search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி தகவல்"

    • ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.
    • கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.

    மொத்தம் 47 பக்கங்கள் கொண்ட இந்த அறிவிப்பில் ஆன்லைன் விண்ணப்பபதிவு ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கும் என்றும், மே 14-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் இது வெளியானது.

    இது குறித்து விசாரித்தபோது அரசு சார்பில் இது வெளியிடப்படவில்லை என தெரியவந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் டி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அதுபோன்று எந்த அறிவிப்பும் துறையால் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    இருந்தாலும் போலியான அறிவிப்பு வெளியானதால் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நியமன தேர்வுக்கான அறிவிப்பு தேர்வு வாரியத்தால் தயார் செய்யப்பட்டு அது முன்கூட்டியே 'லீக்' ஆகிவிட்டதா? அல்லது போலியான அட்டவணையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×