என் மலர்
தேர்தல் செய்திகள்
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் 12, 19 ஆகிய தேதிகளில் மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார். ஆனால் கபடதாரிகளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மகா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பிரதமரை குறை கூறுவதை தவிர வேரு எதையும் செய்வதில்லை. ஆண்டு தோறும் வெளிநாடுகளுக்கு சென்று வரும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் கங்கை, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது தேர்தலின்போது மட்டும் தான் தெரியும். அப்போது தான் வருகை தந்து தரிசனம் செய்வார்.
மேலும் காங்கிரஸ் கட்சியினர் அயோத்தியாவிற்கு வருவார்கள். ஆனால், ராமர் ஆலயங்களுக்கு சென்று ராமரை வணங்கமாட்டார்கள். ஓட்டு தான் அவர்களுக்கு முக்கியம். மக்களை ஓட்டு வங்கிகளாக தான் பயன்படுத்துகிறார்கள். வாரணாசி தொகுதியில் களத்தில் இறங்கி நேரடியாக போட்டியிட முடியவில்லை. மேலும் ராகுல் காந்தி, அமேதியையும் விடுத்து வயநாட்டிற்கு சென்று விட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
சூலூர் தொகுதி இருகூரில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
நாங்கள் தேர்தல்களில் எத்தனை முறை நின்றாலும் தனித்தே போட்டியிடுவோம். அது தோற்றாலும் சரி. ஜெயித்தாலும் சரி. யார் காலிலும் விழுந்து கூட்டணி அமைக்க மாட்டோம். நாங்கள் கட்டும் வேட்டியில் கூட கறை இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். தற்போது ஆளும் கட்சிக்காரர்கள் ஆட்சியின் அதிகாரத்தையும் வலிமையையும் உணராதவர்கள். மற்றவருக்கு பயந்து கொண்டு அடிமை ஆட்சி நடத்துபவர்கள். மத்தியிலே ஆளுகின்ற ஆட்சியாளர்கள் சொல்வதைக்கேட்டுக்கொண்டு தேவையில்லாத பல திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.
நீட் தேர்வு என்ற திட்டத்தை கொண்டு வந்து கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மாணவர்களை மருத்துவ படிப்பு படிக்க விடாமல் தடுக்கின்றனர். அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மருத்துவராக முடியாது. தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவராகலாம். இது போன்ற ஒரு கேவலமான நிலைக்கு கல்வியின் தரத்தை கொண்டு செல்கிறார்கள்.
அவ்வாறு நீட் தேர்வில் மருத்துவம் படித்து வெற்றி பெற்று மருத்துவம் படிப்பவர்கள் எந்த நாட்டில் அதிக சம்பளம் கொடுக்கிறார்களோ அந்த நாட்டுக்கு சென்று விடுகிறார்கள். அதனால் நம் நாட்டில் மருத்துவத்துறையின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்காமல் போய்விடுகிறது.
தாய் மொழியான தமிழ் மொழியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள். இதை நாங்கள் சொன்னால் இனவெறியர்கள் என்று கூறுகிறார்கள். போக்குவரத்து துறையில் நஷ்டம் என்கிறார்கள் அது குறித்து கேட்டால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இலவச பஸ் பாஸ் கொடுப்பதற்கு பதிலாக இலவச கல்வியை கொடுத்தால் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள். போக்குவரத்து துறையும் நஷ்டம் இல்லாமல் இருக்கும். மத்திய அரசு மாநில அரசின் மீது அதிக வரிகளை போட்டு மொத்தமாக எடுத்து சென்று விடுகிறது. ஆனால் மாநிலத்தில் கஜா புயல் போன்ற இயற்கை அசம்பாவிதங்கள் நடக்கும்போது அதற்கான நஷ்டஈடு கேட்டால் அதை தராமல் நாம் கையேந்திக் கொண்டு நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு இணையாக ஒவ்வொரு மாநில அரசு உருவாக்க வேண்டும். நமக்கென்று தனித்தனி சட்டங்கள் பிறப்பித்துக் கொள்ள வேண்டும்.
