search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி செய்தி"

    • நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.

    இந்தியாவில் நர்சிங் படிப்பானது மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) சமம் என்றும், நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பியிருப்பதாக கூறி ஒரு சுற்றறிக்கை மற்றும் நியூஸ் கார்டு போன்ற இமேஜ் வைரலாகி வருகிறது.

    இந்த தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை கூகுள் மூலம் தேடும்போது, அதுபோன்ற எந்த செய்தியும் நம்பகமான ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை. இந்திய நர்சிங் கவுன்சில் இணையதளத்திலும் அப்படி ஒரு அறிக்கையோ சுற்றிக்கையோ வெளியிடப்படவில்லை.

    இதுதொடர்பாக மேலும் தேடுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துருவ் சவுகான் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பதிவில், இந்த சுற்றறிக்கை போலியானது என குறிப்பிட்டிருந்தார்.

    மத்திய சுகாதாரத்துறையும் நேற்று இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "செவிலியர்கள் நர்சிங் அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பிஎஸ்சி நர்சிங் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும் என்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலியானது. இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம்" என தெளிவாக கூறப்பட்டிருந்தது.

    பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதே கருத்தை பதிவிட்டிருந்தது.

    எனவே, வைரலாக பரவும் சுற்றறிக்கை போலி என்பதும், நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார்
    • கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்திருந்த உரையில், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அமைதிப்பூங்கா முதலான பல்வேறு சொற்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கும்போது தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என தீர்மானத்தை வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே அவர் அவையை விட்டு வெளியேறியதால் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்ந்நிலையில், ஆளுநர் ரவி, சட்டசபையில் இருந்து வெளியில் வந்ததும் தேசிய கீதம் இசைப்பதைக் கேட்டு சட்டசபை வாசலில் நின்று மரியாதை அளித்தார் என்றும், இதனைப் பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள் அவருக்கு மரியாதை கொடுத்ததாகவும் கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆளுநருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமென்ட் செய்கின்றனர். ஆளுநர் "தேசிய கீதத்திற்கு" மரியாதை செலுத்தினார். மறைக்கப்பட்ட உண்மை... இதை ஏன் தமிழ் ஊடகங்கள் சொல்லவில்லை என்றும் சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து தேடியபோது, அது பொய்யான தகவலை இணைத்து பரப்பப்படும் வீடியோ என்பது தெரியவந்தது. சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஆளுநருக்கு அளிக்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பு மரியாதையின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. "ஆளுநருக்கு பேண்டு, வாத்தியங்களுடன் காவல்துறை அணிவகுப்பு மரியாதை" என்ற தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை, ஆளுநர் உரையுடன் சற்று நேரத்தில் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம், என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறும்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல, அது ஆளுநர் சட்டசபை வருகையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ×