search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூக்கடைப்பு"

    • நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
    • கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

    மழைக்காலம் என்றாலே `ஜில்' என்ற உணர்வும், மகிழ்வும் தோன்றும். தென்றல் காற்று மெல்ல வாடைக்காற்றாக வீசி தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும். உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும். மழையில் நனைந்து ஆட்டம் போட விரும்புவர்களுக்கு இது உற்சாக காலம்.

    மழைக்காலத்தை பலர் விரும்பினாலும், அப்போது தோன்றும் சில நோய்கள் மக்களை வாட்டுவதும் உண்டு. மழைக்காலத்தை அனுபவிக்கும் அதேநேரத்தில், அந்தக்காலத்தில் வரும் நோய் ஆபத்துகள், பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது. நமது வீட்டின் சமையல் அறையின் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக்கொண்டே நோய்களை நம் முன்னோர்கள் விரட்டியடித்துள்ளனர். அத்தகைய மகத்துவம் நிறைந்த சித்த மருத்துவம் எந்த அளவுக்கு மழைக்காலத்தில் நமக்கு பலன் தரும் என்பதை பார்ப்போம்.

    டெங்கு காய்ச்சல்

    ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, இந்நோய் கடுமையான காய்ச்சல், வாந்தி, எலும்பு வலி, கண்களுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்நிலை தீவிரமானால் உயிரிழப்பு கூட ஏற்படும். ஆகவே காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

    உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க உதவும் ஆடைகளை அணியவும்.

    மருந்துகள்:

    சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் - பெரியவர்கள் 60 மி.லி. வீதம் இருவேளையும், சிறுவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். ரத்த தட்டணுக்கள் குறைந்தால் கூடவே பப்பாளி இலைச்சாறு பெரியவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 10 மி.லி. வீதம் இருவேளை சுவைக்காக தேன் கலந்து குடிக்க வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு, பெரியவர்கள் 15 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 5 மி.லி. வீதம் இருவேளை குடிக்க நல்ல பலனை தரும்.

    சிக்குன்குனியா

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் சிக்குன்குனியா. ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் காய்ச்சல் அடிக்கத்தொடங்கும். அப்போது, கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், உடல் சோம்பல், பலவீனம் காணப்படும்.

     மருந்துகள்:

    சிக்குன்குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீருடன், அமுக்கரா மாத்திரை, வாத ராட்சசன் மாத்திரை, விஸ்ணு சக்கர மாத்திரைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    தலைபாரம், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள்

    மழைக்காலத்தில் தலைநீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோயில் கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.

    மருந்துகள்:

    சுத்தமான உப்புநீர்க் கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் மஞ்சள்தூள் போட்டு போர்வையால் நன்கு மூடிக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அல்லது நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.

    தாளிசாதி சூரணம் 1 கிராம் அல்லது திரிகடுக சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். தலைக்கு தேய்த்து குளிக்க சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் இவற்றில் ஒரு மருந்தை பயன்படுத்தலாம்.

    சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்:

    மழைநீரில் நனைந்தாலும் அல்லது தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்துக்கொள்ள வேண்டும். இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயிறு வகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

    ஜன்னலோர பஸ் பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    ஆஸ்துமா

    மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். தூசி, புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது.

    இரைப்பு நோயை குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

    சித்த மருந்துகள்:

    1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    பொதுவான நோய் தடுப்புமுறைகள்

    பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவற்றை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலை பயன்படுத்துவது நல்லது.

    சேற்றுப்புண்

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு பாதிப்பு, 'சேற்றுப்புண்' ஆகும். இந்நோயில் விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்தில் புண்கள் மற்றும் நீர்க்கசிவு, அரிப்பு, வலி இவை காணப்படும். சேற்றுப்புண் பாதித்த பகுதிகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி படிகார நீர் விட்டு துடைத்து, கிளிஞ்சல் மெழுகு அல்லது வங்க வெண்ணெய் போட்டு வர, சேற்றுப்புண் ஆறி வரும்.

    தொண்டை வலி

    மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இந்நோயால் தொண்டைவலி, குரல் கம்மல் இவற்றுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன.

    இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்து வரவேண்டும். சூடாக தேநீர், காபி அடிக்கடி இந்நேரங்களில் குடிக்கலாம்.

    மருந்துகள்:

    பூண்டு சிறிதளவு எடுத்து, அதை இடித்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து லேசாக நெருப்பில் வாட்டிப் பிழிய, அதிலிருந்து சாறு வரும். அதனுடன், சிறிதளவு தேன் கலந்து உள்நாக்கு அழற்சி உள்ள பகுதியில் காலை, இரவு என இருவேளைகளில் தடவி வர, தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். உள்நாக்கு அழற்சியும் குணமடையும்.

