search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம்
    X

    திருப்பதியில் 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம்

    திருப்பதியில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இலவச திருமணம் திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர். #Tirupati
    திருமலை:

    திருப்பதியில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

    திருப்பதியில் பாபவி நாசம் செல்லும் வழியில் உள்ள கல்யாண மண்டபத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலவசமாக திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

    அன்று முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 10 ஆயிரம் ஜோடிகள் இந்த திட்டத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர்.

    திருப்பதியில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் தேவஸ்தான இணைய தளத்திற்கு சென்று கல்யாணத் திட்டம் பகுதியில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர், வயது, மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை எண், திருமண நாள், நேரம் உள்ளிட்டவற்றை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    அவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மணமக்கள் அந்த ஒப்புகைச் சீட்டுடன் திருப்பதிக்கு வந்து முகூர்த்த நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கல்யாண மண்டபத்தில் அதை அளிக்க வேண்டும்.

    ஊழியர்கள் அதை சரிபார்த்த பின் மேள வாத்தியம், புரோகிதத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்தினால் மணமக்களுக்கு இலவச அறை, மஞ்சள், குங்குமம், கங்கணம், அட்சதை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்கும். மற்றபடி திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் மணமக்கள் கொண்டுவர வேண்டும்.

    திருமணம் முடிந்த பின் ரூ.25-க்கு 12 லட்டு, மணமக்கள், அவர்களின் தாய், தந்தை என 6 பேருக்கு விரைவு தரிசனத்தை தேவஸ்தானம் இலவசமாக வழங்குகிறது. இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த திருமண திட்டத்தில் அனுமதி வழங்கப்படும். காதல் திருமணம், 2-ம் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

    திருமணம் செய்து கொள்பவர்கள் இலவசமாக தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பையும் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதியில் உள்ள எஸ்.எம்.சி-233-ல் இந்து திருமண பதிவு அலுவலகத்தில் மணமக்கள் தங்கள் பிறப்பு சான்றிதழுடன், திருமணம் செய்து கொண்ட சான்றிதழ், பத்திரிகை, புகைப்படம், மண்டபத்தின் ரசீது, 3 சாட்சியாளர்களின் கையொப்பம் உள்ளிட்டவற்றை அளித்து திருமணத்தைப் பதிவு கொள்ளலாம். #Tirupati #TirupatiTemple
    Next Story
    ×