என் மலர்
தேர்தல் செய்திகள்
கரூர்:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெஞ்சமாங் கூடலூர், ஈசநத்தம், சின்னதாராபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்ற படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி காவிரிக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தளபதி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் உதயசூரியன் நகரில், வறுமையில் வாடுவோர், ஒரு குடிசைக்குள் 3 குடும்பங்களாக நெருக்கடியில் வசிப்பவர்கள் உள்ளிட்டோரை கணக்கெடுத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் வழங்கி வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்கிற அவரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதனை மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருப்பதால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுவது உறுதி.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தற்போதுகூட வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் திணிக்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரான மோடி ஆட்சி மத்தியில் தூக்கி எறியப்படும். முல்லை பெரியாறில் புதிய அணைகட்ட மோடி ஆட்சி பச்சை கொடிகாட்டி விட்டார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி தஞ்சை தரணி உள்பட காவிரி டெல்டாவை பஞ்ச பகுதிகளாக மாற்ற துடிக்கிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்த்துகின்ற அரசியல் சதுரங்ககாய்களை பொறுத்து, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது தமிழகத்தில் மக்கள் விரோத திட்டங்களை தட்டிக்கேட்க முடியாமல் திராணியில்லாமல் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. குழந்தைகளை விற்பனை செய்வது பற்றிய செய்திகள் வருகிறது. இதை நினைத்து பார்த்தாலே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருக்கிறது.
ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என குழந்தைகளை விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்கின்ற கொடுமை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரங்கேறி இருக்கிறது. அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? அவர்களை பிச்சை எடுக்கக்கூட பயன்படுத்தலாம். இதையெல்லாம் பார்க்கும் போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டதை பார்க்க முடிகிறது.
மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வு எழுதபோகிற இடத்தில், மாணவிகள் காதிலே போட்டிக்கிற கம்மலை கழற்ற சொல்கிறார்கள். அதில் என்ன கம்யூட்டரா வைத்திருக்க முடியும். இதைவிட அந்த பெண் வெட்கி தலை குனியும்படி துப்பட்டாவை எடுத்து சோதனை போட்டிருக்கிறார்கள்.
தேர்வு எழுதப் போகும் போது எத்தனை பதற்றம் இருக்கும். நானும் கல்லூரிகளிலே தேர்வு எழுதியவன் தான். ஆனால் நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்னரே, இப்படி சோதனை போட்டால் அவர்கள் எப்படி பதற்றமின்றி தேர்வெழுத முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி. எஸ். தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத போகிறவர்களுக்கு சோதனை செய்கிறார்களா? என்றால் இல்லை.
அரியலூர் மாணவி அனிதா மற்றும் பிரதீபா ஆகியோர் நீட் தேர்வினால் தங்களுக்கு இன்னுயிரை மாய்த்து கொண்டதை மறக்க இயலுமா? 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அது பேரறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிற மாநில சுயாட்சியாக தான் இருக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் உறுதி எனும்போது நீட் உள்ளிட்டவற்றில் பறிபோன தமிழக உரிமைகள் மீட்கப்படுவது உறுதி.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கேபிள் டி.வி. கட்டணம், கியாஸ் சிலிண்டர் உயர்வு ஆகியவற்றால் மக்கள் படும் அவதி தீர்க்கப்படும்.
ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி பாராளுமன்றத்துக்கு ஆறுகட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடந்தன.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் கொதிப்படைந்துள்ளனர்.
கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் சின்னதாராபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை மாற்றியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தலில் களம் காண வந்திருக்கிறேன். இன்னமும் தண்ணீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. தமிழக அரசு நினைத்திருந்தால் தண்ணீர் பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தருவது மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய குறிக்கோளாகும். இந்த தொகுதிக்கு முருங்கை தொழிற்சாலை கொண்டு வருவோம் என சொல்லி 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் என்ன நடந்தது?. ஒன்றும் நடக்கவில்லை. இதை சரி செய்வதற்காகத்தான் எங்கள் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

