என் மலர்
உண்மை எது
ரோமானியா எல்லையில் இருந்து 35 மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நிதி உதவி செய்ததாக வெளியான செய்தி உண்மை இல்லை என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது உண்மை தெரிய வந்துள்ளது.
ரஷியா- உக்ரைனுக்கு எதிரான போர் தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை காப்பாற்ற இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் 4-ம் தேதி ரோமானியா எல்லையில் இருந்து 35 இந்திய மாணவர்களை அழைத்து வர தமிழக அரசு நிதியுதவி செய்ததாக ட்விட்டரில் பிரபல செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் கஞ்சன் குப்தா இந்த செய்தி உண்மை இல்லை என சாடியிருந்தார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரோமானிய எல்லையில் இருந்த 35 மாணவர்களை காப்பாற்ற தலா ரூ.38,000 என 35 பேருக்கு போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்றதாக தெரியவந்துள்ளது.
மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது உண்மைதான், ஆனால் 35 மாணவர்களுக்கு தமிழக அரசு தான் நிதியுதவி செய்தது என திமுகவின் என்.ஆர்.ஐ பிரிவு விளக்கம் அளித்துள்ளது. இவற்றை உக்ரைனில் மாணவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்த மருத்துவர் விஜயகுமார், தமிழக அரசின் புலம்பெயர் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் ஜசிந்த லசாரஸ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 35 மாணவர்களில் ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சீன செய்தி ஊடகம் ஒன்று ரஷியாவுக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 12 நாட்களை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த குளோபல் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியா ரஷியாவுக்கு ஆதரவாக இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள குதுப்மினாரில் ரஷிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒளிவிளக்குகளால் இந்திய அரசு அலங்கரித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த அலங்கரிப்பு மத்திய அரசின் நிகழ்ச்சி ஒன்றிருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும், அது ரஷியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலோ, ரஷிய கொடியை பிரதிபலிக்கும் வகையிலோ இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா திரும்பிய மாணவர்களிடம் ரஷிய அதிபர் புதினே நேரில் சென்று ஆறுதல் கூறியதாக வீடியோ உலவி வருகிறது.
புக்கரெஸ்ட்:
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 12 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் பலரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மீட்டு வருகிறது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா திரும்பிய மாணவர்களிடம் ரஷிய அதிபர் புதினே நேரில் சென்று ஆறுதல் கூறியதாக இணையத்தில் வீடியோ ஒன்று உலவி வருகிறது.
அந்த வீடியோவில், “ரஷிய அதிபர் புதின் நேரடியாக விமானத்திற்கு சென்று இந்தியர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்தியாவுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை காணுங்கள். இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடி சிறந்தவர்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வீடியோவில் உள்ள தகவல் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருந்தவர் ரோமானியா நாட்டிற்கான இந்திய தூதரான ராகுல் ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஆவார். அவர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீட்கப்பட்ட மாணவர்களிடம் சென்று உரையாடுகிறார்.
வீடியோவில் அவரது முகம் தெரியாததால் அவரை புதின் என கூறி சிலர் தவறான போலி செய்தியை தற்போது பரப்பிவிட்டனர் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#WATCH | "...Entire GoI is working day & night to evacuate everyone and our mission is not complete till we have evacuated the last person. Remember this day 26th Feb in your life...," Rahul Shrivastava, Indian Ambassador in Romania to the evacuated Indians from #Ukrainepic.twitter.com/Ro4pBGrB76
— ANI (@ANI) February 26, 2022
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அழகி அனஸ்டாசியா இணைந்து தேசத்திற்காக சண்டையிடுவதாக செய்திகள் பரவத்தொடங்கின.
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா இன்று 9-வது நாளாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் கடுமையாக போர் செய்து வருகின்றனர். சுமார் 6000 ரஷியா ராணுவ வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனிலும் கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை காப்பாற்ற உக்ரைன் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவ்வாறு போருக்கு வரும் மக்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்படும் என கூறினார். இதனால் உக்ரைன் நாட்டு பெண்களும் ராணுவத்தில் இணைந்து போர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முன்னாள் அழகி அனஸ்டாசியா லென்னா, துப்பாக்கியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு #standwithukraine, #handsoffukraine ஆகிய ஹேஷ்டேகில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து ரஷியாவுக்கு எதிரான போரில் அனஸ்டாசியாவும் துப்பாக்கி ஏந்தி தேசத்திற்காக சண்டையிடுவதாக செய்திகள் பரவத்தொடங்கின.
இந்நிலையில் தான் போருக்கு எல்லாம் போகவில்லை என்று அனஸ்டாசியா லென்னா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் ராணுவ வீராங்கணை அல்ல, சாதாரணப் பெண். என் நாட்டிலுள்ள எல்லா மக்களைப் போலவே நானும் ஒருத்தி. நான் பல வருடங்களாக ஏர்சாஃப்ட் விளையாடுகிறேன். அங்கு தரப்பட்ட துப்பாகியுடன் நான் பதிவிட்ட படங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டன. நான் அனைத்து படங்களையும் மக்களை ஊக்குவிக்கவே பகிர்ந்தேன்.
உக்ரைன் பெண்கள் வலிமையான, நம்பிக்கையான மற்றும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை காட்டுவதை தவிர வேறு எந்த பிரசாரத்தையும் அந்த புகைப்படம் மூலம் நான் செய்யவில்லை. உக்ரைனில் உள்ள அனைத்து மக்களும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒவ்வொரு நாளும் போராடுகிறோம்.
இவ்வாறு அனஸ்டாசியா லென்னா தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடவில்லை என்பதை உறுதி செய்துகொண்டார்.
சீனாவும், ரஷியாவும் இணைந்தே இந்த போரில் ஈடுபட்டு வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
பெய்ஜிங்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா இன்று 8-வது நாளாக போர் செய்து வருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷியாவிற்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்துவிட்டன. மேலும் ரஷிய நாட்டு தயாரிப்புகள், சேவைகள் மீதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடையை அறிவித்துவிட்டன.
இந்நிலையில் சீனாவும், ரஷியாவும் இணைந்தே இந்த போரில் ஈடுபட்டு வருவதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே தெரியும் என்றும், ரஷிய அதிகாரிகளை தொடர்புகொண்ட சீன அரசாங்கம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கு பிறகு உக்ரைன் மீது படையெடுக்க வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை ஜோ பைடனின் நிர்வாகமும், ஐரோப்பிய அதிகாரிகளும் கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை என சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷியாவின் உக்ரைனுக்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் பலரும் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதற்காக அவர்களும் ரஷியாவுடன் இணைந்து செயல்படுவதாக கூறிவிட முடியுமா என சீனா கேட்டுள்ளது.
மத்திய மந்திரி அமித்ஷா பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புது டெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "பிரதமர் மோடி ஏழையின் நலத்திற்காக 24 மணி நேரம் தூங்குவார். மம்தா பானர்ஜியோ தனது மருமகனை எப்போது முதலமைச்சர் ஆக்கலாம் என யோசித்து கொண்டிருப்பார்" என பேசுவது போல இருக்கிறது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையான வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேசியபோது எடுத்ததாகும். அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசும் அமித்ஷா, ‘பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக 24 மணி நேரம் சிந்தித்துகொண்டிருப்பார். மம்தாவோ தனது மருமகனை முதலமைச்சர் ஆக்குவது குறித்து சிந்தித்துகொண்டிருப்பார்’ என பேசியுள்ளார்.
இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு சிந்தித்துகொண்டிருப்பார் என்பதை தூங்குவார் என மாற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி கேப்டன் பதவி விவகாரத்தில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி மீது சிலர் விமர்சனம் எழுப்பிய நிலையில், தேர்வுக்குழுவில் இடம் பெற்றதாக வெளியான படம் சர்ச்சையை கிளப்பியது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டதில் இருந்து திறம்பட செய்து வருகிறார். இவர்தான் முதன்முறையாக இந்திய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை அறிமுகப்படுத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சில தொடர்களை நடத்த முடியாத நிலையில் ஏற்பட்டது. கடந்த சீசன் ரஞ்சி கோப்பை தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரில் பெண்கள் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் வழங்கியதாக கூறப்பட்டது.
விராட் கோலி கேப்டன் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான், கிரிக்கெட்டில் தாதாவாக செயல்பட்ட கங்குலி, கிரிக்கெட் வாரியத்திலும் தாதாவாக செயல்பட்டு வருகிறார். வீரர்கள் தேர்வில் தலையிடுகிறார் விமர்சனம் எழுந்தது. உச்சக்கட்டமாக வீரர்கள் தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் படம் ஒன்று பரவி வருகிறது.
தற்போது, அந்த படம் தேர்வுகுழு அணியை தேர்வு செய்யும்போது எடுத்தப்படம் அல்ல என சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ஆதாரற்ற குற்றச்சாட்டிற்கு மதிப்பளித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நான் பிசிசிஐ தலைவர். தலைவராக பிசிசிஐ-க்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்கிறேன்.
மேலும், நான் தேர்வுக்குழு உறுப்பினர்களுடன் இருக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.
விராட் கோலி, ரோகித் சர்மா, ஜெய் ஷா ஆகியோருடன் நான் இருக்கும் படம் தேர்வுக்குழு கூட்டத்தின்போது எடுத்த படம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

ஜெயேஷ் ஜார்ஜ் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக இல்லை. இந்தியாவுக்காக நான் 424 சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ளேன். இந்த நேரத்தில் மக்களிடம் இதுகுறித்து நினைவூட்டுவது மோசமான ஐடியா இல்லையா?’’ என்றார்.