கல்வித்துறையில் வ.உ.சி., தீரன் சின்னமலை போன்றவர்கள் குறித்து நாம் படிக்க வேண்டும். வடநாட்டு அக்கால மன்னர்கள் தலைவர் குறித்து படித்து நமக்கு என்ன பயன். படிக்காத காமராஜர் கூட எப்போதும் மத்திய அரசுக்கு அடிபணியாமல் மன உறுதியோடு இருந்தார். ஆனால் தற்போது ஆளும் மாநில அரசானது மத்திய அரசுக்கு அடிபணிந்து உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 60 வயதில் ஓய்வூதியம் தருவோம். விவசாயத்தை அழியாமல் காப்போம். சாக்கடையில் கழிவுகளை அள்ளுவதற்கு கூட மனிதர்கள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அதை அகற்றும் எந்திரத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் வளர்ச்சியா?.
இவ்வாறு சீமான் பேசினார்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். சூலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது-
சாராய கங்கை பெருகி ஓடும் இந்த நாட்டில் ஜீவநதிகள் வற்றிப்போய் கிடக்கின்றன. தற்போதைய ஆட்சியாளர்கள் நாடாள தகுதியற்றவர்கள்.
தவறுகளையும் பித்தலாட்டங்களையும் செய்பவர்கள். அவர்களை குறைசொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம். மற்ற கட்சிகளை பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை சொல்கிறோம்.
குடிநீர் பற்றாகுறை தீர்க்க முடியாத பிரச்சனையல்ல. நேர்மையான அரசியல் நடந்தால் வீடு தேடி குடிநீர் கிடைக்கும். அதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் எங்களுக்கு கொடுக்க வேண்டும் . 3 துறைகள் குழி தோண்டிக்கொண்டே இருக்கின்றன.
அவர்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதில்லை என்பது தெரிகிறது . இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.எங்களை தூக்கி பிடிப்பவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல. மக்களும் தான். தண்ணீர் பிரச்சனை தீர்க்க முடியும் என நல்ல நீர்நிலை ஆய்வாளர்கள், அறிவாளர்கள் சொல்கின்றனர் .
டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மது விலக்கை கொண்டு வர முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். உலகத்தில் ஒரே நாளில் மது விலக்கை கொண்டு வந்தால் கோட்டையில் இருப்பவர்கள் சாராயம் காய்ச்ச போய்விடுவார்கள். மது விலக்கை மெது மெதுவாக கொண்டு வர முடியும். மக்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.
ஒருவர் குழியை தோண்டுவார். ஒருவர் மூடுவார். இப்படி பள்ளத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதை சமப்படுத்த வேண்டிய நேரம் இது.
சாராயம், போனஸ் கொடுத்து அழைத்து வரும் கூட்டத்திற்கு எங்கள் பெண்கள் போக மாட்டார்கள். விண்வெளியானாலும், விவசாயமானலும் பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம்.
எத்தனை பெட்டிகள் எடுத்து சென்றாலும் மக்கள் நீதி மய்யம் வெல்லும். அதனை நம்பி தைரியமாக மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். நேர்மை என்ற ஒரு வரியே மக்கள் நீதி மய்யம் என்று மார் தட்டி சொல்வோம்.
உங்கள் ஊரில் என்ன பிரச்சனை. அதனையே நாங்கள் தேர்தல் அறிக்கையாக கொடுக்கிறோம். மக்களின் மனதை அறிந்தே தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு தான் தீர்வுகளை கொடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது-
அநீதியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சிதான் மக்கள் நீதி மய்யம். எங்களுக்கு அலங்காரங்களுக்கு நேரம் இல்லை. மக்கள் பணி மட்டுமே எங்கள் நோக்கம். எங்களை கவிழ்ப்பதற்காக எத்தனை பண பெட்டிகள் கைமாறினாலும் எங்களை தடுக்க முடியாது.
மக்கள் நீதி மய்யத்தை தூக்கி பிடிப்பவர்கள் இளைஞர்களும், பெண்களும் தான். நேர்மையாக இருந்தால் எதுவும் சாத்தியமே. அந்த நேர்மை எங்களிடம் உள்ளது.
எனவே மாற்றத்தை உருவாக்க மக்கள் முன் வர வேண்டும். கோட்டையில் இருப்பவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு அநியாயத்தை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளனர். அவர்களுக்கு மக்கள் பணி செய்வதில் ஆர்வம் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் வல்லநாட்டில் திரண்டு இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்கள் தீர்க்கப்படவில்லை. கல்வி கடன்கள் நீக்கப்படவில்லை. பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கி கிடக்கிறது.