வருங்கால சந்ததியினருக்கு கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உலக தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கையாகும். மக்கள் நலன் முக்கியமாகும். ஆண்ட கட்சியையும், ஆளுங் கட்சியையும் பார்த்து விட்டீர்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கிராம பஞ்சாயத்தில் அவசியம் பங்கெடுத்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பணப்பட்டு வாடா குறித்து தேர்தல் ரத்து ஆகியுள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்கி விட்டால் அடுத்த 5 ஆண்டுகள் அவரிடம் எதுவும் கேட்க முடியாது. அதனை உணர்ந்து கொள்ளுங்கள். இந்தநிலையை மாற்ற ஒரு வாய்ப்பினை தாருங்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு அளிக்கும் வாக்குகள் உங்களையும், உங்கள் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை 2-ம் கட்டமாக பிரசாரம் செய்தார். பொட்டலூரணி பகுதியில் அவர் பேசியதாவது: -
தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு, போலியான ஆட்சி நடந்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவர் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிர் இழந்திருக்க மாட்டார். மோடியை ஜெயலலிதா எதிர்த்தார். அதனால்தான் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, மோடி வந்து பார்க்கவில்லை.
ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு இருந்தால், நாட்டின் பிரதமருக்கு தெரியாமல் இருக்குமா? ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்?. இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.
அ.தி.மு.க. மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அ.தி.மு.க. துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி ஏமாற்றினார். மேலும் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி விட்டு, தற்போது பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து கொண்டார். வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி ஜெயலலிதா ஆட்சி என்று சொல்ல முடியும்?. அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை.
மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அது யார் பணம் என்று உங்களுக்கு தெரியும். மக்களாகிய நீங்கள் துரோகிகளின் டெபாசிட்டை காலி செய்ய வேண்டும். துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்.
நமது பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது. பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி தரப்படும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி, முடிவைத்தானேந்தல், சேர்வைக் காரன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

சூலூர்:
சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து சூலூர் சீரணி அரங்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது-
மத்திய பாரதீய ஜனதா அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் விரைவில் அகற்றப்படும். தேர்தல் ஆணையம் நடு நிலைமை தவறிவிட்டதாக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார். மோடி ஓட்டு வாங்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்துகிறார்.
தமிழகத்தில் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மோடி வரவில்லை. பாரதீய ஜனதா மக்களிடையே பேதங்களை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது தமிழக அரசு.
கொங்கு மண்டலத்தில் உயர் மின் கோபுரங்களை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது. கெயில் எண்ணை நிறுவன குழாய்கள் விளை நிலங்கள் வழியாக பதிக்கப்படுகின்றன.
இடைமலை ஆறு திட்டத்தை நடைமுறைப்படுத்த கேரள அரசுடன் பேசினேன். ஆனைமலை - நல்லாறு திட்டத்தை இன்னும் செயல்படுத்தாமல் தற்போதைய அரசு தாமதப்படுத்துகிறது.
மீத்தேன் திட்டத்தால் காவிரி படுகை சிதைக்கப்படுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தமிழக மக்கள் மறக்கவில்லை.
முல்லை பெரியாறு அணையை உடைக்கவும், அங்கு புதிய அணை கட்டவும் தமிழகத்துக்கு விரோதமாக கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. புதிய தொழிற்சாலைகள் இங்கு வர முடியவில்லை. இதற்கு காரணம் எடப்பாடி அரசின் கமிஷன் அணுகுமுறையால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று விட்டன. நீட் தேர்வு எழுத போன மாணவர்களை மனிதாபிமானத்துடனா நடத்தினார்கள்?
இத்தனை கொடுமைக்கும் காரணமான எடப்பாடி அரசை அப்புறப்படுத்த வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது.

நீட் தேர்வை கொண்டு வரும் நரேந்திர மோடியை தமிழகத்துக்குள் வர கூடாது என்று கூறும் தைரியம் எடப்பாடிக்கு உண்டா? ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சூலூர்:
சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். சின்னியம் பாளையம், தென்னம் பாளையம், குரும்ப பாளையம், சூலூர் பிரிவு, வாகராயம் பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த இரு கட்சிகளையும் நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர். வரி போட்டு தறியை முடக்கிய மத்திய அரசும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மாநில அரசும் சரியானவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள்.
அதே போல் இவர்களுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறும் மற்ற அரசியல் கட்சிகளும் சரிவரவில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இன்று தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் நாம் நிற்கிறோம். நியாயமான நல்ல அரசியல் தொடக்கத்தை மக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சாக்கடைகள் தெருவில் ஓடுகின்றன. சாக்கடையை சரி செய்யும் படி சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது.
நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி நடந்தால் நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய தமிழகம் உதாரணமாகும்.
நானும் உங்களில் ஒருவனாக இருந்து இவர்களை வேடிக்கை பார்த்து சலித்து போய் கடைசியில் நாமாவது செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
நான் உங்களுக்காக வந்தேன் என்பதை விட எனக்காக வந்தேன் என்பதே உண்மை.
என்னை 60 ஆண்டுகளாக தூக்கி பிடித்திருக்கும் இந்த மக்களுக்காக நான் செய்தது கலைப்பணி மட்டுமே.
அதையும் ஊதியம் வாங்கி விட்டு தான் செய்தேன். இனி வெறும் கலைஞனாக எனது வாழ்வை முடித்து கொள்ளாமல் உங்களில் ஒருவனாக மனிதனாக வாழ விரும்புகிறேன். எஞ்சிய வாழ்நாளை உங்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்திருக்கிறேன்.

