search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில், பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 5 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் அம்பலம்
    X

    பீகாரில், பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 5 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் அம்பலம்

    பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த மேலும் 5 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டது மருத்துவ அறிக்கையில் தெரிய வந்துள்ளது. #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    முசாபர்பூர்:

    பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மாநில அரசு உதவி பெறும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 4 வயது முதல் 18 வயது வரையுள்ள பேச்சு குறைபாடு கொண்ட 44 சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த சிறுமிகளில் பலரை இல்லத்தின் உரிமையாளரும், பணிபுரியும் ஊழியர்கள் சிலரும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, மும்பையைச் சேர்ந்த டாடா சமூக அறிவியல் நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய தணிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக பீகார் மாநில சமூக நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.



    இதையடுத்து பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகளில் 42 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 29 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் முசாபர்பூர் போலீசார் பாதுகாப்பு இல்லத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாகூர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. நேற்று கையில் எடுத்துக் கொண்டது.

    இந்த நிலையில், இரண்டாம் கட்ட மருத்துவ அறிக்கையில் மேலும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது, நேற்று தெரிய வந்தது. இதனால் பாதுகாப்பு இல்லத்தில் காமுகர்களால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், “நாட்டில் ஆட்சி நிர்வாகம் மேம்பட்டு இருப்பதாக பெருமையுடன் கூறிக் கொள்பவர்கள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்தை வெறும் கோஷமாகவே வைத்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.  #CBIinvestigation #abuseofminorgirls #MuzaffarpurShelterHome
    Next Story
    ×