என் மலர்
உண்மை எது
கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் தான் அதை உருவாக்கியதாக செய்தி வெளியாகியது.
’தி எக்ஸ்போஸ்’ என்ற இணையதளத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியான செய்தி ஒன்றில் கொரோனா வைரஸை உருவாக்கியது மாடர்னா என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் தான் என்ற ஆவணங்களுடன் நிரூபணமாகியுள்ளதாக செய்தி வெளியானது.
அந்த செய்தியில் கூறியிருப்பதாவது:-
சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸை உருவாக்கியது பெரும் மருந்து தயாரிக்கும் நிறுவனமான மாடர்னா தான் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை விற்று பல நூறு கோடிகளை சம்பாதித்த அதே நிறுவனம் தான் கொரோனா வைரஸையே உருவாக்கியுள்ளது.
கொரோனாவில் காணப்படும் 19-nucleotide அமைப்பு, மாடர்னா 2017-ம் ஆண்டு ஆய்வு செய்து காப்புரிமை பெற்ற ஒரு கண்டுபிடிப்பின் நியூகிலியோடைட் அமைப்புடன் ஒத்துப்போகிறது. அதாவது 2019-ல் கொரோனா பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பு 2017-ம் ஆண்டே இந்த வைரஸை மாடர்னா ஆய்வு செய்து காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வைரஸ் தான் பரவி உலகம் முழுவதும் 70 லட்சம் உயிர்களை கொன்றுள்ளது.

உலகம் உக்ரைன் - ரஷிய போரில் கவனம் செலுத்தி வரும் தருணத்தில் மாடர்னாவின் செயல்கள் குறித்து வெளியான ஆதாரங்கள் மறைக்கப்படுகிறது.
இவ்வாறு செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆய்வு குறித்து மாடர்னா தரப்பில் எந்த ஆய்வும் தரப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மாடர்னா குறித்து வெளியான செய்தி உண்மையில்லை என தெரிவித்துள்ளன.
மாடர்னா செய்தி குறித்து பேசிய யேல் மருத்துவ பள்ளியின் பேராசிரியர் கிரைக் வைலன் என்பவர், மாடர்னா தான் கொரோனாவை உருவாக்கியது என்பது சுத்த பொய். ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் இந்த செய்தி பரப்பப்படுகிறது.
கொரோனாவின் ஜீனோமிற்கும் மாடர்னாவில் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புக்கும் சம்மந்தம் இல்லை. எந்த ஒரு விஞ்ஞானியாலும் புதிய வைரஸ் உயிரினத்தை உருவாக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.
போலி செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கள் அன்று இரவு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பேர் எரித்துக் கொல்லப் பட்டனர்.
இந்த செய்தியை பகிர்ந்த சில ட்விட்டர் கணக்குகள் எரித்துகொல்லப்பட்ட அனைவரும் இந்துக்கள். 8 பேர் அல்ல 12 பழங்குடியின இந்துக்களை திரிணாமூல் காங்கிரஸ் கொன்றுள்ளது. இதில் 10 பேர் இந்து பெண்கள், 2 பேர் குழந்தைகள். இந்த பயங்கரவாதம் தான் இந்தியாவில் நிகழ்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் உக்ரைன் மக்களை பற்றி கவலைப்பட்டுகொண்டிருக்கிறது என பதிவிட்டன.
இதனால் சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துக்கள் பரவத்தொடங்கின. இதை விசாரித்த மேற்கு வங்காள காவல்துறை, ட்விட்டரில் வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் இஸ்லாமியர்கள். இந்த சோக சம்பவத்தை வைத்து போலி செய்திகளை பரப்பி வெறுப்பை விதைக்க நினைப்பவர்கள் மீது வழக்குப் பதியப்படும் என தெரிவித்துள்ளது.