ஜி.எஸ்.டி.யால் நெசவு, கைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களது மூத்த தலைமுறைக்கு எடுத்து கூறுங்கள்.
அவர்கள் குழம்பி தான் போய் இருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வது. என்னையும் சேர்த்து தான். என் தலைமுறைக்காரர்கள் குழம்பி விட்டார்கள். இதுவா, அதுவா என்று யோசித்து அரசியலில் நாங்கள் தொடர்ச்சியாக தோற்கும் கட்சிகளுக்கே ஒட்டு போட்டு கொண்டு இருக்கிறோம்.
மக்களை மேம்படுத்தும் கட்சிதான் வெற்றி பெறும் கட்சிகளாக மாற முடியும். அக்கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை மாற்ற வேண்டியது உங்கள் கடமை.
இந்த 4 சட்ட மன்ற தொகுதிகளில் இருக்கும் கட்சிகள் இருவரும் அரசியல் விளையாட்டாக பார்த்தாலும் நாங்கள் தமிழகத்தை மேம்படுத்த கிடைத்த வாய்ப்பாக அதை பார்க்கிறோம்.
உங்கள் கடமையை நினைவில் கொள்ளுங்கள். நிச்சயம் நாளை நமதாகும்.
இவ்வறு கமல்ஹாசன் பேசினார்.

கரூர்:
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தொகுதிக்குட்பட்ட வேலம்பாடி, அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்துள்ளது. எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்களை அழைத்து அவரே கூறினார். ஆனால் இரவு 11 மணிக்கு மேலே அகில இந்திய தேர்தல் ஆணையம் 13 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு என அறிவிக்கிறது. அப்படியானால் மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த தவறு என்ன ஆனது.
தேர்தல் ஆணையம் மீதான சந்தேகம் பற்றி நாங்கள் புகார் சொன்னால், தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கி அவர்கள் செய்வது சரி என்கிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு, உத்தரவுக்கு பணிந்து தான் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாங்கள் சொல்கிறோம், தலைமை தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும். அல்லது சிறப்பு பார்வையாளரை நியமித்து வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும்.
இடைத்தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றத்திற்கு வித்திட வாய்ப்பு இருக்கிறது. இதனால் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிற அச்சத்துடன் தான் அ.தி.மு.க. உள்ளது. இதனால் 4 தொகுதிகளிலும் தில்லுமுல்லு செய்ய ஆளுங்கட்சி தயாராக இருக்கிறது. தேர்தல் முடிவு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராகத்தான் இருக்கும். பிளஸ்-1, பிளஸ் -2 மாணவர்களுக்கு 6 பாடத்தில் இருந்து 5 பாடமாக குறைத்து, மொழிப்பாடத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையென்றால் அதிக மாணவர்கள் தமிழை புறக்கணிக்கும் நிலை ஏற்படும்.

ஆனால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அப்படிவராது என தெரிவித்துள்ளார். அது நம்பிக்கை அளித்தாலும் கூட எந்த சூழ்நிலையிலும் தமிழ் படிப்பை மாணவர்கள் கைவிடும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும்போது, வீடற்ற 25ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார். நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார்.
மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது. அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம்.
கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம். புகழூர் பகுதியில் கதவணை கட்டுவதற்கு பூமி பூஜை போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதற்கான திட்ட அறிக்கையை காட்டுங்க, எப்ப நிதி ஒதுக்கீடு செய்தீங்க? பொய் சொல்லி மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம். ஆனால் சட்ட சபையில் எங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இந்த இடைத்தேர்தலோடு அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வரப்போகிறது. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறேன் என்று சொன்னதுக்கே சசிகலா அவரின் முதல்வர் பதவியை பறித்து விட்டார்.
ஆனால் நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம். மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் வங்கி வாசலில் மக்களை நிறுத்தியதால் அவரது ஆட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் முடிவு கட்ட உள்ளனர்.
ஸ்டாலின் முதல்வரானால் 100 நாள் திட்டத்தின் வேலை நாட்கள் உயர்த்தப்படுவதுடன் 5 பவுனுக்கு கீழான நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.
இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன். இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா?
இவ்வாறு அவர் பேசினார்.






