என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மக்களின் ஆத்திரம் ஓட்டுகளாக மாறி விழுந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு  நடைபெற்றுவரும் ஆறாம்கட்ட தேர்தலில் உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் டெல்லி லோடி எஸ்டேட் பகுதியில் உள்ள சர்தார் பட்டேல் வித்யாலயாவில் தனது வாக்குரிமையை இன்று நிலைநாட்டினார்.



    வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, ‘உண்மையான விவகாரங்களை பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டு பிரதமர் மோடி தேவையில்லாத கதைகளை கூறி வருவதால் மத்தியில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் கொண்டுள்ளனர். 

    இப்போது அவர்கள் தங்களது ஆத்திரத்தை ஓட்டுகளாக பதிவு செய்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்றுதான் நம் வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது ஆகின்ற காரியமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

    தலித் மக்களின் ரட்சகராக தன்னை காட்டிக் கொள்ளும் மாயாவதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட பின்னரும் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக்கொண்டு, தலித்துகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என மோடி குற்றம்சாட்டினார்.

    ராஜஸ்தான் மாநில அரசும் ‘நடந்தது நடந்து விட்டது’ என்னும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின்படி இந்த அல்வார் கற்பழிப்பு சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது வெட்கக்கேடான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று இரு பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மோடி ஏன் பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும்? என்று சிலர் கவலைப்படுகின்றனர்.

    ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தங்களை தாக்க வரும்போது அவர்களை சுட்டுக் கொல்வதற்கு எனது வீரர்கள் தேர்தல் கமிஷனின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் எதிரே நிற்கிறார்கள். இவன் மீது துப்பாக்கியால் சுடலாமா, வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனிடமிருந்து எனது வீரர்கள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா?.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதிகளை களையெடுத்து காஷ்மீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. இந்த தூய்மைப் பணியும் எனது பணிகளில் ஒன்றுதான் என மோடி குறிப்பிட்டார்.
    மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை! பெரும்பான்மையை இழந்து அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் மைனாரிட்டி அ.தி.மு.க. ஆட்சி ஏற்கனவே வாக்குப் பதிவு நடந்துள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் தன் படுதோல்வி பயத்தை உணர்ந்திருக்கிறது.

    கூடுதலாக, மே 19-ம் நாள் நடைபெறவிருக்கும் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனது ஆட்சிக்கான முடிவுரை உறுதியாக எழுதப்படும் என்பதையும் உணர்ந்தே உதறலில் இருக்கிறது.

    ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் ‘சவுகிதார்’ (பாதுகாவலர்) ஆகிவிடக்கூடாது என்பதை தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அது குறித்த சட்டரீதியான அணுகுமுறைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

    மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் சூழ்ச்சியான வகையில் என்னதான் தந்திரங்கள் செய்தாலும், மக்கள் மன்றத்தில் அது ஒருபோதும் எடுபடவில்லை, ஏமாற்றமே மிஞ்சும் என்பதை ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

    பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு சற்றும் சளைக்காத அடிமை அ.தி.மு.க. ஆட்சியும் ஏற்கனவே தனது மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில், மத்தியில் பா.ஜ.க. அரசை மக்கள் வீழ்த்தும்போது மாநிலத்தில் தனது ஆட்சியும் சேர்ந்தே தானாகவே வீழும் என்பதை அறிந்திருக்கிறது.

    அத்துடன், 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் புதிய ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் என்பதால்தான், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடங்கி, பேரவைத் தலைவரின் அக்கிரம நோட்டீஸ் வரை ஜனநாயக விரோத செயல்பாடுகளின் அராஜகமான உச்சகட்டத்திற்குத் திட்டமிடுகிறது. அதனை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தி.மு.க.வுக்கும் அதன் தலைமையிலான கூட்டணிக்கும் இருக்கிறது. நம்மைவிட அதிகமான ஆர்வத்துடன் வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள்.

    கோடைக்காலத்தில் கொளுத்துகின்றது அக்கினி வெயில். வறண்டு கிடக்கின்றன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள். மக்களின் தண்ணீர் தாகத்தைக்கூட தீர்க்கும் யோக்கியதை இன்றி ஒரு ஆட்சி பெயருக்கு நடந்து கொண்டிருக்கிறது. காலிக் குடங்களும், கண்ணீருமாக நெடுந்தூரம் கவலையையும் சுமந்து நடக்கிறார்கள் தாய்மார்கள்.

    அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் உயிரில்லாமல் செயலிழந்து கிடக்கின்றன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே ஒட்டு மொத்தமாக டெண்டர் கொள்ளை அடிப்பது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது கமி‌ஷன்- கரப்‌ஷன் கலெக்சனைக் கொள்கையாகக் கொண்ட கொள்ளைக்கூட்ட அரசு. ஒரு குடம் குடிநீர் தர வக்கற்ற ஆட்சி நீடிப்பதை வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள்? விலை கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்கிற நயவஞ்சக ஆட்சியாளர்களை நம்புவதற்கு தமிழக மக்கள் இனியும் தயாராக இல்லை.

    மக்களின் பேராதரவால் ஏற்கனவே தமிழகம்- புதுவை மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நமது வெற்றியை, முழுமையானதாக்க 100 சதவீத வெற்றியாக மாற்றிட 4 தொகுதி இடைத்தேர்தல் களத்திலும் இடைவிடாமல் முழுவீச்சுடன் பணியாற்றிட வேண்டுகிறேன்.

    இது 4 தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன்பிறப்புகளுக்கு மட்டுமான வேண்டுகோள் அல்ல. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மற்ற தொகுதிகளில் உள்ள உடன்பிறப்புகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி 4 தொகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்புப் பரப்புரையை மேற்கொள்ள முடியும். ஜனநாயக முறையில் உதய சூரியனுக்கு வாக்கு சேகரிப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட வேண்டாம்.

    நம்மை வெற்றி பெறச் செய்ய மக்கள் விரும்பி ஆயத்தமாக இருக்கிறார்கள். மக்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதில் நாம் முனைப்பாகச் செயலாற்ற வேண்டும்.

    ஆட்சி மாற்றத்தை உறுதி செய்யப் போகும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கான முத்திரையைப் பதிப்போம். மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அரசை கவிழ்க்க நினைப்பவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து 2-வது கட்டமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆளுங் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முனியாண்டி வெற்றி பெற்றால் தொகுதி மக்களின் பிரச்சினைகள் தீரும். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் எந்த பலனும் கிடைக்காது.

    இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை தருகிறார். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அவரால் எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.


     

    22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நன்மை செய்வேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்கிறேன் ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதிகளிலும் நடைபெற உள்ள 4 சட்ட சபை தொகுதிகளிலும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும். தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

    கருணாநிதி நாட்டு மக்களுக்காக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது. தி.மு.க. கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி.

    தனது தந்தைக்கு மெரினா கடற்கரையில் 6 அடி நிலம் கூட தரவில்லை என ஸ்டாலின் மக்களிடம் அனுதாபம் மற்றும் இரக்கத்தை பெறுவதாக நினைத்து பேசி வருகிறார்.

    நீதிமன்ற வழக்கு காரணமாகவே மெரினாவில் கருணாநிதியின் சமாதிக்கு இடம் ஒதுக்கவில்லை. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே காந்தி மண்டபம் அருகே ரூ.300 கோடி மதிப்பிலான இடத்தை கொடுத்தோம். அதனை ஏற்க மறுத்து விட்டனர்.

    காமராஜர் இறந்தபோது மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி. அதேபோல் ஜானகி அம்மாள் இறந்த போதும் இடம் தர மறுத்தார். அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

    ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை இடைத்தேர்தல் மூலம் கவிழ்ப்பேன் என்று டி.டி.வி. தினகரன் பேசி வருகிறார். இதன் மூலம் தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் உள்ள ரகசிய உறவு வெளி வந்துள்ளது.

    சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. என்ற முறையில் கூட தினகரன் கலந்து கொள்ளவில்லை. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர் தினகரன். அதனால் தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை உடைக்கவும், அரசை கவிழ்க்கவும் நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    தலைநகர் டெல்லியில் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்பட முக்கிய பிரமுகர்கள் காலையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.

    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.) மற்றும் ரபேல் ஊழல் என இந்த தேர்தலில் பல முக்கிய விவகாரங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார். நாங்கள் அன்பை பயன்படுத்தினோம். இந்த மக்களவை தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டமாக இன்று 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

    இந்த தேர்தலில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியின் அவுரங்கசீப் லேனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாக்கை பதிவுசெய்தார்.
    பிரதமர் மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

    அமராவதி:

    தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர்.

    அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார். அழிந்துவிட்டவர்களை மறுபடியும் உயிர்த்தெழ செய்வார். இவ்வாறு பல அரசியல் தலைவர்களை அழித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது ஆதாயத்துக்காக இந்திய ராணுவத்தையும், பாதுகாப்பு துறையையும் பயன்படுத்தி உள்ளார். நாட்டில் மத மோதல்களை அவர் உருவாக்குகிறார்.


