என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா, பின்னர் அங்கு வசிக்கும் பாம்பாட்டிகளிடம் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #Priyanka
    ரேபரேலி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல், 4 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தின்  பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா, இன்று சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்பகுதியில் வசிக்கும் பாம்பாட்டிகளுடன் கலந்துரையாடினார். இதில் அவர்களது அன்றாட தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பாம்பாட்டிகள் வைத்திருந்த பாம்புகளை கையில் எடுத்துப் பார்த்தும், தனது கால்களுக்கு கீழ் இருக்கும் பாம்பை எடுத்தும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சிறிதும் பயமின்றி கூடையில் இருந்த பாம்புகளை சகஜமாக தொட்டு பார்த்தபடியே பாம்பாட்டிகளிடம் உரையாடினார்.



    அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறுகையில், ‘பாஜக, காங்கிரஸின் கருத்துகள் தேர்தலுக்கு அப்பாற்பட்டது. நாங்கள் எப்போதும் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம்.

    அரசியலில் பாஜக தான் எங்கள் எதிரி. ஒருபோதும் பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாக நாங்கள் விடமாட்டோம். ஏனென்றால் வலிமையான, உறுதியான வேட்பாளர்களை நாங்கள் கொண்டுள்ளோம். மேலும் கடுமையாக போராடுவோம்’ என கூறினார். #Priyanka 
    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குப்பதிவு அன்று பாதுகாப்பு பணியில் 3,073 போலீசார் ஈடுபடுவார்கள் என்று டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா தெரிவித்துள்ளார். #TNAssemblyByElection #AravakurichiByElection
    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து கரூர் தனியார் கல்லூரியில் வைத்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஐ.ஜி.சேசாயி, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, கரூர் எஸ்.பி. ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை ஆகிய 5 காவல் நிலையங்களுக்கு டி.எஸ்.பி. மற்றும் கூடுதல் இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 11 இடங்களில் அமைந்துள்ள 29 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.



    ஒரே இடத்தில் 3 வாக்குச்சாவடிகளுக்கு மேல் அந்த மையத்தில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக 42 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் பிணைப்பத்திரங்கள் பெறப்பட்டு காவல் துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    தொகுதியை கண்காணிக்கும் வகையில் 36 பறக்கும் படைகள், 18 நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 23 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 11 நான்கு சக்கர வாகனம், 17 இரு சக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அன்று ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீசார் என 1,773 பேர், 8 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 560 பேர், 3 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் 240 பேர், ஊர்க்காவல் படையினர் 500 பேர் என மொத்தம் 3,073 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை 1950, 100 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என கூறினார்.

    மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ கூறுகையில், கரூர் மக்களவை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் 3-வது கட்ட பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட போலீசாருடன், கூடுதலாக திருச்சி மாவட்ட போலீசார் 120 பேர் நியமனம் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  #TNAssemblyByElection  #AravakurichiByElection

    ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்எல்ஏக்களை பாஜக, விலைக்கு வாங்க முயற்சி செய்தது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். #AAP #AravindKejriwal
    புது டெல்லி:

    டெல்லியில் பாராளுமன்ற தேர்தல் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சாந்தினி சவுக் பகுதியில் ரோட்ஷோ நடத்தினார். இந்த ரோட்ஷோவில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வழி நெடுக மலர் தூவி அவரை வரவேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால்  கூறியதாவது:



    கடந்த 3 நாட்களில் பாஜக எங்கள் கட்சியின் 7 எம்எல்ஏக்களை சந்தித்து, ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10 கோடி என பேரம் பேசி, விலைக்கு வாங்க முயற்சி செய்தனர். பாஜகவினருக்கு எங்கள் கட்சியை உடைக்க, எம்எல்ஏக்களை பிரிக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.

    பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை வாங்குவதற்கான திட்டம் தீட்டுவதை விடுத்து, தேர்தல் களத்தில் நேரடியாக மோதுங்கள். இப்போது மட்டுமல்ல. கடந்த 4 ஆண்டுகளாக நீங்கள் இந்த முயற்சியில் தான் ஈடுபட்டு வருகின்றீர்கள்.  

    ஒரு நாளுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் கட்சியில் 40 எம்எல்ஏக்களை தன்னால் வாங்க முடியும் எனவும், அவர்கள் தன்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் எனவும் கூறினார்.  இது பிரதமர் மோடிக்கு பொருத்தமானது அல்ல.

    ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நல்ல முறையில் வழங்கி வருகிறது. அதற்காகவே நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் கட்சியின் பணிகள் என்ன என்பது குறித்து மக்களுக்கு தெரியும். நிச்சயம் எங்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், மோடி தனது பெயரை வைத்துக் கொண்டு மட்டுமே வாக்குகள் சேகரிக்கிறார்.  

    இவ்வாறு அவர் கூறினார்.  #AAP #AravindKejriwal

    25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்று சூலூரில் இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalaniswami
    கோவை:

    4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தை சூலூர் சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கினார். அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழக மக்கள் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. அவர்களுடைய குடும்பம் ஏற்றம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு இங்கு பேசிய துரைமுருகன், இன்னும் 25 நாட்களில் புதிய முதல்-அமைச்சரை உருவாக்கிக் காட்டுவேன் என கூறியுள்ளார். முதல்-அமைச்சரை உருவாக்குவதற்கு இவருக்கு என்ன வலிமை இருக்கிறது. வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தனது மகன் ஏதாவது ஒருவகையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்குவழிகளை மேற்கொண்டார்.

    இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது.



    மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தபோது எதாவது கிராமத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டது உண்டா? ஆனால் இப்போது கிராமசபை என்ற பெயரில் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அமைச்சராக இருந்தபோது செய்ய முடியாத பணிகளை, இவர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது செய்ய முடியுமா? இதெல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற செயல்.

    எங்கள் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கொறடா மூலம் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்? இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை அறியமுடிகிறது.

    சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை உள்ளதால், அந்த திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு வருகிற 27-ந்தேதி 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். மக்கள் நலனையே குறிக்கோளாக கொண்டு, மக்களுக்காக அ.தி.மு.க. பணியாற்றுகிறது.

    தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரியாணி கடையில் தகராறு செய்வது, அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களை தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து பேசி வருகிறார்.

    குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்குமார் என்பவர் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் குற்றம் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

    அதேபோன்று கோவை இருகூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சந்திரன், சன் ராஜேந்திரன் உள்பட 5 பேர் ரெயிலில் பயணம் செய்தபோது, ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வை சார்ந்தவர்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பதை தெரிவிப்பாரா?

    சூலூர் சட்டமன்ற தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் வருகின்ற தேர்தலில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திலே வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssemblyByElection #EdappadiPalaniswami

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கார் பெயரை பிரசாரங்களில் பயன்படுத்தும் மாயாவதி, அவரது கொள்கைகளை பின்பற்றவில்லை என கூறியுள்ளார். #Mayawati #PMModi
    அயோத்தியா:

    உத்தரபிரதேசம்  மாநிலத்தில் ஏப்ரல் 11, 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அயோத்தியாவில் உள்ள அம்பேத்கார் நகருக்கு உட்பட்ட கோசைகஞ்ச் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாபாசாகிப் அம்பேத்காரின் பெயரை பிரசாரங்களில் கூறுகிறார். ஆனால், அம்பேத்காரின்  கொள்கைகளை ஒருபோதும் பின்பற்றவில்லை.  அதற்கு மாறாக செயல்படுகிறார்.

    அதேபோல் சமாஜ்வாடி கட்சியினரும் ஒவ்வொரு முறையும் சமூக போராளி லோஹியாவின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவரைப் போல் ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை.  உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினர் சட்டம்ஒழுங்கிற்கு புறம்பாக செயல்பட்டனர்.  

    இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில்  இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. நம் நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். இதற்காக தான் உங்கள் காவலாளியான நான் போராடி கொண்டிருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Mayawati #PMModi
    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க இருக்கிறது என்று தூத்துக்குடியில் நடந்த மே தின பேரணியில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #mayday #pmmodi

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூத்துக்குடியில் இன்று மே தின பேரணி நடைபெற்‌றது.

    பேரணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பேரணியில் கலந்துகொண்டு சிவப்பு சட்டை அணிந்து நடந்து சென்றார். தூத்துக்குடி அண்ணாநகர் 7வது தெரு சந்திப்பில் தொடங்கிய இந்த‌ பேரணி, சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நிறைவடைந்த‌து.

