    சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டால், புதிய மனுக்களையும் அவற்றுடன் சேர்த்து விசாரிக்கும். ஆனால், சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், புதிய மனுக்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும். #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC
    சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SabarimalaVerdict #SabarimalaIssue
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது.

    அப்போது அய்யப்பனை தரிசிப்பதற்காக சென்றிருந்த தடை செய்யப்பட்ட வயது பெண்களை, நிலக்கல், பம்பை, சன்னிதானம் போன்ற பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பி சென்றனர்.

    இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தற்போது மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சபரிமலை தந்திரிகளின் தாழமோன் குடும்பத்தை சேர்ந்தவரும், அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை தடுப்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டார். அதாவது, சபரிமலையில் தடை செய்யப்பட்ட வயது பெண்கள் யாராவது நுழைந்தால், கோவிலை மூடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் சிலர் அங்கே ரத்தம் சிந்துவார்கள் என தெரிவித்தார்.



    கத்தியால் தங்களை தாங்களே காயப்படுத்தி ரத்தம் சிந்துவதற்கு அய்யப்ப பக்தர்கள் 20 பேர் தயாராக இருப்பதாக கூறிய ராகுல் ஈஸ்வர், இவ்வாறு கோவிலில் ரத்தம் சிந்தப்படுவதால் பரிகார பூஜைகளுக்காக 3 நாட்கள் மூடப்படும் என்றும் தெரிவித்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக ராகுல் ஈஸ்வர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கொச்சியில் வைத்து ராகுல் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர். ராகுல் ஈஸ்வருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் #SabarimalaVerdict #SabarimalaIssue
    சபரிமலை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதுடன், ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களையும் தடுத்து நிறுத்தினர்.



    மேலும், சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, செவ்வாய்க்கிழமை (இன்று) முடிவு செய்வதாக தெரிவித்தது.

    அதன்படி, சபரிமலை விவகாரம் தொடர்பாக மனுக்களை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீது நவம்பர் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக 19 மறு ஆய்வு மனுக்களும், சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட உள்ளன. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SupremeCourt
    சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராடிய நிலையில், கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதன் மூலம், போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #Sabarimala #DevaswomBoard #SabarimalaVerdict #ReviewPetition
    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில், தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaProtests
    புதுடெல்லி:

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் இதுநாள் வரை இருந்த பாரம்பரிய நடைமுறைக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு கேரள மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என கூறிவிட்டது. எனவே, அவசர சட்டமாவது இயற்றி இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டம் என தொடர்ந்து இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை அங்கு செல்ல விடாமல் போராட்டக்குழுவினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பாதைகளில் பதற்றம் நீடிக்கிறது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதையடுத்து தடியடியும் நடத்தப்பட்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பிராமணர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேரள அனைத்து பிராமணர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.



    அதில், சபரிமலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதாகவும், அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் ஏற்கனவே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SabarimalaVerdict #SabarimalaProtests #BrahminAssociation #ReviewPetition
    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. #SabarimalaProtests #SabarimalaVerdict
    பத்தனம்திட்டா:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ன. குறிப்பாக இந்து அமைப்புகளைச் சோந்த பெண்கள் சாரை சாரையாக திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
     
    உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் பல்வேறு பகுதிகளில் பெண்கள், ஐப்பசி மாதம் நடை திறந்ததும் சபரிமலை செல்வதற்காக விரதம் தொடங்கினர். ஆனால் அவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்குழுவினர் எச்சரித்து வந்தனர். இதனால் சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இது ஒருபுறமிருக்க போராட்டக்குழுவினர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அடிவார முகாம்களில் முகாமிட்டு கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தினர்.

    குறிப்பாக நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால், நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து சபரிமலை செல்லும் அனைத்து பாதைகளிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐப்பசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை கோவிலில் இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பெண்கள் அனைவரையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால், இன்று பெண்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை. #SabarimalaProtests #SabarimalaVerdict
    ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உள்பட சுமார் 50 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். #Sabarimalaverdict #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.

    மாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    கேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    நிலக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

    கேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

    பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

    சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.

    சென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.

    சென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.

    நிலக்கல் மற்றும் பம்பையில் கடும் பதட்டமாக இருந்தது. இரு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் ஒருவித பீதி நிலவியது. சபரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டருக்கு முன்பு உள்ள நிலக்கல் பகுதியில் பக்தர்கள் சற்று பயந்தபடியே சென்றனர்.

    வயதான பெண் பக்தர்களை சிலர் தடுத்து நிறுத்தினார்கள். அந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    நிலக்கல் மற்றும் பம்பையில் பழங்குடியின மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்தினம்திட்டாவிலும் போராட்டம் நடந்தது. எருமேலியில் பெண்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    பெண்கள் சபரிமலைக்கு வந்தால் எங்கள் உயிரையும் கொடுத்து தடுப்போம் என்று பழங்குடியின மக்கள் தெரிவித்தனர். பத்தனம்திட்டாவில் ரூபி என்ற பெண் செல்ல முயன்றார். அவரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டம் காரணமாக பெண்கள் பம்பை பக்கமே வரவில்லை.

    நிலக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

    அதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட் டது. மேலும்,  திருவிதாங்கூர் தேவசம் போர்டு  முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் உள்பட  பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

    பந்தளம் பகுதியில் நடந்த போராட்டத்தில் சபரிமலை கோவில் தந்திரி குடும்பத்தினர் பங்கேற்றனர். அவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    பத்தனம்திட்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் போராட்டம் தீவிரம் ஆனதால் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.

    சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வரும் 19-ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தின்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார். #Sabarimalaverdict  #SabarimalaTemple #TravancoreDevaswomBoard
    சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் ஒரு பெண், மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Sabarimalaverdict
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.



    இந்நிலையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவனந்தபுரத்தில் ஒரு பெண் இன்று தற்கொலை செய்ய முயன்றார். இதற்காக அவர் ஒரு மரத்தில் தூக்கு மாட்டினார். அப்போது அவரை போலீசாரும் பொதுமக்களும் காப்பாற்றி அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்பத்தியது.

    இதற்கிடையே  கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. இதில் பந்தளம் ராஜகுடும்பம் திருவாங்கூர் தேவசம் போர்டுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையவில்லை.

    சபரி மலை தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படமாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.  #Sabarimalaverdict 
    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதி அளித்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இன்று பா.ஜ.க.வினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். #SabarimalaVerdict #BJPRally
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

    இதேபோல், கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில், குருவாயூர் கோயில், பத்மநாபசாமி கோயில் உள்ளிட்ட 50 முக்கிய கோயில்களை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவசம் (தேவஸ்தானம்) சார்பிலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின.

    ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

    இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் சிலர் இந்த தீர்ப்பை ஆதரிக்கின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த இயலாதவாறு கேரள சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதற்கிடையில், துலாம் மாத சிறப்பு பூஜைக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படவுள்ளதால் இதுதொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கோயிலின் தலைமை நிர்வாகிகள், தந்திரிகள் எனப்படும் தலைமை பூசாரிகள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றியும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.



    இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில சட்டசபையை நோக்கி இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியினரும் பங்கேற்றனர்.

    கேரள மாநில பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை தலைமையில் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுரேஷ் கோபி, பாரதிய தர்ம சேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி உள்ளிட்டோர் இந்த பேரணியில் முன்வரிசையில் அணிவகுத்து சென்றனர்.

    பேரணியின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீதரன் பிள்ளை, இவ்விவகாரத்தில் கேரள மாநில அரசு இன்னும் 24 மணி நேரத்துக்குள் தீர்வு காணாவிட்டால் எங்கள் போராட்டம் வேறு வடிவத்தில் தலைதூக்கும் என எச்சரித்துள்ளார்.  #SabarimalaVerdict #BJPRally
    சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சில மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்தது. முதல்-மந்திரி பினராயி விஜயன் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் அரசின் முடிவை ஏற்பதாகவும், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தது.

    கேரள அரசின் இந்த முடிவுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனி ஆச்சாரம் உள்ளது. நித்திய பிரம்மச்சாரியான ஐயப்பனை இளம்பெண்கள் தரிசிப்பது மத நம்பிக்கையை குலைக்கும் செயல். அதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க முடியாது. அதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது. கேரள அரசுக்கு இதில் விருப்பம் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக தேவசம் போர்டு தெரிவித்தது.

    இது ஐயப்ப பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராகவும் கேரள அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

    இந்த போராட்ட அறிவிப்புக்கு சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜ குடும்பம், சபரிமலை தந்திரிகள், ஐயப்ப சேவாசங்கம் உள்பட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளும் போராட்டத்திற்கு துணை நிற்பதாக அறிவித்துள்ளன. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரளா முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகியுள்ளது.

    பா.ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் நேற்று சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் பிரமாண்ட பேரணி நடந்தது.

    எர்ணாகுளம், திருப்புணித் துறாவில் ஐயப்பனின் அவதார கோவிலான தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கிய கண்டன பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பூரணத்தாரா ஈசா கோவில் அருகே முடிந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சரணகோ‌ஷம் எழுப்பியபடி சபரிமலை கோவில் ஆச்சாரத்தில் யாரும் தலையிடக்கூடாது, கோவிலுக்குள் பெண்கள் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பியபடியே சென்றனர்.

    இருமுடி கட்டி மாலை அணிய மாட்டோம் என்றும் சபதம் எடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். கேரளாவின் பாறசாலை முதல் காசர் கோடு வரை 14 மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

    போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து போராட்டக்காரர்களையும், பந்தளம் ராஜ குடும்பத்தினரையும் சந்தித்து சமரசம் பேச முதல்-மந்திரி பினராயி விஜயன் விருப்பம் தெரிவித்தார். இது பந்தள ராஜகுடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இச்சந்திப்பிற்கு மறுத்து விட்டனர்.

    கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதாக உறுதி அளித்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு வருவோம் என கூறி விட்டனர். பந்தள ராஜகுடும்பத்தின் எதிர்ப்புக்கு கேரள நாயர் சர்வீஸ் சொசைட்டி அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. என்.எஸ்.எஸ். எனப்படும் இந்த அமைப்பும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.



    இந்த நிலையில் கேரள ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. சங்கத்தின் தலைவர் ‌ஷயாலஜா விஜயன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் அரசியல் சாசனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

    சபரி மலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சீராய்வு மனு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் போது தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சபரி மலையில் பெண்களை ஏன் அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக வலுவான வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளது.  #SabarimalaVerdict #SupremeCourt #SabarimalaReview
    சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. #SabarimalaVerdict #TravancoreDevaswomBoard
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

    இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். திருவனந்தபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். 

    இக்கூட்டத்தின் முடிவில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் நிருபர்களிடம் கூறுகையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவாங்கூர் தேவசம் போர்டு சீராய்வு மனு செய்யாது என தெரிவித்தார். 

    இதேபோல் கேரள அரசு சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டாது என முதல்வர் பினராயி விஜயன் கூறியது குறிப்பிடத்தக்கது. #SabarimalaVerdict #TravancoreDevaswomBoard
    ×