search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refuses"

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது.



    அந்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #JayaDeathProbe #ArumugasamyCommission
    மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேதா அறிவித்து உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik
    புவனேசுவரம்:

    மத்திய அரசு நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்தது. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 94 பேரில் 76 வயதான எழுத்தாளர் கீதா மேதாவும் ஒருவர். ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் சகோதரியான இவர் ஆவண படங்களையும் தயாரித்து இயக்கி இருக்கிறார். இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக கீதா மேதாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தான் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று கீதா மேதா அறிவித்து உள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் அவர், இது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், “பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் என கருதி மத்திய அரசு என்னை தேர்ந்தெடுத்து கவுரவித்து இருக்கிறது. ஆனால் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது தவறாக புரிந்து கொள்ளப்படலாம். இதனால் எனக்கும், அரசுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், விருதை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். #PadmaShriAward #GitaMehta #NaveenPatnaik

    குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #SupremeCourt #TwoChildNorm
    புதுடெல்லி:

    சமூக சேவகரும், ஒரு தொண்டு நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் பாஜ்பாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அதில், குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். மேலும், “மக்கள் தொகை அபாயகரமாக உயர்ந்து வருவதால், வனவளம் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன. எரிபொருள் தேவை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. எனவே, 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகையும் வழங்கக்கூடாது” என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த கோரிக்கையை அரசு நிர்வாகத்திடம் எடுத்துச் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். 
    விளாத்திகுளம் அருகே இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே சக்கம்மாள் புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் ரமேஷ் காந்தி (27). இவரது உறவினர் புதிய புத்தூரைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் ரமேஷ் (26). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு ரமேஷ் காந்தியை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரமேஷ் நெருங்கி பழகி உள்ளார்.

    அதன் பின்னர் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். பலமுறை திருமணத்துக்கு வற்புறுத்தியும் அவர் மறுத்ததால், ரமேஷ் மீது விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் காந்தி புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தார்.
    சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற மறுப்பு தெரிவித்துள்ளார். #NawazSharif #Refuses #Hospital
    இஸ்லாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் பணத்தில் லண்டன் நகரில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்த வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவர் இதய நோயாளி ஆவார். சர்க்கரை நோயும் தாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் நீர்ப்போக்கு பிரச்சினையால் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளார். அவரை நேற்று முன்தினம் ‘பிம்ஸ்’ என்று அழைக்கப்படுகிற பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர்.

    இதுபற்றி பரிசோதனை குழுவில் இடம் பெற்றிருந்த ஒரு டாக்டர் கூறும்போது, “அவரது ரத்தத்தில் யூரியாவின் அளவு கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. நீர்ப்போக்கு பிரச்சினையும் கடுமையாக உள்ளது. இ.சி.ஜி. பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கடந்த கால பிரச்சினைகளும் கேட்டு கவனத்தில் கொள்ளப்பட்டன. அவர் ஏற்கனவே எடுத்து வருகிற மாத்திரை, மருந்துகளை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டார்” என்று குறிப்பிட்டார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் 2 மருத்துவர்களை கொண்ட குழு நவாஸ் ஷெரீப்பை பரிசோதித்து, அவரை ஆஸ்பத்திரியில் சேர்ந்து, தொடர்ந்து சிகிச்சை செய்துகொள்ளுமாறு பரிந்துரை செய்ததாகவும், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும், சிறையிலேயே சிகிச்சை பெறுகிறேன் என கூறி விட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

    இது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ டாக்டர் அசார் முகமது கியானி கருத்து தெரிவிக்கையில், “அவரது இதயத்துடிப்பு இயல்பாக இல்லை என்பதாலும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்பதாலும் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு சிறை நிர்வாகமும், தற்காலிக அரசும் பரிந்துரை செய்தன” என கூறினார்.  #NawazSharif #Refuses #Hospital  #tamilnews 
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. #MKU #PPChellathurai
    புதுடெல்லி:

    மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளரான லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.



    அந்த மனுக்களில், ‘பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாக அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதமானது. தற்போது, அவர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்களை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவர் புதிதாக பணியிடங்களை நிரப்ப தடை விதிக்கவேண்டும். அவரை துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்ட நியமனத்தை ரத்து செய்து கடந்த ஜூன் 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கினர்.

    சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பி.பி.செல்லத்துரை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஜீர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வக்கீல் ஆர்.வெங்கட்ரமணி, அரசு வக்கீல் பா.வினோத் கன்னா ஆகியோர் தங்களுடைய வாதத்தில், “சென்னை ஐகோர்ட்டு செல்லத்துரையின் நியமனத்தை செல்லாது என்று கூறி ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 3 மாதத்துக்குள் புதிய துணைவேந்தரை நியமிக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் கடந்த 16-ந் தேதியன்று புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் வகையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி விட்டன. புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அக்குழு பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகளை கவனிக்கும். எனவே, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

    மனுதாரர் செல்லத்துரை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தில் “ஐகோர்ட்டு கடந்த 14-ந் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. 16-ந் தேதியன்று ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அன்றே அதிகாரிகளைக்கொண்டு வழக்கத்தில் என்றும் இல்லாதபடி அவசர அவசரமாக குழுவை அமைத்துள்ளனர். இது மனுதாரருக்கு எதிராக உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும்” என்றார்.

    இதற்கு தமிழக அரசு தரப்பில், ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுதாரரின் மனுவின் மீது பதில் மனுதாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.   #MKU #PPChellathurai #tamilnews
    ×