    அங்கு தொழிலாளர் தின நினைவு தூணில் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோரும் நடந்து சென்றார்கள்.


    இதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த தொழிலாளர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடிய நாள் தான் மே தினம். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால் தான் உரிமைகள் வந்து சேரும். இதற்கு உரிமை உள்ள இயக்கம் தி.மு.க. தான். பிரதமர் மோடி நாட்டின் காவலாளி என்கிறார். அவர் நாட்டின் களவாணியாக விளங்குகிறார். தி.மு.க. தான் நாட்டின் காவலாளியாகவும், ஒட்டு மொத்த காவலாளியாகவும் விளங்குகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை தொழிற்சங்கம் சார்பாக கொண்டாட வேண்டும் என கலைஞர் அறிவித்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின நினைவு சின்னத்தை அமைத்தார். இந்த நினைவு சின்னம் எப்படி அமைய வேண்டும் என்று வரைப்படம் தயாரித்து நேரடியாக சென்று பலமுறை பார்த்து அதை சரி செய்தார்.

    அதன் பிறகு அவரே நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். நினைவு சின்னம் அமைந்துள்ள நேப்பியர் பூங்காவை மே தின பூங்கா என அழைக்கவும் உத்தர விட்டார். தொழிலாளர் உரிமையை நிலை நாட்ட கருணாநிதி எடுத்து கொண்ட அக்கறையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

    அண்ணா முதல்வராக இருந்த போது மே 1-ந்தேதியை அரசு விடுமுறையாக அறிவித்தார். அவர் வழியில் ஆட்சி நடத்திய கருணாநிதி மே 1-ந்தேதியை ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினமாக அறிவித்தார். அதன் பின்பு வி.பி.சிங் தலைமையில் அமைந்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க காரணமாக அமைந்தவர் கருணாநிதி. தற்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.


    உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தடியடி, சிறையில் அடைப்பு சம்பவமும் நடக்கின்றன. கோரிக்கைக்காக டெல்லி சென்று போராடிய விவசாயிகளை அழைத்து பேசாத மோடி சேடிஸ்ட் பிரதமராக விளங்குகிறார். தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை அரசு வழங்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக நாட்டை அடகு வைக்கும் நிலை உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு நாட்டிற்கு விடிவு காலம் பிறக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று மாலை 5 மணிக்கு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து அன்னை இந்திராநகர், மாப்பிள்ளை யூரணி, தருவைகுளம், புதியம்புத்தூர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். இரவில் ஓட்டப்பிடாரத்தில் நிறைவு செய்கிறார். நாளை (வியாழக்கிழமை) தூத்துக்குடி ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலசங்கம் சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கூட்டாம்புளி, தங்கம்மாள்புரம், கட்டாலங் குளம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.  #mkstalin #mayday #pmmodi

    ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண் கட்சியின் வேட்பாளரும் எம்பியுமான எஸ்.பி.ஒய்.ரெட்டி மரணம் அடைந்தார். #PawanKalyan #CandidateDied
    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 11-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், பவன் கல்யாணின் ஜன சேனா சார்பில் நந்தியால் தொகுதியில் எஸ்.பி.ஒய்.ரெட்டி(68) போட்டியிட்டார். உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    நந்தியால் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த 2004 மற்றும் 2009ல் காங்கிரஸ் சார்பில் எஸ்.பி.ஒய். ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2014 தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பி ஆனார். ஆனால், தேர்தல் முடிந்ததும் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார்.

    ஆனால், இந்த தேர்தலில் தெலுங்குதேசம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. எனவே, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்து சீட் பெற்றார். ஆனால், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் இருந்தபடியே தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. #PawanKalyan #CandidateDied
    மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தின் போது பேசியது, தேர்தல் விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #PMModi #ECNotice
    புது டெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வர்தா பகுதியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த பிரசாரத்தில் பேசிய மோடி, 'காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட பயந்து, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதியில் போட்டியிடுகிறார்' என கூறினார்.



    இதனையடுத்து பிரதமர் மோடி பேசியது மத வெறுப்புணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். ஆனால் 3 வாரங்களாகியும் எவ்வித பதிலும் தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரதமர் மோடி மீதான தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.  மேலும் இந்த வழக்கை மே 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்த நோட்டீசுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வத்ரா பகுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிககளை மீறியது அல்ல என கூறியுள்ளது. #PMModi #ECNotice  
    தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக கவுதம் கம்பீருக்கு டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ் விடுத்துள்ளார். #LoksabhaElections #BJP #GautamGambhir
    புதுடெல்லி:

    டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.  இந்நிலையில்,  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட  முழு பக்க விளம்பரத்தில் கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.

