search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் வன்கொடுமையால் பலியாகும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு - மத்திய அரசு
    X

    பாலியல் வன்கொடுமையால் பலியாகும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு - மத்திய அரசு

    பாலியல் வன்கொடுமையால் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. #Centralgovt
    புதுடெல்லி:

    பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற பல்வேறு குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்குவது வழக்கமாக உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் இந்த நஷ்ட ஈட்டின் தொகை மாறுபடுகிறது.

    எனவே, குறைந்த பட்சம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்கும் வகையில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி மத்திய சட்ட சேவை வாரியம் மத்திய அரசுடன் கலந்து பேசி புதிய நஷ்டஈடு திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன் மூலம் பாலியல் வன்கொடுமையில் உயிர் இழக்கும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் பலரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கும் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கும் நபர்களுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்களை உருவாக்கி உள்ளனர்.

    இதன்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், இயற்கைக்கு மாறான பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்படும் நபருக்கு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையிலும், பாலியல் குற்றத்தில் கர்ப்பம் அடைந்தால் ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையிலும், கற்பழிப்பில் கர்ப்பமானால் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சம் வரையிலும்,

    திராவகம் வீச்சு மற்றும் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டால் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சம் வரையிலும், 50 சதவீதம் காயம் அடைந்திருந்தால் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலும் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்ட வரையரை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் இது போன்ற குற்றங்களில் ஆண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் திட்டங்கள் வரையரை செய்யவில்லை.

    இது சம்பந்தமாக நீதிபதிகள் மதன்லோகூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு கூறும் போது, மைனராக உள்ள சிறுவர்கள் இது போன்ற குற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கும் அம்சங்களை சேர்க்கும்படி உத்தரவிட்டனர். #Centralgovt
    Next Story
    ×