search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய பாராளுமன்ற உள் அலங்காரத்துக்கு மட்டும் ரூ. 200 கோடி செலவு
    X

    புதிய பாராளுமன்ற உள் அலங்காரத்துக்கு மட்டும் ரூ. 200 கோடி செலவு

    • இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    • பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடம் ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகே கண்ணாடி பேழைக்குள் சோழர் கால செங்கோலையும் நிறுவினார்.

    64,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாசாரம், கட்டிடக்கலை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என அனைத்து அம்சங்களுடன் அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் உள் அலங்காரத்துக்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஓவியங்கள், சுவர் பேனல்கள், கல் சிற்பங்கள் மற்றும் உலோக சுவரோவியங்கள் உள்பட 5 ஆயிரம் வகை கலைப்பொருட்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள அரசியலமைப்பு மண்டபத்தில் இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சி கண்காட்சிகள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமியின் சுழற்சியை விளக்கும் பூகோள பந்தும் உள்ளது. இதன் முக்கோண கூரையில் இருந்து தொங்கும் பூகோள பந்து 'பிரபஞ்சத்துடன் இந்தியா' என்ற கருத்தை குறிக்கிறது. இந்த பூகோள பந்துக்கு பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் போக்கால்ட் என்பவரின் பெயரிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அட்சரேகையில் இந்த பூகோள பந்து ஒரு சுழற்சியை முடிக்க 49 மணி 59 நிமிடம் 18 வினாடிகள் ஆகிறது.

    இதன் மேற்கூரையில் இடம்பெற்றுள்ள 6 தனித்தனி பேனல்கள் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி புதுடெல்லியில் இருந்த இரவு வானத்தின் தோற்றம் மற்றும் வானத்தின் அமைப்பு ஆகியவற்றின் கலை விளக்கத்தை சித்தரிக்கிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஓட்டளிப்பு முறை, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒலியியல், அதிநவீன ஆடியோ விஷுவல் இடம்பெற்றுள்ளன.

    மகாத்மா காந்தி, சாணக்யா, கார்கி, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் பித்தளை திருவுருவ சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோனார்க்கில் உள்ள சூரியன் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தேர் சக்கரமும் உள்ளது.

    பொது நுழைவு வாயில்கள் 3 கேலரிகளுக்கு செல்லும் வகையில் உள்ளன. சங்கீத் கேலரி இந்தியாவின் நடனம், பாடல், மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்துகிறது. ஸ்தப்தியா கேலரி இந்தியாவின் கட்டிடக்கலை பாரம்பரியத்தை உணர்த்துகிறது. ஷில்ப் கேலரி பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினை மரபுகளை காட்சிப்படுத்துகிறது.

    சங்கீத் கேலரிக்கு உஸ்தாத் அம்ஜத் அலிகான், பண்டிட் ஹரிபிரசாத், பிரசாத் சவுராசியா, உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது இசைக்கருவிகளை வழங்கியுள்ளனர்.

    இங்கு இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கலைப்பொருட்களின் அருகிலும் கியூஆர் கோடு பொறிக்கப்பட்டுள்ளது. இதை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அந்த கலைப்பொருட்கள் குறித்த தகவல்கலை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் விதமாக புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பொருட்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு உள்ளன.

    மக்களவை அறையின் உள்புறம் தேசிய பறவையான மயில் வடிவத்தில் காணப்படுகிறது. மாநிலங்களவை தேசிய மலரான தாமரை வடிவில் காணப்படுகிறது.

    பாராளுமன்றத்தில் உள்ள ஒரு சுவரோவியத்தில் பண்டைய இந்தியாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில் கடந்த காலத்தின் முக்கிய ராஜ்ஜியங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன. இன்றைய பாகிஸ்தான் வரை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு மற்றும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் சுவரோவியமாக உள்ளன.

    பாராளுமன்ற அறைகளுக்கு வெளியே உள்ள உட்புற பகுதிகள் நட்சத்திர ஓட்டல் லாபியை போல காணப்படுகிறது. மத்திய முற்றம் திறந்த வெளியாக காணப்படுகிறது. அதன் மையத்தில் ஒரு ஆலமரம் உள்ளது. அதை சுற்றி எம்.பி.க்களின் ஓய்வறைகள் மற்றும் நூலகம் உள்ளது.

    பாராளுமன்ற மக்களவையில் 158 கம்பளங்களும், மாநிலங்களவையில் 156 கம்பளங்களும் விரிக்கப்பட்டுள்ளன. இரு அவைகளையும் சேர்த்து 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவை இந்த கம்பளங்கள் அலங்கரிக்கின்றன. இந்த கம்பளங்களை உத்தரபிரதேச மாநிலம் படோஹி மற்றும் மிர்சாபூர் ஆகிய 2 கிராமங்களை சேர்ந்த 900 கைவினைஞர்கள் சுமார் 18 மாதங்கள் உழைத்து உருவாக்கியுள்ளனர். இந்த கம்பளங்கள் ஒரு சதுர அங்குலத்துக்கு 120 முடிச்சுகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 60 கோடி முடிச்சுகள் போடப்பட்டுள்ளன.

    மக்களவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய பறவையான மயில் வடிவமைப்பிலும், மாநிலங்களைவையில் விரிக்கப்பட்டுள்ள கம்பளங்கள் தேசிய மலரான தாமரையை போன்றும் உள்ளன. இந்த கம்பளங்கள் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டு 20 முதல் 25 பிம்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் ஒப்பற்ற கலைத்திறனுக்கு சான்றாக விளங்குகின்றன.

    Next Story
    ×