    இதை கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின் ஊடகக் கண்காணிப்புக் குழு ஆராய்ந்தது. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை  விதிகளை மீறியுள்ளதாகவும், இது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அரசியல் ஆதாயம் தேடித் தரும் நோக்கிலும் உள்ளதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி கருதினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கவுதம் கம்பீருக்கும், அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்துக்கும் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அந்த நோட்டீசில், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காகத் தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற விவரத்தை மே மாதம் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். தவறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  #LoksabhaElections #BJP #GautamGambhir
    தேசியவாதம் குறித்து பேசி பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறியுள்ளார். #Congress #AshokGehlot

    ஜோத்பூர்:

    ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் மூத்த தலைவரான அசோக் கெலாட் முதல்-மந்திரியாக உள்ளார்.

    அவர் ஜோத்பூரில் தனது குடும்பத்தினருடன் வாக்கு பதிவு செய்தார்.

    ஓட்டு போட்ட பிறகு அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேசியவாதம் குறித்து பேசி பிரதமர் மோடி நாட்டை பிளவுப்படுத்துகிறார். இதனால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சர்வாதிகாரியும் தேசியவாதம் குறித்து முதலில் பேசி மக்களை கவர்ந்ததாக வரலாறு சொல்கிறது. இதை தான் மோடி தற்போது செய்கிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

    மோடி சர்வாதிகாரியாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. அது நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

    தேர்தல் பிரசாரத்தில் வளர்ச்சி குறித்து பேசாமல் தேசிய வாதம் மற்றும் தேசப்பற்று குறித்து மோடி பேசுகிறார். அப்படியென்றால் அவரை தவிர மற்றவர்களுக்கு தேசப்பற்று கிடையாதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    அசோக் கெலாட் மகன் வைபவ் ஜோத்பூர் எம்.பி. தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியது. #SCissuesnotice #noticetoEC #Modi #AmitShah #ModelCodeofConduct
    புதுடெல்லி:

    பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி இருவரும் தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகவும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.  

    இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.



    இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை  தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #SCissuesnotice #noticetoEC #Modi #AmitShah #ModelCodeofConduct
    உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு 17 இடங்கள்தான் கிடைக்கும் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee

    கொல்கத்தா:

    மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    மேற்கு வங்கம் மாநிலத்தில் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததை விட மோசமான செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் அவர்களே செய்து வருகிறார்கள். இங்கு இணை அரசு ஒன்றை பா.ஜ.க.வினர் நடத்துகிறார்கள்.

    பா.ஜனதா தலைவர்கள் உத்தரவின் பேரில்தான் மேற்கு வங்கத்தில் 4 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இத்தகைய அநியாயங்கள் நடந்தது இல்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் தன்னுடன் இருப்பதாக மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். மோடி ஒன்றை உணர வேண்டும்.

    திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் யாரும் உங்கள் பக்கம் வர மாட்டார்கள். எங்கள் பக்கம் இருந்து ஒரு கவுன்சிலர் கூட உங்கள் பக்கம் வர மாட்டார்கள். மோடி தேர்தல் பிரசாரம் செய்கிறாரா? அல்லது குதிரை பேரம் நடத்துகிறாரா? என்று தெரியவில்லை.

    பிரதமர் மோடி பாசிஸ்டுகளை விட மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இந்தியாவில் இதுவரை எந்த பிரதமரும் இப்படி இருந்தது இல்லை. எனவே பிரதமர் மோடி நிதானத்துடன் பேச வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் உங்களுக்கு முன்பு போல வெற்றி கிடைக்காது. உங்கள் வெற்றியை அகிலேசும், மாயாவதியும் சேர்ந்து தடுத்து விட்டார்கள். இந்த தடவை உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு அதிகபட்சம் 17 தொகுதிகளில்தான் வெற்றி கிடைக்கும்.

    காங்கிரஸ் கட்சிக்கு 7 அல்லது 8 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு மம்தாபானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee

    ×