இளைஞர்கள் 80 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கிறார்கள். காரணம் இங்குள்ள அரசு ஊழல் அரசாக இருக்கிறது. இவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு வர வேண்டிய பல தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. இதனால் இருக்கின்ற நகைகளை அடமானம் வைத்து படிக்கவைத்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காததால் தாய்மார்கள் கஷ்டப்படுகிறார்கள்.
தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன், 5 பவுன் வரை வங்கியில் தங்க நகை கடன் பெற்றவர்களுக்கு அவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து, தங்க நகைகளை பெற்று கொடுப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டறிய செல்லும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக போராடிய மக்கள் மீது போலீசை ஏவி, இனி யாரும் போராடக்கூடாது என்று 13 பேரை சுட்டுக் கொலை செய்தது. அந்த ரத்தத்துளிகளை நினைவுபடுத்தி கேட்கிறேன். அந்த செயலுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கும் நீதிபதிகள் நீங்கள்.
தமிழகத்துக்கு வருகிற கேடுகளை இந்த அரசால் தடுக்க முடிகிறதா? நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்து தேனி மாவட்டத்தை பாழ்படுத்த துடிக்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. இதனை தடுக்கக்கூடிய, எதிர்க்கக்கூடிய துணிச்சல் இந்த அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழகம் தான். இந்த அரசை தூக்கி எறிய வேண்டும்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மகத்தான வெற்றியை பெறுவார்கள். இந்தியா முழுவதும் மோடி அணி தோற்கும். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், மேலதட்டப்பாறை, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2-வது கட்டமாக பிரசாரம் செய்தார். வல்லநாடு பகுதியில் திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஆட்சியாளர்கள் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஜெயலலிதா நல்லாட்சி நடத்தியதால், 20 கிலோ இலவச அரிசி வழங்கினார். 16 லட்சம் குடிசைகளில் ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் தரமான வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தினார்.
ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்கி வருகிறது. இந்த தேர்தல் யாரால் வந்தது, நம்மிடம் இருந்து சென்ற துரோகியால் வந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற தீராத ஆசையில் உள்ளார். அவர் முதல்-அமைச்சராக எந்த காலத்திலும் வர முடியாது. அ.தி.மு.க. இந்த தேர்தலில் காணாமல் போய்விடும் என்று கூறுகிறார். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம். இதில் 1 கோடி தொண்டர்கள் உள்ளனர். கருணாநிதியால் முடியாதது, உங்களால் முடியவே முடியாது. தி.மு.க. ஆட்சியில் கொலை, நிலஅபகரிப்பு நடந்தது. அந்த நிலத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீட்டு மக்களிடம் தந்தார். மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாத அரசாக தி.மு.க. அரசு இருந்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு மின்மிகை மாநிலமாக மாற்றினார். தற்போது 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பிற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வுடன், கூட்டணி வைத்து இருப்பதாக ஒருவர் கூறுகிறார். இந்த கட்சியில் இருந்து வசதி வாய்ப்பை பெருக்கி கொண்டவர்கள் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க போகிறார்களாம். அது எந்த காலத்திலும் முடியாது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து தனிக்கட்சி கண்டவர்கள், சாதிக் கட்சி கண்டவர்கள் யாரும் வாழ்ந்ததாக, உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. இது தொண்டர்கள் இயக்கம். தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வர முடியுமா? முடியாது. அ.தி.மு.க. வில்தான் ஒரு தொண்டன் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வர முடியும். ஒரு தொண்டர் பழனிசாமி முதல்-அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.வை எதிர்த்துதான் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. நமக்கு ஒரே எதிரி தி.மு.க.தான். யார் ஆட்சியில் நல்ல மக்கள் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் கொண்டு வந்தார்கள், தொழில் வளர்ச்சி, விவசாயம் பெருகியது என்பதை பார்த்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற வரலாற்றை உருவாக்கி தாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தெய்வச்செயல்புரம், முடிவைத்தானேந்தல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் இர.ரமேஷ் என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் அகர வரிசைப்படி 5-வது இடத்தில் இருந்தது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரின் முதல் எழுத்தான ‘இ’ நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப்பிட்டு 9-வது இடத்தில் இடம் பெற்றிருந்தது.
இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4-ந்தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5-வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான, அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேட்பாளர் ரமேசை தேர்தல் நடத்தும் அலுவலரான மீனாட்சியிடம் அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். சுயேச்சை வேட்பாளர் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 11-ந் தேதி (இன்று) முதல் 14-ந் தேதி வரையிலான 4 நாட்கள் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து இன்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை, மாலை 5.30 மணிக்கு வடபழஞ்சி, மாலை 6.30 மணிக்கு தனக்கன்குளம், இரவு 7.15 மணிக்கு ஆர்.வி.பட்டி, இரவு 8 மணிக்கு நிலையூர் கைத்தறிநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 8.45 மணிக்கு திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பெ.மோகனை ஆதரித்து 12-ந் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம், மாலை 5.45 மணிக்கு வல்லநாடு, மாலை 6.30 மணிக்கு தெய்வசெயல்புரம், இரவு 7.15 மணிக்கு சவலாப்பேரி, இரவு 8 மணிக்கு ஒட்டநத்தம், இரவு 8.45 மணிக்கு ஒசநூத்து, இரவு 9.15 மணிக்கு குறுக்குச்சாலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து கரூர் மாவட்டம் சீத்தப்பட்டி காலனியில் 13-ந் தேதி மாலை 5 மணிக்கும், அரவக்குறிச்சியில் மாலை 5.45 மணிக்கும், பள்ளப்பட்டியில் மாலை 6.30 மணிக்கும், இனங்கனூரில் இரவு 7.15 மணிக்கும், குரும்பப்பட்டியில் இரவு 8 மணிக்கும், ஆண்டிப்பட்டிகோட்டையில் இரவு 8.45 மணிக்கும், ஈசநத்தத்தில் இரவு 9.15 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.
இதேபோல சூலூர் சட்டசபை தொகுதி வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கும், அதனைத் தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு முத்துக்கவுண்டன்புதூரிலும், மாலை 6.45 மணிக்கு வாகராயம்பாளையத்திலும், மாலை 7.15 மணிக்கு கிட்டாம்பாளையம் நால்ரோட்டிலும், இரவு 8 மணிக்கு கருமத்தம்பட்டியிலும் (சோமனூர் பவர் ஹவுஸ்), இரவு 8.30 மணிக்கு சாமளாபுரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 9.20 மணிக்கு சூலூரில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி நிறைவு செய்கிறார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்காது என்று கிளி ஜோதிடர் போல பேசி வருகிறார். ஆனால் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தி.மு.க. நிலைகுலைந்து போகும்.
ஸ்டாலினும், தினகரனும் மறைமுக உடன்பாடு வைத்துக் கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த நினைக்கிறார்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் மு.க.ஸ்டாலினும், தினகரனும் ரகசியமாக சந்தித்து பேசினர். அதனை அப்போது 2 பேரும் மறுத்தனர். ஆனால் அந்த ரகசிய சந்திப்பு இப்போது அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தி.மு.க.வுடன் இணைந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்போம் என்று தினகரன் கட்சியை சேர்ந்த கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.
இதன் மூலம் மு.க.ஸ்டாலின், தினகரன் ரகசிய சந்திப்பு தற்போது வெளி வந்துள்ளது. பல்வேறு சாதனைகளை படைத்து வரும் அ.தி.மு.க.வை தினகரன், முக.ஸ்டாலின் போன்ற துரோகிகளும், எதிரிகளும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 11-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. ஏப்ரல் 18-ந்தேதி 2-வது கட்ட தேர்தலில் 97 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 3-வது கட்ட தேர்தலில் 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஏப்ரல் 29-ந்தேதி 4-வது கட்டமாக 76 தொகுதிகளுக்கும், கடந்த 6-ந்தேதி 5-வது கட்டமாக 51 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் 6-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
பீகார் (8), அரியானா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்காளம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்கள் 6-வது கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடைபெற்று வந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் 59 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் மாலை 4 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு பெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஓட்டுப் பதிவு நடக்கும் 59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 311 வேட்பாளர்கள் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன. அதிகபட்சமாக பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன.
