என் மலர்
தேர்தல் செய்திகள்
வேலூர் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய பணம் கட்டுக்கட்டாக, பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள், வருமான வரித்துறையினர் தனித்தனியாக தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதை அறிவிக்காமல் உள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இந்த பணம் எந்த வங்கியில் இருந்து யாருடைய கணக்கில் இருந்து பெறப்பட்டது? எதற்காக 200 ரூபாயாக கட்டு கட்டாக வாங்கினார்கள் போன்ற விபரங்களுக்காக பலரிடம் விசாரிக்க வேண்டி உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை முடிந்த பிறகு தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதை ஆய்வு செய்த பிறகு தான் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும்.
எனவே இந்த மாதத்தில் வேலூரில் தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் நடத்த குறைந்தது 2 மாதங்கள் ஆகலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார்.
குணா (மத்திய பிரதேசம்)
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில மேற்கு பகுதி பொறுப்பாளருமான ஜோதிர் ஆதித்யா சிந்தியா அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- ஏராளமான மக்கள் மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் நீங்கள் ஜெயிக்க வேண்டும். ஆனால் மோடி பிரதமராக வர வேண்டும் என நினைக்கிறார்களே, இந்த வேறுபாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- உங்கள் கணிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் நிஜத்தில் நிலைமை வேறாக உள்ளது. மோடி அளித்த பொய்யான வாக்குறுதியை மக்கள் பார்த்து விட்டனர். எல்லோரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்குவோம், 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என அவர்கள் கூறிய எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பாரத் நிர்மான் திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்றவற்றை நிறைவேற்றி காட்டியது. இதை மக்கள் உணர்ந்துள்ளதால் காங்கிரஸ் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கேள்வி:- பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் இந்த தேர்தல் மோடியை மையப்படுத்தியது என்கிறார்கள். இந்த கருத்து வாசகர்களுடன் ஒத்து போகிறதா?
பதில்:- மே 23-ந்தேதி இந்த கேள்விக்கு விடை கிடைக்கும். அவர்கள் ஜெயித்தால் மிகுந்த கவலையாக இருக்கும். ஆனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
கேள்வி:- நீங்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினீர்களே? அதற்கு காங்கிரஸ் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?
பதில்:- நாங்கள் பாரதீய ஜனதா கூட்டணியை விட அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். சில கட்சிகளுடன் கூட்டணி சேருவது பற்றி மே 23-ந்தேதிக்கு பிறகு பேசுவோம்.
கேள்வி:- ராகுல்காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மோடி குற்றம் சாட்டி பேசுவது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- மோடியும், பாரதீய ஜனதாவும் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவது கிடையாது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வேலை வாய்ப்பின்மை பற்றி பேசுவது இல்லை. இந்த பிரச்சினைகள்தான் தேர்தலில் எதிரொலிக்கும். எனவே தான் பாரதீய ஜனதா 3-ம் தரத்துக்கு இறங்கி பேசுகிறார்கள்.
கேள்வி:- உத்தரபிர தேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி-சமாஜ் வாடி கட்சியுடனான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்:- உத்தரபிரதேசத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைத்து வருகிறோம். இதை வாக்கு சதவீதத்திலும், எங்களுக்கு கிடைக்கும் இடங்களிலும் நீங்கள் உணர்வீர்கள். நாங்கள் பிரசாரம் செய்யும்போது எல்லா விஷயங்களையும் பற்றி பேசுகிறோம். இந்த தேர்தலில் நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்க போராடுகிறோம்.
கேள்வி:- ராகுல்காந்தி பிரதமராக கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா?
பதில்:- பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுல்காந்திக்கு உள்ளது. அவர் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மே 23-ந்தேதி காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் அவருக்கும், மேற்கு வங்க முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது.
மோடி மீதும், பா.ஜனதா மீதும் மம்தாபானர்ஜி தினமும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி வருகிறார். அந்த வரிசையில் நேற்று அவர் புதிய குற்றச்சாட்டு ஒற்றை வெளியிட்டார். பர்கானாஸ் மாவட்டம் அசோக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பண பட்டுவாடா நடக்கிறது. வாக்காளர்களுக்கு பா.ஜனதாவினர் ஏராளமான பணத்தை அள்ளி கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் பா.ஜனதா வேட்பாளர் பாரதிகோசின் காரில் இருந்து ஏராளமான பணத்தை கைப்பற்றி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர் தங்களுக்கு வழங்கப்படும் இசட்பிளஸ், ஒய் பிளஸ் பாதுகாப்பு படையை பயன்படுத்தி பணப்பெட்டிகளை கடத்தி செல்கிறார்கள்.
தங்களது வாகனத்திலேயே கட்டு கட்டாக பணத்தை அடுக்கி பாதுகாப்புடன் கொண்டு செல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றுவதற்காக இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருகிறார்கள்.
பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர்களும் பிரசாரத்துக்கு வரும் போது அவர்களது ஹெலிகாப்டர்களையோ, கார்களையோ பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்க அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த கார்களில் இருந்து பெட்டி பெட்டியாக பணத்தை கடத்துவதே இதற்கு காரணம் ஆகும்.

பிரதமர் மோடி வந்த விமானத்தில் இருந்து ஒரு பெட்டி எடுத்து செல்லப்படுவதை சில தினங்களுக்கு முன்பார்த்தோம். அதன் பிறகு படம் எடுக்க தடை செய்து விட்டார்கள். எனவே பா.ஜனதா தலைவர்களால் இதுபோல எத்தனை பெட்டிகளில் பணம் கொண்டு செல்லப்பட்டதோ? யாருக்கு தெரியும்.
பணத்தால் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எப்போது பணம் கொண்டு சென்றாலும் கண்டுபிடித்து விடுவோம்.
இரவில் பணத்தை பட்டு வாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த பணத்தை எல்லாம் விழித்திருந்து பிடிக்கும்படி உத்தரவிட்டு இருக்கிறேன். பிரசாரம் ஓய்ந்து விட்டதால் எளிதாக பணம் கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது.
இவ்வாறு மம்தாபானர்ஜி கூறினார்.
சென்னை:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பற்றி சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கடந்த 2½ வருடமாக பல்வேறு காரணங்களை சொல்லி தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறது. இப்போது வாக்காளர் பட்டியலை சரிப்படுத்த அரசாணை போடுவது எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு விசயமாகும்.
ஏனென்றால் வாக்காளர் பட்டியல் தயார் நிலையில்தான் உள்ளது. தேர்தலை தள்ளிப்போட சுப்ரீம்கோர்ட்டில் காரணம் சொல்வதற்காக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளனர்.

2½ வருடமாக தேர்தலை நடத்தாமல் விட்டுவிட்டு தற்போது மீண்டும் முதலில் இருந்து வாக்காளர்பட்டியல் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார். இந்த அறிவிப்பு வருகிற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆனால், எந்தெந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்ற விபரம் முழுமையாக வெளியிடப்படவில்லை.
வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது. தேர்தலை நடத்துவதற்கு அனைத்து பணிகளும் தயாராகத்தான் உள்ளன. ஆனாலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு தோல்விபயம்தான் காரணம்.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதுதான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாட்னா:
நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் வேட்பாளராக பாட்னா ஷாகில் தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் இருந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
மே 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் அத்தொகுதியில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று பாட்னா தொகுதியில் ரோடு ஷோ நடத்தி பிரசாரம் செய்கிறார். அப்போது சத்ருகன்சின்கா வீடு வழியாக அமித்ஷாவின் ரோடு ஷோ செல்கிறது.
இதை கண்டித்துள்ள காங்கிரஸ் இது மலிவான அரசியல் என்று விமர்சித்துள்ளது. ஆனால் பா.ஜனதா தரப்பில் கூறும்போது ரோடு ஷோ தனிப்பட்ட நபருக்கு எதிராக நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சத்ருகன் சின்கா கூறியதாவது:-

அமித்ஷா இங்கு தாராளமாக வரலாம். சில பேர் சொல்கிறார்கள் அமித்ஷா இங்கு தனது பலத்தை என்னிடம் காட்ட வருகிறார் என்று கூறுகிறார்கள்.
இந்த தேசம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அவர்கள் நல்ல மனதுடன் வந்தால் வரவேற்கப்படுவார்கள். அவர்களுக்கு தேநீர், பக்கோடா கூட வழங்கப்படும். மேலும் அவர்களிடம் பொதுமக்கள் கேள்விகளையும் கேட்பார்கள். அவர்கள் தங்களது பலத்தை காட்டுவதற்காக வருகிறார்கள் என்றால் நான் சொல்கிறேன். அவர்களுக்கு பீகார் குடும்பம் தங்களது பலத்தை காட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது.
அன்று புதுவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர் நகர் வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 10-ம் எண் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை விவிபாட் எந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப் பதிவு நடந்தது.
இந்த குளறுபடி தொடர்பாக வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் தேர்தல் துறைக்கு புகார் அளித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்கிருந்த விவிபாட் எந்திரத்தை அகற்றிவிட்டு மற்றொரு விவிபாட் எந்திரத்தை வைத்து வாக்குப்பதிவு நடத்தினர். இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம் வரை இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மையத்தின் முன்புறம் பந்தல், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சரிவுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்கு அருகில் நடமாடும் கழிவறையும் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு தேவையான எந்திரங்கள், உபகரணங்கள் இன்று மதியம் தேர்தல் துறை மூலம் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாளர்கள் இதை பெற்றுக்கொள்கின்றனர்.
