search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "re vote in venkata nagar"

    புதுவை வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது.

    அன்று புதுவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காமராஜர் நகர் வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த 10-ம் எண் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவை விவிபாட் எந்திரத்தில் இருந்து அகற்றாமல் வாக்குப் பதிவு நடந்தது.

    இந்த குளறுபடி தொடர்பாக வாக்குச்சாவடியில் இருந்த முகவர்கள் தேர்தல் துறைக்கு புகார் அளித்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அங்கிருந்த விவிபாட் எந்திரத்தை அகற்றிவிட்டு மற்றொரு விவிபாட் எந்திரத்தை வைத்து வாக்குப்பதிவு நடத்தினர். இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையம் வரை இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்காக வெங்கட்டா நகர் மின்கட்டண வசூல் மையத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    மையத்தின் முன்புறம் பந்தல், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சரிவுப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்கு அருகில் நடமாடும் கழிவறையும் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு தேவையான எந்திரங்கள், உபகரணங்கள் இன்று மதியம் தேர்தல் துறை மூலம் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாளர்கள் இதை பெற்றுக்கொள்கின்றனர்.

    வாக்குப்பதிவையொட்டி இந்த மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை காவல்துறையின் கிழக்கு சரகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பெரியகடை, ஓதியஞ்சாலை, உருளையன் பேட்டை, முத்தியால்பேட்டை ஆகிய 4 போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு வாக்குப்பதிவையொட்டி புதுவை முழுவதும் மதுபான கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டது.

    ஆனால், நேற்று மாலை வெங்கட்டா நகரில் உள்ள 2 மதுபான குடோன்களை மட்டும் அடைக்க மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுவையில் அனைத்து மதுபான கடைகளும் வழக்கம்போல இயங்கின.
    ×