search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: குரல் மாதிரி பரிசோதனைக்கு டி.டி.வி.தினகரன் மறுப்பு
    X

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு: குரல் மாதிரி பரிசோதனைக்கு டி.டி.வி.தினகரன் மறுப்பு

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குரல் மாதிரி பரிசோதனைக்கு கோர்ட்டில் தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குரல் மாதிரி பரிசோதனைக்கு கோர்ட்டில் தினகரன் மறுப்பு தெரிவித்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தனக்கு ராசியான தேதியில் நடத்த அவர் பேரம் பேசியதாக போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் கமிஷன், தினகரனுக்கு தொப்பி சின்னத்தையும், மதுசூதனனுக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தையும் ஒதுக்கியது.

    தீவிர கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பெரும் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தெரியவந்ததால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்தது.

    இந்த நிலையில், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பான தகவல் வெளியானது.

    டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்த போது இந்த திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதைத்தொடர்ந்து தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான மூவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    தினகரன்-சுகேஷ் சந்திரசேகர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் தங்களிடம் இருப்பதாகவும், எனவே அதனுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய அவர்கள் இருவருடைய குரல் மாதிரிகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி டெல்லி போலீஸ் சார்பில் கடந்த 11-ந் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தினகரன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, குறுந்தகட்டில் உள்ள உரையாடல் பதிவுடன் ஒப்பிட்டு சோதனை நடத்துவதற்காக தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்ய போலீசாருக்கு அனுமதி அளித்து கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மத்திய தடவியல் பரிசோதனை கூடத்துக்கு, குரல் மாதிரி பரிசோதனை நடத்த தினகரனை டெல்லி போலீசார் அழைத்துச் செல்ல முயன்ற போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    எனவே டெல்லி முதன்மை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு அபினாஷ் மல்கோத்ரா முன்னிலையில் நேற்று அவரை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது டி.டி.வி.தினகரன் குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்பட மறுப்பதற்கான காரணம் குறித்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

    தினகரன் தன்னுடைய வாக்குமூலத்தின் போது, இப்படி குரல் மாதிரி பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டப்படி தவறானது என்றும், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் இதற்கான நடைமுறை இல்லை என்றும், அதனால் தன்னால் இந்த பரிசோதனைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும் தெரிவித்தார். பின்னர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்காக அவருடைய வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:-

    சுகேஷ் சந்திரசேகர் மற்றும் தினகரன் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவில் குற்றம் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த உரையாடலில், தனக்கு 5-ம் எண் ராசியானது என்பதால் கூட்டுத்தொகை 5 என்று முடியும் தேதியில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான மறுதேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் அதிகாரியிடம் கூறி ஏற்பாடு செய்யுமாறு தினகரன் கூறி உள்ளார். இதுபற்றியும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது பற்றியும் பேசப்பட்டது அந்த குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிலரின் பெயர்களை சுகேஷ் சந்திரசேகர் பயன்படுத்தி இருக்கிறார். தேவைப்பட்டால் அந்த அதிகாரிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும்.

    சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் பல ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, வக்கீல் கோபிநாத், கவிதா உள்ளிட்ட மேலும் நான்கு பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட உள்ளனர். எனவே, இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

    இவ்வாறு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.

    சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஆஜரான வக்கீல் தீபா முருகேசன் வாதாடுகையில் கூறியதாவது:-

    சுகேஷ் சந்திரசேகர் மீது ஊழல் தடுப்பு பிரிவிலும், கூட்டு சதி பிரிவிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அப்படி ஊழலில் ஈடுபட்டதாக எந்த தேர்தல் கமிஷன் அதிகாரியின் பெயரும் இடம் பெறவில்லை. சுகேஷ் சந்திரசேகரிடம் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடியே 30 லட்சம் இந்த லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பானதுதான் என்று நிரூபித்து இருக்கவேண்டும். அதையும் அவர்களால் செய்ய முடியவில்லை. அப்படி அவரிடம் ரூ.1 கோடியே 30 லட்சம் இருந்தாலும் அவர் வருமான வரித்துறைக்குத்தான் பதில் கூற கடமைப்பட்டு இருக்கிறார்.

    இதுபற்றி கேள்வி எழுப்ப டெல்லி போலீசுக்கு அதிகாரம் கிடையாது. யாருடன் சேர்ந்து கூட்டு சதி செய்தார் என்று போலீசார் நிரூபிக்கவில்லை. டெல்லி போலீசார் தங்களிடம் உள்ளதாக கூறப்படும் குறுந்தகடு ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரம் தானே தவிர நிரூபிக்கும் தன்மை கொண்ட ஆதாரம் கிடையாது. சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காரில் எம்.பி. ஒருவரின் ‘பார்க்கிங் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு உள்ளது. சுகேஷ் சந்திரசேகர் எங்கும் யாரிடமும் தன்னை ஒரு எம்.பி. என்று கூறிக்கொண்டது இல்லை. அந்த வண்டி அவருடைய பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான சட்டப்பிரிவு ஜாமீன் வழங்கக்கூடிய குற்றமாகும்.

    மேலும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பண பரிமாற்றம் நடைபெற்ற போது இந்த கைது நடக்கவில்லை. டெல்லி போலீசார் இந்த விசாரணை முழுவதிலும் முன்வைப்பது அவர்களிடம் இருப்பதாக கூறும் குறுந்தகடு மட்டுமே. இதனை நாம் முக்கியமான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 18-ந் தேதி பாபுபாய் என்ற மற்றொரு ஹவாலா ஏஜெண்டையும் டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாபுபாயின் போலீஸ் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீடித்து நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். 
    Next Story
    ×