search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் வரையறை பணி முடிந்தது - ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல்
    X

    வாக்காளர் வரையறை பணி முடிந்தது - ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல்

    வாக்காளர் வரையறை பணி முடிந்துள்ள நிலையில் ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடைந்தது.

    அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

    தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    இட ஒதுக்கீடு பிரச்சினையை சரி செய்த பிறகும் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதுபற்றி கோர்ட்டில் தமிழக அரசு கூறும்போது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதாகவும், அந்த பணிகள் நிறைவுற்றதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தபோவதாகவும் அறிவித்தது.

    அதன்பிறகும் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது.

    2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு என வகைப்படுத்தி பிரிக்கப்பட்டது.

    இதிலும் இட ஒதுக்கீடு படி வார்டுகள் பிரிக்கப்பட்டது. அதன்பிறகும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனதால் தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.

    கடந்த 4-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமி‌ஷன் சார்பில் பதில் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


    அதில் வாக்காளர் பட்டியல் முழுமையாக தயார் செய்ய வேண்டியது. உள்ளது. இந்த நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முழுமை பெறவில்லை. எனவே உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று கூறி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    ஏற்கனவே, பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர்பட்டியல் சட்டமன்றம் வாரியாக தயார் நிலையில் உள்ளதால் அதை வார்டு வாரியாக பிரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலை பிரித்து சரிபார்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராகிவிடுவோம்.

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த மாதம் சட்டசபை கூடும். எனவே ஜூன் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது.

    மானியக்கோரிக்கை மீதான விவாதம் 25 நாட்கள் நடைபெறும் என்பதால் ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் தொடங்கிவிடும். எனவே, ஆகஸ்டு மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×