search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாட்டு இறைச்சி போராட்டத்துக்கு பதிலடியாக பால் வழங்கும் போராட்டம்: பா.ஜனதா கட்சி அறிவிப்பு
    X

    மாட்டு இறைச்சி போராட்டத்துக்கு பதிலடியாக பால் வழங்கும் போராட்டம்: பா.ஜனதா கட்சி அறிவிப்பு

    நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு பதிலடியாக மேற்கு வங்காளத்தில் பால் வழங்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநில பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.
    கொல்கத்தா:

    மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்து கடந்த 23-ந்தேதி உத்தரவிட்டது.

    இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து விட்டன.

    மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரளாவில் நடுரோட்டில் மாட்டுக்கறி சமைத்து மக்களுக்கு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    இந்த நிலையில் இதற்கு பதிலடியாக மேற்கு வங்காளத்தில் பால் வழங்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநில பாரதீய ஜனதா அறிவித்து உள்ளது.

    வருகிற 10-ந்தேதி கொல்கத்தாவிலும், மாவட்ட தலைநகரங்களிலும் பால் வழங்கும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாநில பாரதீய ஜனதா உறுப்பினரும், மேற்கு வங்காள பசு மேம்பாட்டு மைய தலைவருமான சுபர்தா குப்தா கூறியதாவது:-

    காங்கிரசும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டும் கேரளாவில் மாடுகளை கொன்று கறிகளை வினியோகம் செய்து சட்டத்தை மீறியுள்ளன. இதற்கு நாங்கள் சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    மாட்டுகறி விநியோகிப்பதற்கு போட்டியாக பால் வழங்கி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மாநிலம் முழுவதும் வருகிற 10-ந் தேதி இந்த போராட்டம் நடைபெறும்.

    கொல்கத்தாவில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகத்திலும், மாவட்ட தலைநகரங்களிலும் பால் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×