    மோடியால் இந்திய ஜனநாயகம் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. ஜனநாயகத்தை கொன்றதற்காக அவரையும், அவரது அணியினரையும் 23-ந்தேதி மக்கள் வெளியேற்றுவார்கள்.

    ஜனநாயகத்தை காப்பாற்றக்கூடிய புதிய அணியை மக்கள் தேர்வு செய்வார்கள்.

    இந்திய தேர்தல்துறை பாரதிய ஜனதாவின் உத்தரவின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    நாங்கள் தேர்தல் துறையை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் உள்ள முக்கிய அதிகாரிகள் சிலர் பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    எதிர்க்கட்சிகள் 50 சதவீத விவிபாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஆனால், தேர்தல் கமி‌ஷன் அதை ஏற்க முன்வரவில்லை.

    தேர்தல் கமி‌ஷனுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு இருக்கிறது? என்று தெரியவில்லை. விவிபாட் எந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எப்போது குரல் எழுப்பினாலும் தேர்தல் கமி‌ஷன் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் குரலுக்கு எதிராக உள்ளது.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவிலும், டெல்லியில் கவுதம் காம்பீரும் வாக்களித்தனர்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

    இதேபோல், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கவுதம் காம்பீர், ராஜீந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
     
    மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில்  மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய மந்திரிகள் 6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

    உ.பி.யின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.



    இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இதேபோல், புதுச்சேரியில் வெங்கட்டா நகரில் உள்ள வாக்குச்சாவடி 10-ல் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகள் அழிக்கப்படவில்லை என்பதால் இங்கு மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

    7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர் கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறிய செயலாக உள்ளது என்று கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு தேர்தல் விதி முறைக்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் அதிகாரிகள் சென்று வந்து உள்ளனர். சில ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு உள்ள விவிபேடு எந்திரங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது மாநில தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

    எனவே வருகிற 23-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும்.

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான் சபாநாயகர், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தற்போது அந்த நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

    மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம். ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தீர்ப்பதற்கு மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1700 ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வில்லை என்பதற்காக சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்களும் எங்கும் சென்றுவரலாம் என்ற நிலை உள்ளது. அதேசமயம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது இதற்கு மாநில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி கவர்னர், புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஈரானில் இருந்து எண்ணை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்து உள்ள தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை நாம் ஏற்கக்கூடாது.

    குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு உருவாக்கி உள்ளது. சொந்த நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு கூட அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோல நிலம் விற்கவோ, வாங்கவோ கலெக்டர் அனுமதி வேண்டும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியபிரதேசம் மாநிலத்தில் சுஜால்பூர் பகுதியில் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அன்பினால் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என கூறியுள்ளார்.
    சுஜால்பூர்:

    மத்தியபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29, மே 6 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட  கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் சுஜால்பூர் பகுதியில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் நாட்டுப்புற பாடகர் பிரஹலாத் திஸ்பியனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இப்போது நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளின் எண்ணங்களுக்கு இடையிலான போராட்டம் ஆகும். பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் எங்கள் குடும்பத்தை அடியோடு வெறுக்கின்றனர். மக்களிடமும் வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் பேசி வருகின்றனர்.



    இதனை நீக்குவது தான் என் வேலை. மோடி என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடுமையான கோவத்துடனும், வெறுப்புடனும் பேசி வருகிறார். ஆனால், நான் அவரை கட்டி அணைத்து அன்பு காட்டினேன். நீங்கள் இந்நாட்டின் பிரதமர், உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட வெறுப்புகளை நீக்கி அன்புடன் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

    வெறுப்பினை அன்பினால் மட்டுமே கலைய முடியும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எங்கள் கட்சியினர் அதனை புரிந்துக் கொண்டு தான் செயல்படுகின்றனர். தேர்தல் அறிக்கையில் கூறியது போல காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு நன்மை கிட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    பாராளுமன்ற தேர்தலில் 6வது கட்டமாக டெல்லியில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற தேர்தல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே மாதம் 19-ந் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6 என 5 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதம் இன்றி 5 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.

    6வது கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற கட்சிகளின் தலைவர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். 



    டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 164 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கு ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட 3 கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், ஆம் ஆத்மி சார்பில் அதிஷி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரெயில் நிலையம் அதிகாலை 4 மணி முதல் இயங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது.
    ×