— West Bengal Police (@WBPolice) March 23, 2022
பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்கும் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்டது. இந்த பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்கும் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல் உண்மை இல்லை என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பூண்டு பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்டவற்றை நீக்கும் தன்மை கொண்டது என்பது உண்மை தான். ஆனால் பூண்டை மூக்கில் வைத்தால் மூக்கடைப்பு நீங்குமா என்றால் கிடையாது. பூண்டை மூக்கில் வைக்கும்போது அதன் வாடை அதிக சளியை உருவாக்கும். அதனால் மூக்கில் இருந்து சளி வடிவதற்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால் அந்த வீடியோக்களை கண்டு ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
விரைவில் எம்.பில் படிப்புகளையும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் 10-ம் வகுப்பு புதுத்தேர்வுகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப்பில் செய்தி பரவி வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெளியான வாட்ஸ்ஆப் மெசேஜ்ஜில், மத்திய அமைச்சகம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நீக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விரைவில் எம்.பில் படிப்புகளையும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை மறுத்துள்ள மத்திய அரசு, மத்திய அமைச்சகம் எந்த ஒரு மாற்றமும் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து செய்யவில்லை. தேர்வு நீக்கப்பட்டதாக வெளியான போலி செய்தி குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.
மத்திய அரசு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த போலி செய்திகளை உறுதிப்படுத்தும் பி.ஐ.பி அமைப்பு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு பாரத் பந்த் என்ற பொது முடக்கத்தை இந்தியா முழுவதும் 7 நாட்கள் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு பொதுமுடக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. போலி செய்தி பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த போலி செய்திகளை உறுதிப்படுத்தும் பி.ஐ.பி அமைப்பு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.
एक फर्जी तस्वीर में दावा किया जा रहा है कि 21 मार्च से अगले 7 दिनों तक पूरे देश में भारत बंद का फैसला लिया गया है#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) March 21, 2022
▶️ यह दावा फर्जी है
▶️ केंद्र सरकार द्वारा भारत बंद का फैसला नहीं लिया गया है
जुड़ें हमारे #telegram चैनल से
🔗https://t.co/zxufu1aRNOpic.twitter.com/g390CVhdoo
கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்க்கு பதில் சுரேஷ் ரெய்னா குஜராத் அணியில் களமிறங்கவுள்ளதாக செய்தி பரவுகிறது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்த ஐபிஎல் தொடருக்காக நடத்தப்பட்ட மெகா ஏலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்பட்ட சி.எஸ்.கே அணி வீரர் ரெய்னா தேர்ந்தெடுக்கப்படவில்லை.
சி.எஸ்.கே அணி உட்பட எந்த அணியும் ரெய்னாவை வாங்க முன்வரவில்லை. இதற்கு காரணம் அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதது தான் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக சுரேஷ் ரெய்னா குஜராத் டைடன்ஸ் அணிக்கு விளையாடவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன.
குஜராத் அணிக்காக விளையாட இருந்த ஜேசன் ராய் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதில்லை என அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் ரெய்னா குஜராத் அணியில் இடம்பெறவுள்ளதாக ஐபிஎல் கணக்கு போலவே உள்ள போலி ட்விட்டர் கணக்கு மூலம் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ந்ததில் இந்த செய்தி உண்மை இல்லை என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் இடம்பெறப்போவதில்லை என தெரிய வந்துள்ளது.
டாங்கிகள் குண்டு போடும் வீடியோ கேம் காட்சிகளை சிலர் உண்மையான வீடியோக்களுடன் சேர்த்து எடிட் செய்து உண்மையான போர் காட்சி போல சித்தரித்துள்ளனர்.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 24 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா தொடர்ந்து முக்கிய நகரங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரஷிய விமானங்கள் மீது உக்ரைன் டாங்கிகள் தாக்குதல் நடத்துவதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அந்த வீடியோவில் வானில் பறந்தபடி இருக்கும் ரஷிய விமானங்கள் மீது உக்ரைன் டாங்கிகள் தாக்குதல் நடத்துவதை போல காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவை இதுவரை 28 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
அந்த வீடியோ ஆர்மா 3 என்ற வீடியோகேமில் இடம்பெற்றுள்ள காட்சி. அந்த வீடியோ கேமில் ராணுவ விமானங்கள், டாங்கிகள் தத்துரூபமாக இடம்பெற்றிருக்கும். வீடியோ கேம் டாங்கிகள் குண்டு போடும் காட்சிகளை சிலர் உண்மையான வீடியோக்களுடன் சேர்த்து எடிட் செய்து, உண்மையான போர் காட்சி போல சித்தரித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில வீடியோ கேம்களின் காட்சிகளை எடுத்து ரஷிய-உக்ரைன் போர் என சித்தரித்து வீடியோக்கள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு அத்வானி அழுததாக வெளியான வீடியோவை பா.ஜ.க தலைவர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தி திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
இத்திரைப்படம் 1989 முதல் 1990 ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்த காஷ்மீரி இந்து பண்டிட்களின் வாழ்க்கையை பேசுகிறது. இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் பிரசாரம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இப்படத்தை பார்த்துவிட்டு பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானி அழுததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
அந்த வீடியோவை பாஜக தலைவர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ குறித்து வெளியான தகவல் உண்மையில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க தலைவர் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு அழுதது உண்மை தான். ஆனால் அவர் காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்தை பார்த்து அழவில்லை. 2020-ம் ஆண்டு, அப்போது வெளியான ஷிகாரா என்ற படத்தை பார்த்துவிட்டு அத்வானி அழும் காட்சிகள் தான் இப்போது தவறாக பரபப்பட்டு வருகின்றன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுவதாக வெளியான செய்தி குறித்து மத்திய அரசும், எஸ்.பி.ஐ வங்கியும் விளக்கம் அளித்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மூலம் வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கவுள்ளதாக இந்தி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.
இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பத்திரிகையில் வெளியான செய்தியில் மாண்புமிகு பிரதமரின் முயற்சியால் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், பிரதமருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்போம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு வட்டியில்லாமல் விவசாயிகளுக்கு கடன் எதுவும் வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்த செய்தி குறித்து எஸ்பிஐ வங்கி அளித்த விளக்கத்தில், விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கு மத்திய அரசின் மானியத்தின் மூலமாக 2 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெற முடியும். ஆனால் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மற்றொரு செய்தி ஒன்றில் மத்திய அரசு ரூ.3 லட்சம் வரை வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி என்ற விகிதத்தில் கடன் வழங்குவதாகவும் வெளியாகி இருந்தது. இந்த கடனை பெறுவதற்கு விவசாயிகள் ஏற்கனவே வாங்கிய கடனை சரியான நேரத்திற்கு செலுத்தி இருக்க வேண்டும். இதன்மூலம் அடுத்தமுறை கடன் வாங்கும்போது 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி செலுத்தினால் போதும் என கூறியிருந்தது.
தற்போது இந்த செய்தியும் உண்மை இல்லை என உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த உ.பி தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதால் மனமுடைந்த 3 சகோதரர்கள் தூக்கில் தொங்கியதாக புகைப்படங்கள் இணையத்தில் உலவி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை வெற்றி பெற்றது. பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் பா.ஜ.கவின் வெற்றியால் மனமுடைந்த மூன்று சகோதரர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.

அறையில் தற்கொலை செய்துகொண்டதாக வெளியான புகைப்படங்கள் 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும், இறந்தவர்களுக்கும் உத்தரப்பிரதேச அரசியல் கட்சிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ஆதரவு வேண்டி ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தென் கொரிய அதிபரை சந்தித்தாக வீடியோவில் கூறப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 2 வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் போருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ரஷியா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
இதையடுத்து தனது நாட்டிற்கு ஆதரவு வேண்டி ரஷிய அதிபர் புதின் தென் கொரியா அதிபரை சந்தித்தது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருக்கும் தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் உலவி வரும் வீடியோ 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதேபோன்று அந்த வீடியோவில் இருப்பது தென் கொரிய அதிபர் இல்லை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். ரஷியாவிற்கு வருகை புரிந்த வட கொரிய அதிபரை புதின் சந்திக்கும் வீடியோவை பகிர்ந்து பலரும் பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பா.ஜ.க முறைகேடு செய்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை பா.ஜ.க மாற்றிவிட்டதாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியது.
அதிகாரிகள் சிலர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் வைத்து எடுத்து செல்வது போன்ற புகைப்படங்கள், வீடியோக்களை சமாஜ்வாடி கட்சி வெளியிட்டது. இதையடுத்து பா.ஜ.க வாக்குகளை திருடிவிட்டதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகாரிகளின் பயிற்சிக்காக எடுத்து செல்லப்பட்டது என வாரணாசி ஆணையர் தீபக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வது போல வெளியான புகைப்படங்களை கூர்ந்து கவனித்தால், அதில் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் என குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயிற்சிக்காக எடுத்து செல்லும்போது அவற்றை பார்வையிட அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கும் . மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். அதனால் வாக்கு எண்ணிக்கையில் எந்த விதிமீறல்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.