    ஆடாதோடை, மிளகு, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு என இருவேளை மென்று சாப்பிடலாம். சின்ன வெங்காயத்துடன், நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட உள்நாக்கு அழற்சி வலி மாறும். வெற்றிலை, கிராம்பு, மிளகு இதனுடன் உலர் பழங்கள் அல்லது நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட்டு வரவேண்டும்.

    தாளிசாதி வடகம், துளசி வடகம் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தொண்டை சதை அழற்சி நீங்கும். கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி நீங்கும்.

    பாலுடன் மஞ்சள், மிளகு கலந்து காலை, இரவு அருந்தலாம். முட்டையை வேகவைத்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்து சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் வைத்து சாப்பிடலாம். நோயற்ற வாழ்வுக்கு எப்போதும் வெந்நீரையே அருந்த வேண்டும்.

    • ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
    • குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

    ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் ஹெச்3என்2 காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தற்போது குழந்தைகளும், வயதானவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இவை சற்று தீவிரமான பாதிப்பையே உண்டு செய்கின்றன. இந்த காய்ச்சலை தவிர்க்க எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    இன்ஃப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை வைரஸ். நார்மலாக வரக்கூடிய சளி வகை போன்ற வைரஸ் தான் இது. எனினும் இதன் வீரியம் சற்று கூடுதலாக இருக்கும். இந்த ஹெச்3 என்2-ன் தாக்கம் இருந்தால் அதன் அறிகுறிகள் சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் இதனோடு அதிக காய்ச்சலும் இருக்கும்.

    பொதுவாகவே வைரஸ் காய்ச்சல் 3- 4 நாட்கள் வரை இருக்கலாம். ஆனால் இந்த ஹெச்3 என்2 வைரஸ் ஒரு வாரம் முதல் ௧௨ நாட்கள் வரை கூட ஆகலாம். அதோடு சில நாட்கள் வறட்டு இருமல் நீடிக்கவும் வாய்ப்புண்டு. அதோடு தற்போது மழையும், வெயிலும் பருநிலை மாறுவதால் இதன் வீரியம் அதிகரிக்கும். இதனுடன் மிதமான மழையும் சேர்ந்தால் அது பரவலை அதிகரிக்கச் செய்யும்.

    இதை எதிர்கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவியல் மற்றும் வாழ்வியல் முறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதே பாதுகாப்பானது. உதாரணத்துக்கு சாலையோரம் கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் போன்றவை வெயிலுக்கு இதமாக இருக்கும் என்றாலும் இவை நீண்ட நேரம் திறந்த நிலையில் இருப்பதால் இவற்றில் இருக்கும் கிருமித்தொற்றுகள் உடலில் பாதிப்பை உண்டு செய்யலாம்.

    வெயிலுக்கு ஏற்றது என்றாலும் கபத்தை உண்டு செய்யும் கொய்யாப்பழம், பால் சேர்ந்த பொருள்கள் குறைப்பது நல்லது. இதனோடு இரவு நேரங்களில் போதுமான தூக்கம் அவசியம் ஆகும்.

    குழந்தைகளுக்கு ஹெச்3 என்2 மட்டும் அல்லாமல் மற்ற தொற்றுகளையும் எதிர்க்கும் அளவுக்கு உடல் பலமாக இருக்க தினமும் பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு சளி தொற்று இருக்கும் போது, காய்ச்சல் இருக்கும்போது நீங்கள் தொடர்ந்து 10 நாட்கள் இந்த பூண்டு பால் கொடுக்கலாம். குழந்தைக்கு தொற்று நேராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை கொடுக்கலாம்.

    பூண்டு- ஒரு பல் எடுத்து தட்டிகொள்ளவும். அதில் பால் மற்றும் தண்ணீர் சம அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பூண்டு வேகும் வரை வைத்து பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து இனிப்பு தேவை என்றால் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுக்கலாம். தொற்று வந்த பிறகு தொடர்ந்து 10 நாட்கள் வரை இதை கொடுக்கலாம்.

    நுரையீரல் தொற்று பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கலாம். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் தொடர்பான கோளாறுகள், உடல் பருமன் கொண்டவர்களுக்கு தொற்று நேரும் அபாயம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் இன்னும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் நிலவேம்பு கஷாயமும், கபசுர குடிநீரும் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நேர்ந்தாலும் அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. காற்றில் கூட இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் என்பதால் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் தொற்று வராமல் தடுக்க முடியும்.

    கூட்டமான இடங்கள் என்றில்லாமல் எப்போதும் ஒரு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த ஹெச்3என்2 தொற்று மட்டுமல்ல வேறு எந்த வகை தொற்றையும் தடுக்கலாம்.

    ×