search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால் உடனே ஆட்சி அமைப்போம் - அமித்ஷா சவால்
    X

    கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால் உடனே ஆட்சி அமைப்போம் - அமித்ஷா சவால்

    கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால் உடனே ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். #Karnatakaassemblyelection #BJP #AmitShah

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மை பெற முடியாததால் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தது.

    மெஜாரிட்டியை நிரூபிக்க போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாகவே முதல்-மந்திரி எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் குமாரசாமி நாளை கர்நாடகா முதல்-மந்திரியாக பதவியேற்கிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால் உடனே ஆட்சி அமைப்போம் என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகாவில் மக்கள் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். அப்படி இருக்கும்போது ஆட்சி அமைக்க பா.ஜனதா உரிமை கோராமல் இருந்து இருந்தால் அது மக்கள் தீர்ப்புக்கு எதிரான செயலாக இருக்கும்.


    காங்கிரசை சேர்ந்த பெரும்பாலான மந்திரிகள் தோல்வி அடைந்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த வெற்றியை காங்கிரஸ் கொண்டாடுவது ஏன்? என்பது பற்றி மக்களுக்கு விளக்க வேண்டும்.

    தோல்வியையே வெற்றி என சித்தரித்து கொண்டாடும் புதிய வழியை காங்கிரஸ் கண்டுபிடித்துள்ளது. அவர்களின் இந்த புதிய வழிமுறை 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னரிடம் எடியூரப்பா 1 வாரம் அவகாசம் கேட்டதாக காங்கிரஸ் வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொய் சொல்லி இருக்கிறார்.

    கர்நாடகாவில் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மதச்சார்பற்ற கட்சிகள் இடையே உருவான கூட்டணி அசுத்தமான கூட்டணியாகும். இந்த கூட்டணி நிலையற்றதாக இருக்கும்.

    தேர்தலில் காங்கிரசை மதச்சார்பற்ற ஜனதா தளம் தோற்கடித்து இருக்கிறது. மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் தற்போது காங்கிரசுடன் கைகோர்த்து உள்ளனர். இதனால் இந்த கூட்டணி புனிதமில்லாதது.

    காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல் அறையில் வைத்து கண்காணிக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால் அந்த கூட்டணி மெஜாரிட்டியை இழந்து விடும். எங்களால் இப்போதே ஆட்சி அமைக்க முடியும்.

    இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார். #Karnatakaassemblyelection #BJP #AmitShah

    Next Story
    ×