search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது- தினகரன் பேச்சு
    X

    துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது- தினகரன் பேச்சு

    துரோகத்தை பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது என்று தேர்தல் பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை 2-ம் கட்டமாக பிரசாரம் செய்தார். பொட்டலூரணி பகுதியில் அவர் பேசியதாவது: -

    தமிழகத்தில் ஜெயலலிதாவின் பெயரை சொல்லிக் கொண்டு, போலியான ஆட்சி நடந்து வருகிறது. மக்களை பாதிக்கும் திட்டங்களை ஜெயலலிதா எதிர்த்தார். அவர் இருந்திருந்தால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் உயிர் இழந்திருக்க மாட்டார்கள். நீட் தேர்வால் மாணவி அனிதா உயிர் இழந்திருக்க மாட்டார். மோடியை ஜெயலலிதா எதிர்த்தார். அதனால்தான் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது, மோடி வந்து பார்க்கவில்லை.

    ஜெயலலிதா கொலை செய்யப்பட்டு இருந்தால், நாட்டின் பிரதமருக்கு தெரியாமல் இருக்குமா? ஜெயலலிதா மரணம் குறித்து நடந்து வரும் விசாரணைக்கு இன்று வரை ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள். இதனால்தான் அவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஓட்டு கேட்கிறோம். மோடிக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்?. இவர்கள் அண்ணா படத்துக்கு பதிலாக, மோடி படத்தை வைத்தாலும் வைப்பார்கள். இதனை தடுக்கதான் நாங்கள் வந்துள்ளோம்.

    அ.தி.மு.க. மூடப்பட இருக்கும் கம்பெனி. அந்த கம்பெனியில் தொண்டர்கள் இல்லை. அத்தனை தொண்டர்களும் எங்களிடம் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், தற்போது தினகரன் கட்சி ஆரம்பித்து உள்ளார். அது தமிழகத்துக்கு பிடித்த பிணி என்று கூறி உள்ளார். நான் அ.தி.மு.க. துரோகிகளுக்குதான் பிணி. அவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு, ஜால்ரா அடித்து கொண்டு இருக்கிறார்.

    பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாக கூறி ஏமாற்றினார். மேலும் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி விட்டு, தற்போது பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்து கொண்டார். வியாபாரிகள் ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அதற்கு அனுமதி கொடுத்து விட்டனர். பின்னர் எப்படி ஜெயலலிதா ஆட்சி என்று சொல்ல முடியும்?. அவர்களுக்கு அப்படி சொல்ல தகுதி இல்லை.

    மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள். அது யார் பணம் என்று உங்களுக்கு தெரியும். மக்களாகிய நீங்கள் துரோகிகளின் டெபாசிட்டை காலி செய்ய வேண்டும். துரோகத்தை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடாது. வரும் காலத்தில் எட்டப்பனுக்கு படம் போட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படத்தைதான் போட வேண்டும்.

    நமது பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முறையான சாலை வசதி கிடையாது. பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் தட்டுப்பாடு சரிசெய்யப்படும். முதியோர் உதவித்தொகை உயர்த்தி தரப்படும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி, முடிவைத்தானேந்தல், சேர்வைக் காரன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 

    Next Story
    ×