search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
    X

    ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர் கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறிய செயலாக உள்ளது என்று கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு தேர்தல் விதி முறைக்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் அதிகாரிகள் சென்று வந்து உள்ளனர். சில ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு உள்ள விவிபேடு எந்திரங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது மாநில தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.

    எனவே வருகிற 23-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமி‌ஷன் நியமிக்க வேண்டும்.

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான் சபாநாயகர், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தற்போது அந்த நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

    மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம். ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தீர்ப்பதற்கு மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1700 ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வில்லை என்பதற்காக சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்களும் எங்கும் சென்றுவரலாம் என்ற நிலை உள்ளது. அதேசமயம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது இதற்கு மாநில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி கவர்னர், புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஈரானில் இருந்து எண்ணை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்து உள்ள தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை நாம் ஏற்கக்கூடாது.

    குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு உருவாக்கி உள்ளது. சொந்த நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு கூட அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோல நிலம் விற்கவோ, வாங்கவோ கலெக்டர் அனுமதி வேண்டும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×