என் மலர்tooltip icon

    உண்மை எது

    • ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது.
    • மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    புது டெல்லி:

    இந்தியாவில் ரெயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டபோது அனைத்து கட்டண சலுகைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

    பின் ரெயில் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், 11 விதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் ரயில் பயணத்தில் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை ரத்து செய்ததால் அரசுக்கு கூடுதலாக 1500 ரூபாய் கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட கட்டண சலுகை மீண்டும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என ரெயில்வே அமைச்சகம் இணையத்தில் மறுத்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயிலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை அமலுக்கு வர உள்ளதாக பொய்யான ஊடக தகவல் தெரிவிக்கிறது. இது போன்ற எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் & மாணவர்களுக்கு மட்டுமே பயண கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது.

    எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில தினங்களாக நாட்டின் சில பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்ததால், தாமதத்திற்கு வழிவகுத்தது. மேலும், வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம் அதிகமானது. இது, எண்ணெய் நிறுவனங்களின் விநியோக கட்டுப்பாடுகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்தது.

    எனினும், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதிய அளவில் உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தேவை அதிகரித்திருப்பதால், உள்ளூர் மட்டத்தில் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது. இந்த பிரச்சனைகளை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

    எண்ணெய் விநியோக நிறுவனங்கள் இந்த கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பதை உறுதி செய்கின்றன. அத்துடன் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளன.

    சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இந்த மாதத்தின் முதல் பாதியில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாநிலங்கள், தனியார் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் அதிக அளவில் சப்ளை செய்யப்படும் மாநிலங்கள் ஆகும். அதாவது, டெர்மினல்கள் மற்றும் டெப்போக்களிலிருந்து அதிக தூரத்தில் இந்த மாநிலங்கள் உள்ளன.

    இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம் கூறி உள்ளது.

    • தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
    • இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சீபுரம்:

    இணையதளங்களில் தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என போலி தகவல் பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் Animal Handler and Animal Handler cum Driver பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- எனவும் தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் புலனம் (Whatsapp) செயலி மற்றும் முகநூல் மூலம் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.

    இம்மாதிரியான இணையதளங்களில் கால்நடை பராமரிப்புத்துறை குறித்து வரும் போலியான அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் போலியான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்

    • பாஜக செய்திதொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.
    • அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை பதிவு செய்தன.

    தோகா:

    பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தை வெளியிட்டது தொடர்ந்து முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவரது கருத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டங்களை தெரிவித்தன. இதையடுத்து நுபுர் ஷர்மா செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருடைய கருத்துக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என பா.ஜ.க தெரிவித்தது.

    இந்நிலையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கத்தார் அரசு அந்நாட்டில் பணியாற்றும் இந்து தொழிலாளர்களை வெளியேற்றி வருவதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோ உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் ரெட்கோ இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்ட சம்பள அறிக்கைக்கு எதிராக, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராடினர். அந்த வீடியோ தற்போதுள்ள நுபர் சர்மா விவகாரத்துடன் இணைக்கப்பட்டு போலியாக பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பத்திரிகை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய பங்களிப்பு  ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த அரசு ஊழியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். புதிய பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். 

    இந்நிலையில், மே 29ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாகவும், அக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பரவி வருகிறது. அந்த அறிக்கையில், 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்குவதற்கு தேவையான நிதி மத்திய பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர், அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆனால், வாட்ஸ் அப் மூலம் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியானது என பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) தெரிவித்துள்ளது. 

    ‘மே 29-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவோ அல்லது பரிந்துரையோ மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என பிஐபி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
    தவறான மற்றும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் வாரியம் கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி. எம்.எஸ். படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவ மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. 

    இந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 9 ஆம் தேதிக்கு முதுநிலை நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் வாரியம் வெளியிட்டதாக கூறி ஒரு அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதன் அடிப்படையில் செய்திகள் வெளியிடப்பட்டன.

    ஆனால், இந்த நோட்டீசின் உண்மைத்தன்மை குறித்து பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) ஆய்வு செய்ததில், அது போலியானது என தெரியவந்தது. இத்தகவலை பத்திரிகை தகவல் மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அத்துடன், முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை என்றும், மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் கூறி உள்ளது.

    தவறான மற்றும் போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வுகள் வாரியம் கூறி உள்ளது. 

    அறிவிப்புகளை தனது இணையதளத்தில் மட்டுமே (https://natboard.edu.in) வெளியிடுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் கூறி உள்ளது. தேர்வுகள் வாரியம் தொடர்பான தற்போதைய மற்றும் உண்மையான தகவல்களுக்கு இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    இதற்கிடையே, கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவ மாணவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 15000 மாணவர்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
    இம்ரான்கான் பதவி விலகல் நிகழ்வை அமெரிக்க அதிபர் ஜோபைடன் டிவியில் பார்த்து கொண்டாடுவது போல இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
    பாகிஸ்தானில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரை தொடர்ந்து ஷெபாஸ் ஷரிப் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிகழ்வை அமெரிக்க அதிபர் ஜோபைடன் டிவியில் பார்த்துகொண்டாடுவது போல இணையத்தில் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜோ பைடனுடன் கருப்பின பெண்மணி ஒருவரும் இருக்கிறார்.

    இந்நிலையில் அந்த வீடியோவில் பகிரப்படும் தகவல் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

    இந்த வீடியோவில் இருக்கும் காட்சி, அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் கருப்பின பெண்மணி ஒருவர் முதல்முறையாக நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது எடுத்தது. வீடியோவில் ஜோ பைடனுடன் இருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் நீதிபதி கென்டஜி பிரவுன் ஜாக்சன் ஆவார். இதை இருவரும் கொண்டாடுகின்றனர். 

    இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை ஜோ பைடன் கொண்டாடுவது போல காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மோசடி நடைபெறுவதாக பரவி வரும் இந்த வீடியோ சிசிடிவி கேமராவில் படம்பிடித்திருப்பது போலவே காட்டப்படுகிறது.
    வட இந்தியாவில் பேருந்து நிலையம் ஒன்றில் பெண்மணி ஒருவர் அமர்ந்திருக்கும் பயணிகளிடம் சென்று கோயில் பிரசாதத்தை வழங்கிகிறார். அதை ஒரு பெண் சாப்பிட்டுவிட்டு மயங்கி விழுகிறார். அந்த பெண்ணிடம் இருந்து சிலர் நகைகளை திருடி செல்கின்றனர்.

    இந்த காட்சிகளை கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சிசிடிவி கேமராவில் படம்பிடித்திருப்பது போலவே காட்டப்படுகிறது. இந்த சிசிடிவி தோற்றம் இந்த வீடியோவிற்கு ஒரு உண்மை தன்மையை வழங்குகிறது.

    இந்த வீடியோவை பகிரும் பலர், இதுபோன்ற பிரசாதங்களை கொடுத்து கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த காட்சி அணைத்தும் உண்மையில்லை. ஏற்கனவே திட்டமிட்டு எடுக்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது.

    இதன்படி 3rd Eye என்ற யூடியூப் சேனல் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்ததற்கு நன்றி, இந்த சேனலில் எழுதி இயக்கப்பட்ட வீடியோக்கள் இருக்கின்றன. சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என வீடியோவில் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது என பொதுத்துறை வங்கி ஒன்று விளக்கம் அளித்துள்ளது.
    நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு வட்டியே இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கி வருகிறது என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதாக வெளியான ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகிறது

    இந்நிலையில் அந்த ஸ்கிரீன்ஷாட்டில் கூறப்பட்டுள்ள செய்தி உண்மையில்லை என தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து பொதுத்துறை வங்கி ஒன்று அளித்த விளக்கத்தில், விவசாயிகளுக்கு 9 சதவீத வட்டியில் தான் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்த கடனுக்கு மத்திய அரசின் மானியத்தின் மூலமாக 2 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெற முடியும்.

    ஆனால் வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுவதில்லை. பூஜ்ஜிய வட்டியில் வங்கி கடன் என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ரன்கள் அடிப்பவர்களுக்கு ஆரஞ்ச் கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுவது வழக்கம்.
    ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவில் 10 அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ரன்கள் அடிப்பவர்களுக்கு ஆரஞ்ச் கேப், அதிக விக்கெட் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படுவது வழக்கம்.

    இந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கு மிக்ஸுடு கேப் வழங்கப்படவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தொப்பி ஆரஞ்ச், பர்ப்பிள் இரண்டும் கலந்த நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி பிசிசிஐ இந்த மிக்ஸுடு கேப் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஐபிஎல் நிர்வாகத்திடம் இருந்தும் எந்த தகவலும் கூறப்படவில்லை.

    இணையதளங்கள் மிக்ஸ்டு கேப் என்ற பொய்யான செய்தியை வழங்கி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
    சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.

    அக்கட்சியை சேர்ந்த பகவாந்த் மான் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இளைஞராக இருந்தபோது பைக் திருட்டு வழக்கு ஒன்றில் பகவாந்த் மான் கைது செய்யப்பட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த புகைப்படத்தில் பகவாந்த் மான் உள்ளிட்ட மூன்று பேர் தரையில் அமர்ந்துள்ளனர். 12 வருடத்திற்கு முன் இந்த கைது நடவடிக்கை நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என தெரியவந்துள்ளது. கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் பரிசோதனை செய்ததில் இந்த புகைப்படத்தை பஞ்சாப் பாடகர் காராம்ஜித் அன்மோல் என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் 15 வருடத்திற்கு முன் பகவாந்த் மானுடன் ஹோலி கொண்டாட்டத்தின்போது எடுத்த நினைவு என்றும் பகிர்ந்துள்ளார்.

    அந்த புகைப்படத்தை தரவிறக்கம் செய்த சிலர், இது கைது செய்யப்பட்டபோது எடுத்ததாக போலி தகவல்களை பரப்பி வருகின்றனர்.
    இந்த வீடியோவை பதிவிட்ட ஃபேஸ்புக் கணக்கு ஒன்று விதி அனைத்தையும் மாற்றிவிட்டது என கூறியிருந்தது.
    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு கடந்த 35 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்த நடத்தப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

    ரஷிய படைகளை பின் வாங்க வலியுறுத்தியும், உலக நாடுகளை உதவக்கூறியும் வேண்டி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளியில் பேசி வருகிரார்.

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நகைச்சுவை நடிகராக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின் கலந்துகொண்டு மகிழ்ந்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 16 நொடிகள்  உள்ள அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி மேடையில் நகைச்சுவையாக பேசுகிறார். புதின் பார்வையாளர்களுடன் அமர்ந்து சிரித்து மகிழ்கிறார்.

    இதை பதிவிட்ட ஃபேஸ்புக் கணக்கு ஒன்று விதி அனைத்தையும் மாற்றி விட்டது என பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த வீடியோவில் காட்டப்படும் காட்சி உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இரண்டு வெவ்வேறு காட்சிகளை எடிட் செய்து ஒன்றாக இணைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெலன்ஸ்கியின் வீடியோ 2012-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், அந்த வீடியோ ஒரு மணி நேரத்திற்கும் மேல் உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் ஒரு இடத்தில் கூட புதின் இடம்பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று புதின் அமர்ந்திருக்கும் வீடியோ 2006-ம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதியாகியுள்ளது.

    இதனால் இணையத்தில் பரவி வரும் வீடியோ உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×