search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் புகார் - மத்திய அரசுக்கு ராகுல்காந்தி சவால்
    X

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் புகார் - மத்திய அரசுக்கு ராகுல்காந்தி சவால்

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா? என மத்திய அரசுக்கு ராகுல்காந்தி சவால் விடுத்துள்ளார். #Rahul #RafaleDeal

    புதுடெல்லி:

    பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2001-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது.

    2012-ம் ஆண்டு இதற்காக பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு திடீரென ரத்து செய்து விட்டது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதும், பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றி மீண்டும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுடன் மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது.

    இந்த புதிய ஒப்பந்தப்படி, “ரபேல் போர் விமானத்துக்கான 50 சதவீத உதிரிப்பாகங்களை இந்தியாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து பிரான்சு கொள்முதல் செய்ய வேண்டும்” என்று இந்தியா நிபந்தனை விதித்திருந்தது. இதை பிரான்ஸ் ஏற்றுக் கொண்டதால் இந்திய பாதுகாப்புத் துறைக்கு நவீன ரபேல் போர் விமானங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகளும், ஊழலும் நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி “ரபேல் விமான கொள்முதலில் ஊழல்” என்று பேசி வருகிறார்.

    ராகுலின் பொதுக்கூட்ட மேடை பேச்சு மற்றும் பேட்டிகளின் போது ரபேல் விவகாரம் தவறாமல் இடம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று ரபேல் ஒப்பந்தம் பற்றி ராகுலிடம் 15 கேள்விகளை கேட்டுள்ளார்.


    இந்த கேள்விகளை தனது ‘பேஸ்புக்‘ இணையத்தள பக்கத்தில் அருண்ஜெட்லி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ரபேல் போர் விமான கொள்முதல் பற்றி ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

    மேலும், “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதை விட 20 சதவீதம் குறைவான விலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு செய்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் வைக்கப்பட்டு 14 மாதங்கள் கழித்துத்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. எனவே எந்த உண்மையையும் அரை குறையாக ராகுல் பேசக்கூடாது” என்றும் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

    நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இந்த விளக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனடியாக டுவிட்டரில் பதில் அளித்தார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:-

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய கொள்ளை நடந்து இருப்பதாக நான் நாடு முழுவதும் கூறி வருகிறேன். இதுவரை மத்திய அரசு இதில் எதுவும் சொல்லாமல் இருந்தது. முதன் முதலாக இந்த கொள்ளை பற்றிய தகவல்களை நாட்டு மக்களின் கவனத்துக்கு அருண் ஜெட்லி கொண்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரபேல் ஒப்பந்தம் பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு மத்திய அரசு தயாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.

    இந்த விவகாரத்தில் உங்கள் தலைவர் (மோடி) தனது நண்பரை (அணில்அம்பானி) காப்பாற்றி வருகிறார். இதுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது. இதுபற்றி அருண்ஜெட்லி 24 மணி நேரத்தில் பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு ராகுல் சவால் விட்டுள்ளார். இதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

    முதலில் அருண்ஜெட்லி கேட்ட 15 கேள்விகளுக்கு ராகுல் பதில் சொல்லட்டும். அதில் இந்த பிரச்சினைக்குரிய எல்லா விடைகளும் இருப்பதாக ராகுலுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு சுட சுட பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள் என்று நினைத்துக் கொண்டு ராகுல் பேசி வருகிறார். அவரை விட நாட்டு மக்களுக்கு புத்திசாலித்தனம் அதிகமாக உள்ளது.

    ரபேல் போர் விமான விலை பற்றி ராகுல் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி கூறி வருகிறார். டெல்லி, பெங்களூர், ராய்ப்பூர், ஐதராபாத், ஜெய்ப்பூர் நகரங்களில் ரபேல் போர் விமான விலை பற்றி மாறுபட்ட தகவல்களை ராகுல் கூறினார்.

    பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசும்போது, வேறு விலையைக் குறிப்பிட்டு பேசினார். இதுபற்றி பாராளுமன்ற கூட்டுக்குழுவில் விசாரிக்க 24 மணி நேரம் கூட ராகுல் காத்திருக்க வேண்டியதில்லை.

    காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு கூட்டுக்குழு உள்ளது. அங்கு விசாரித்தாலே போதுமே.

    இவ்வாறு ராகுலை கிண்டல் செய்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    Next Story
    ×