59 தொகுதிகளில் உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், மத்திய மந்திரி மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். இவர்கள இன்று இறுதி கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரியங்கா உத்தரபிரதேசத்தின் பல்வேறு தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். இன்று மாலை அவர் தனது சித்தி மேனகாகாந்தி போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய்சிங்கை ஆதரித்து பேசுகிறார்.
6-வது கட்ட தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. 5-வது கட்ட தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
அதை கருத்தில் கொண்டு மேற்கு வங்காளத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும் 8 தொகுதிகளிலும் அதிகபட்சமாக 70 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் 7 தொகுதிகளிலும் சுமார் 60 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். #Loksabhaelections2019
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, மூலக்கரை பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. அதை தமிழக மக்கள் நன்றாக தெரிந்துள்ளனர். அதனால் தான் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், 18 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும் மக்கள் அ.ம.மு.க.வின் சின்னமான பரிசு பெட்டகத்துக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல திருப்பரங் குன்றம் தொகுதி இடைத் தேர்தலிலும் வாக்காளர்களாகிய நீங்கள் அ.ம.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
உலகம் முழுவதும் மே 1-ந்தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல மே 23-ந்தேதியை துரோகிகளை வீட்டுக்கு அனுப்பும் தினமாக கொண்டாட வேண்டும். தோல்வி பயம் காரணமாகவே 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களைப்பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதுவே இந்த அவல ஆட்சிக்கு சாட்சி. மக்களின் விரோதியான சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். அதேபோல பொது மக்களாகிய நீங்கள் வாக்களிப்பதன் மூலம் துரோக ஆட்சியை சம்ஹாரம் செய்ய வேண்டும்.
எனக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள். மக்களை காப்பாற்ற மக்களுக்காக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த துரோக ஆட்சியை வீடுக்கு அனுப்ப வேண்டும். அதுவே எனது கொள்கையும் கோட்பாடும் ஆகும்.
எங்களுக்கு சிறை கம்பி சின்னத்தை வழங்க வேண்டும் என்று கூறிய தமிழிசைக்கு கிருஷ்ணர் எங்கு பிறந்தார்? எனத் தெரியுமா? எங்களுக்கு சிறை கம்பியை சின்னமாக கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். மே. 23-ந் தேதிக்கு பின்னர் மோடியோட டாடி வந்தாலும் அ.தி.மு.க. அரசை காப்பாற்ற முடியாது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள் அனைவரும் அ.ம.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
மேற்கண்டவாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #modi #tamilisai
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என்று கூறி ஆட்சியை பிடித்தார். அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அவர் தேர்தலுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களை பேசி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்.
தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் அவருக்கு மக்கள் அரசியல் ரீதியாக அதிகாரம் வழங்கவில்லை. மக்களுக்கு நன்மைகள் செய்வதற்கு தான் அதிகாரம் வழங்கினார்கள்.
மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளவும், அவர்களின் கோரிக்கைகளை புரிந்துகொள்ளவும் பிரதமருக்கு நேரமில்லை. கேள்விகளை முன்னெடுத்தாலும் அதற்கு அவர் பதில் அளிப்பதே இல்லை.
பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். பெரிய தொழில் அதிபர்களின் வங்கி கடன்களை அவர் தள்ளுபடி செய்தார். ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்த போது அரசிடம் நிதி இல்லை என்று கூறி புறக்கணித்தார்.

மோடி தன்னை பலம் மிக்கவராக முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளை ஏன் தன்னால் தீர்க்க முடிய வில்லை என்று விளக்கம் அளிக்கும் துணிவு அவருக்கு இல்லை. இவரைப் போன்ற கோழைத்தனமான, பலவீனமான பிரதமரை என் வாழ் நாளில் நான் பார்த்தது இல்லை.
பிரசார மேடைகளில் பாகிஸ்தான் குறித்து அவரால் பேச முடிகிறது. ஆனால் தனது ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை அவரால் பேச முடியவில்லை.
டெல்லியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கூடி 5 நிமிடங்கள் மட்டும் சந்திக்க அனுமதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் விவசாயிகளிடம் பேச அவரது மனம் விரும்ப வில்லை. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு விவசாயிகளிடம் ஓட்டு கேட்கிறார்.
இவ்வாறு பிரியங்கா பேசினார். #priyankagandhi #pmmodi