வாக்குப்பதிவையொட்டி இந்த மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை காவல்துறையின் கிழக்கு சரகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரியகடை, ஓதியஞ்சாலை, உருளையன் பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய 4 போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவையொட்டி புதுவை முழுவதும் மதுபான கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், நேற்று மாலை வெங்கட்டா நகரில் உள்ள 2 மதுபான குடோன்களை மட்டும் அடைக்க மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுவையில் அனைத்து மதுபான கடைகளும் வழக்கம்போல இயங்கின.
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது.
அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
இட ஒதுக்கீடு பிரச்சினையை சரி செய்த பிறகும் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதுபற்றி கோர்ட்டில் தமிழக அரசு கூறும்போது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதாகவும், அந்த பணிகள் நிறைவுற்றதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாகவும் அறிவித்தது.
அதன்பிறகும் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது.
2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு என வகைப்படுத்தி பிரிக்கப்பட்டது.
இதிலும் இட ஒதுக்கீடு படி வார்டுகள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டியது. உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறி இருந்தது.
இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுபற்றி உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலை பிரித்து சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகிவிடுவோம்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் சட்டசபை கூடும். எனவே ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.
மானியக்கோரிக்கை மீதான விவாதம் 25 நாட்கள் நடைபெறும் என்பதால் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கிவிடும். எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
சித்தார்த் நகர்:
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
ஆணவப் போக்கில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும், எதிர்மறைவான கருத்துக்களையும், பிரிவினையையும் உருவாக்கும் வகையில் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.
மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி பங்களாவை விட்டு வெளியே வரவில்லை.
இப்போது தேர்தலில் வந்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திய போது தங்களிடம் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறியது.
ஆனால் பெரும் தொழில் அதிபர்களின் பல கோடி ரூபாய் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு மட்டும் பணம் எப்படி வந்தது?
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிபடி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பேச மட்டுமே செய்வார்கள். எதையும் நிறைவேற்ற மாட்டார்கள். மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது குறிக்கோள் மக்களுக்கு நன்மை செய்வது அவர்களின் நோக்கமல்ல.

நமது பிரதமர் தேர்தல் பிரசாரங்களில் பாகிஸ்தான் குறித்து கடுமையாக சாடி பேசுவார். மக்கள் பிரச்சினைகளை பேசாமல், மற்றவர்கள் குறித்து அவதூறான விஷயங்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார்.
மக்களிடம் வாக்கு என்று ஒரு வலிமையான சக்தி உள்ளது. அதனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. எனவே அனைவரும் நன்கு யோசித்து நமக்கு நன்மை செய்வது யார்? என்பதை பார்த்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மற்ற கட்சியினருக்கு ரெட் கார்ட் வழங்குவதன் மூலம் பாஜக வெற்றி பெற முயல்கிறது. சமாஜ்வாடி கட்சியினருக்கு ரெட் கார்ட் கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் ராஜசேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்தநிலையில் நேற்று அங்கிருந்து திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு வேறு பணி வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து கரூர் மாவட்ட புதிய போலீஸ்சூப்பிரண்டாக சென்னை கணினி மயமாக்கல் துறையின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விக்கிரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் அதிரடியாக மாற்றப்பட்டதும் அவருக்கு புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருப்பதும் காவல் துறை மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசார பாதுகாப்பு ஏற்பாடுகளில் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது அதிருப்தி ஏற்பட்டதாலும் ராஜசேகர் மீது எழுந்த சில புகார்கள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கடிதம் எழுதியது. அவரை மாற்ற பரிந்துரை செய்தது. அதன் எதிரொலியாகவே ராஜசேகர் மாற்றப்பட்டு விக்கிரமன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் முதலே கரூர் மாவட்டத்தில் பல பிரச்சனைகள் எழுந்தது. வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியான கலெக்டர், உள்பட பல அதிகாரிகள் மீது புகார்களை அடுக்கிக்கொண்டே இருந்தனர். சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் குளறுபடி தொடர்பாக புகார்கள் கூறப்பட்டது. அதிகாரிகள் மட்டத்தில் எழுந்த கருத்து வேறுபாடும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மாற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரையில் இன்று அ.ம.மு.க. கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தான் வெற்றிபெறும். தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியை கலைப்போம். அதற்காக வாக்களிப்போம்.
இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாக கொண்டு அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது.
தி.மு.க.வோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியை கலைக்க தி.மு.க. வோடு கூட்டணி வைத்தவர் தான் ஓ.பி.எஸ். பொதுமக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வருகிற 23-ந் தேதி தெரியவரும்.
அன்றைய நாளில் தோல்வியோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமாக மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.
அ.தி.மு.க.வினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனை தடுக்க தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.
தேனி தொகுதியில் மறுவாக்குபதிவு யாரும் கேட்கவில்லை. ஆனால் மறுவாக்குபதிவு நடக்கும் போது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஓபிஎஸ் மகனின் வேட்புமனுவில் பிரச்சினை இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