இதையும் படியுங்கள்... 4 வீரர்கள் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிப்பு - இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்ப்பு
பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலம் பற்றி சமூக வலைதளங்களில் வைரலான தகவல்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது.
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடலநல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக கூறும் தகவல் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளை தொடர்ந்து லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் அவரது உடல்நலம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது
அதன்படி லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாக கூறிய தகவல்களில் துளியும் உண்மையில்லை. அவர் ஐ.சி.யு.-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருகிறது. மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
92-வயதான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மெலோடி குயின் என பிரபலமாக அறியப்படுகிறார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறித்து வைரலான தகவலில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
லதா மங்கேஷ்கருக்கு 2001 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாகேப் பால்வே மற்றும் ஏராளமான தேசிய விருதுகளை இவர் வென்று இருக்கிறார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டதாக கூறி டுவிட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தான் ராவணன் என அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டரில் பதிவிட்டதாக கூறி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக அகிலேஷ் யாதவ் சகோதரி பா.ஜ.க. கட்சியில் இணைந்ததை தொடர்ந்து டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
'சகோதரியை கட்சியில் சேர்த்துக் கொண்டதால் தேர்தலில் எங்களை வீழ்த்தி விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. ராவணன் விபிஷினிடம் ஒரேமுறை தான் தோல்வியுற்றார் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாங்கள் யாதவர்கள், நான் பலமுறை ராமாயனத்தை படித்திருக்கிறேன்,' என வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் இடம்பெற்று இருக்கும் பதிவை அகிலேஷ் யாதவ் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில், வைரல் டுவிட்டர் பதிவு இடம்பெற்று இருக்கும் அக்கவுண்ட் அகிலேஷ் யாதவுக்கு சொந்தமானது இல்லை. அந்த வகையில் அகிலேஷ் யாதவ் பதிவிட்டதாக கூறும் ஸ்கிரீன்ஷாட் போலியாது என உறுதியாகிவிட்டது.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கொரோனாவரஸ் தடுப்பூசியை திரும்ப பெற கூறியதாக வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் தடுப்பூசி பற்றிய உண்மை விவரங்களை பில் கேட்ஸ் தெரிவித்ததாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. தடுப்பூசிகள் நாம் கற்பனை செய்ய முடியாத வகையில் ஆபத்தானது என பில் கேட்ஸ் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில், ஆகஸ்ட் 2021 முதல் தடுப்பூசி பற்றி பில் கேட்ஸ் கூறியதாக இந்த தகவல்கள் வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. இவை நகைச்சுவை வலைதளம் ஒன்றில் கேலியாக பதிவிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு உருவாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் பில் கேட்ஸ் கொரோனாவைரஸ் தடுப்பூசியை திரும்ப பெற வேண்டும், அவை நாம் கற்பனை செய்ய முடியாத வகையில் ஆபத்தானவை என்று கூறியதாக வைரலான தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
பெருந்தொற்று துவங்கியது முதல் தடுப்பூசி எடுத்துக் கொள்வதின் முக்கியத்துவம் பற்றி பில் கேட்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கொரோனாவைரஸ் சார்ந்த பெரும்பாலான போலி தகவல்கள் பில் கேட்ஸ் மற்றும் அவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தை தொடர்புப்படுத்தியே வைரலாகி வருகின்றன.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் வீடியோக்கள் முன்னணி வீடியோ ஸ்டிரீமிங் தளமான யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என கூறும் தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
வீடியோக்கள் மட்டுமின்றி, ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல்கள் அடங்கிய ஸ்கிரன்ஷாட்களும் இணையத்தில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்த இணைய தேடல்களில் வைரலாகும் வீடியோக்கள் மற்றும் ஸ்கிரன்ஷாட்களை நம்ப வேண்டாம் என மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு காணக்கிடைத்தது.

இத்துடன் இதுபோன்று உண்மையற்ற தகவல்கள் அடங்கிய பதிவுகளை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் பி.ஐ.பி. டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக கூறும் வீடியோக்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
நாம் தமிழர் கட்சியினர் அந்த அட்டையை திருப்பி கொடுத்திடுங்க என்று சீமான் கூறியதாக வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் கட்சியினரிடம், குடும்ப அரட்டை வேண்டாம் என எழுதி கொடுக்க வேண்டும் என கூறியதாக தந்தி டி.வி. செய்தி ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் தந்தி டி.வி. நியூஸ் கார்டு பின்னணியில் சீமான் புகைப்படம், தலைப்பில் நியாயவிலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பின், நாம் தமிழர் கட்சியினர் குடும்ப அட்டை வேண்டாம் என எழுதி கொடுக்க வேண்டும் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

இது குறித்த இணைய தேடல்களில் வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள நியூஸ் கார்டை தந்தி டி.வி. வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றிய பதிவும் தந்தி டி.வி. அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் சீமான் கூறியதாக வைரலான பதிவை தந்தி டி.வி. வெளியிடவில்லை என உறுதியாகிவிட்டது.






