search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர் மட்ட குழுவினரிடம் சசிகலா பரபரப்பு வாக்குமூலம்
    X

    உயர் மட்ட குழுவினரிடம் சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழுவினரிடம் சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை விதிமீறல்கள் குறித்து டி.ஐ.ஜி. ரூபா எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து வினய்குமார் தலைமையிலான குழு கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு நடத்தியது. இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் மீண்டும் சிறைக்கு சென்று ஆய்வு நடத்திய இக்குழு சிறையில் உள்ள சசிகலா, தெல்கி உள்பட பல கைதிகளிடம் விசாரணை நடத்தி அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்தது.

    மேலும் சிறை ஆவணங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்துள்ளனர். இதில் சசிகலா மற்றும் தெல்கி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதில் சசிகலா உயர்மட்ட குழுவினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    சிறையில் பாதுகாப்பு கருதி பல பெண் கைதிகளுக்கு தனியறை வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில் எனக்கும் தனியறை வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜெயலலிதா அவர்களுடன் சிறையில் இருந்தபோது அவர்களை நான் பார்த்துக்கொண்டேன்.

    அப்போது இரண்டு கைதிகள் என்னிடம் வந்து பேசுவார்கள். இந்த நிலையில் அவர்கள் தற்போதும் என்னிடம் வந்து அன்பாக பேசுவார்கள், என்மீது கொண்டுள்ள பற்றின் காரணமாகவோ என்னவோ அவர்கள் என்மீது மிகுந்த அக்கறை காட்டுவார்கள் மற்றும் சிறிய உதவிகளையும் செய்வார்கள். இது என் மனதுக்கு சற்றே ஆறுதல் தரும் விதமாக இருந்ததால் அனுமதித்தேன்.

    மேலும் உடற்பயிற்சி செய்ய சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், வேறு வசதிகள் இருப்பதாகவும் கூறப்படும் தகவல்கள் மிகவும் தவறானது. சிறை விதிமுறையின்படி நான் வெள்ளை நிற சேலை கட்ட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை சிறை விதிமுறைகள் படிதான் நானும் நடந்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

    இதேபோல் முத்திரை தாள் மோசடி வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் உள்ள தெல்கி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தனக்கு தானே மசாஜ் செய்து கொள்ள முடியாது என்ற காரணத்தினால் நீதிமன்ற அனுமதியின் பேரில் இரண்டு உதவியாட்களை பயன்படுத்துவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் உள்ளதால் சிறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் தனி அறை பெற்றதாகவும், தன்னைப்போலவே பல முக்கிய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கருதி தனியறை வழங்கப்பட்டது.

    மேலும் நான் அறையைவிட்டு வெளியே சென்று குடிநீர் பிடித்துவர முடியாது என்பதால் மினரல் வாட்டர் கேன் என் அறையில் வைக்கப்பட்டுள்ளது. தரையில் உட்கார முடியாது என்பதால் கட்டில் வழங்கப்பட்டுள்ளது. அதனால் நான் எந்தவிதமான ஆடம்பர சலுகையும் பெறவில்லை.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதையடுத்து சசிகலா மற்றும் தெல்கிக்கு உதவி புரிந்ததாக கூறப்பட்ட கைதிகளிடமும், வேறு சில வாக்குமூலங்களையும் வினய்குமார் பெற்றார். இவற்றில் சில சசிகலாவிற்கு ஆதரவாகவும், சில எதிராகவும் உள்ளது என தெரிகிறது.

    இந்த நிலையில் தற்போது அறிக்கை தயாரிக்கும் பணியை வினய்குமார் தீவிரப்படுத்தியுள்ளார். அடுத்த ஓரிரு நாட்களில் இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×